பிஞ்சு நூல் அறிமுகம்: குறும்புக்காரன் குவேரா
நூல் பெயர்:
குறும்புக்காரன் குவேரா
ஆசிரியர் : பாமரன்
வெளியீடு :
நாடற்றோர் பதிப்பகம்,
66, வேங்கடசாமி சாலை கிழக்கு,
இரத்தின சபாபதிபுரம், கோவை – 641002.
பக்கங்கள் : 66 | விலை : ரூ. 70
உலகம் போற்றும் ஒரு போராளியின் குறும்புத்தனமான செயல்களையும் மனித நேயத்தையும் குழந்தைகளுக்கான வடிவில் பெரிய எழுத்துகளில் சுவாரசியமாகச் சுவைபடத் தந்துள்ளது எழுத்தாளர் பாமரனின் குறும்புக்காரன் குவேரா. அழகான ஓவியங்களில் அட்டையும் உள்பக்கங்களும் கவர்கின்றன. பிஞ்சுகள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்.
புத்தகத்திலிருந்து ஒரு சிறிய பகுதி இதோ:
ஆர்ப்பரித்தபடி சுழித்தோடும் ஆறு…
வானத்திற்கு வணக்கம் வைத்துவிட்டு நீருக்குள் முங்கும் மீன்கள்…
அவ்வப்போது தென்படும் ஓரிரு முதலைகள்…
இவைகளுக்கு நடுவே குவேராவையும் அல்பர்ட்டோவையும் சுமந்தபடி மறுகரையை நோக்கி நகர்கிறது ஒரு படகு.
படகு கரையை நெருங்க நெருங்க…
யார் வருகிறார்கள் என்கிற ஆச்சர்யத்தோடு தங்களது குடியிருப்புகளில் இருந்து வெளியே வருகிறார்கள் தொழுநோயால் தாக்குண்ட அந்த நண்பர்கள்.
படகு கரையைத் தொட்டதும் ஓடிச் சென்று அவர்களை அணைத்துக் கொள்கிறார் குவேரா.
அவர்களோ அதிர்ந்து போகிறார்கள்.
இதுவரையிலும் எவரும் அவர்களை மனிதர்களாகக்கூட மதித்ததில்லை. அவர்களைத் தொட்டால் எங்கே தங்களுக்கும் நோய் தொற்றிக் கொள்ளுமோ என்கிற அச்சத்தில் ஊருக்கு வெளியே ஒதுக்கி வைத்திருக்கிறார்கள்.
ஆனால்…
குவேராவோ…
கையுறைகூட அணியாது அவர்களை உற்சாகத்தோடு அணைப்பதையும்…
பேரன்போடு கட்டித்தழுவுவதையும் கண்டு மலைத்துப்போய் நிற்கிறார்கள் மக்கள்.
வியப்பின் உச்சத்தில் இருந்து விடுபட நெடுநேரம் ஆகிறது அவர்களுக்கு.
தொழு நோய் என்பது பிறருக்கு தொற்றும் நோய் அல்ல என்பதை மருத்துவர்களுக்கும் புரிய வைக்கிறார் நமது குவேரா.