பிஞ்சுகளே, ஆசிரியர் தாத்தாவைப் பின்பற்றுங்கள்
சிகரம்
வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் தான் பாடம். சாதிக்கத் துடிக்கின்றவர்களுக்குச் சாதனை புரிந்தவர்கள் தான் முன்மாதிரி (Role model). இதை உணர்ந்து தான் பிள்ளைகளுக்குப் பெரியவர்கள் கதை சொல்வார்கள். கதையில் வரும் கதாபாத்திரங்களின் வீரம், அறிவு, சாதனை, பண்பு நலன்களைப் பிள்ளைகள் பின்பற்ற வேண்டும் என்பதே அதன் நோக்கம்.
பிள்ளைகளுக்கு மூடநம்பிக்கைக் கதைகளைப் பக்தியின் ஈடுபாட்டால் கூறுவது தப்பு. பிள்ளைகளுக்குத் தன்னம்பிக்கை ஊட்டக்கூடிய, வளர்க்கக்கூடிய, விழிப்பு தரக்கூடிய, சிந்தனையைத் தூண்டக்கூடிய, அறிவு வளர்க்கக்கூடிய கதைகளையே தேர்வு செய்து கூற வேண்டும்.
நாட்டுக்கு உழைத்தவர்கள், மக்களுக்குத் தொண்டாற்றியவர்கள், அறிவியல் அறிஞர்கள், அரசியலில் நேர்மையான தலைவர்கள், வாய்மையாளர்கள், வரலாற்று நாயகர்கள் பற்றிய சிறு சிறு நூல்களை பிஞ்சுகளுக்குத் தந்து படிக்கச் செய்வதன் நோக்கம் அதன் மூலம் ஊக்கம் பெறுவதோடு அவர்களைப் பின்பற்றி, பிள்ளைகள் வாழ வேண்டும் என்பதற்காகவும் தான்.
அதேபோல் நற்பண்புள்ளவர்களோடு பழகுதல், நன்றாகப் படிக்கக் கூடியவர்களோடு சேர்ந்து படித்தல், நன்றாக விளையாடக் கூடியவர்களோடு சேர்ந்து விளையாடுதல் போன்றவை அவர்கள் மூலம் ஊக்கம் பெறவும், கற்கவும், சாதிக்கவுமேயாகும்.
எனவே, வளருகின்ற பிள்ளைகள் தங்கள் வாழ்வில், சிறக்க, சாதிக்க, உயர, தொண்டு செய்ய, யாராவது ஒருவரை அல்லது சிலரைத் தங்கள் வழிகாட்டியாக, முன்மாதிரியாகக் கொண்டு வாழவேண்டியது வாழும்முறைகளில் ஒன்று.
நம் பிஞ்சுகள், பிள்ளைகள், மாணவர்கள் பலரைத் தேடி அலைய வேண்டிய தேவையில்லை. நமது ஆசிரியர் தாத்தாவின் வாழ்வை நன்கு அறிந்து வாழ்ந்தாலே வாழ்வும், நற்பண்போடு, நல்நோக்கோடு, நல் முயற்சியோடு, கல்வி, அறிவு, தொண்டு, நிர்வாகம், ஆளுமை என்று அனைத்திலும் சிறந்து விளங்கலாம். காரணம் பிள்ளைகள் பின்பற்ற வேண்டிய அனைத்தும் அவரிடம் ஒரு சேர இருந்தமையே!
* ஆசிரியர் தாத்தா அதிக வசதியில்லாத எளிய குடும்பத்தில் பிறந்தவர். அப்படியிருந்தும் வயதில் கல்வியில் கருத்துன்றி நின்றார். அவரது கல்வித் திறத்தைப் பாராட்டி கல்வி அதிகாரி அவருக்குச் சிறப்பு உதவித் தொகை வழங்கினார். ஒடுக்கப்பட்ட எளிய சமுதாயப் பிரிவு பிள்ளைகள் படிக்கவே கூடாது என்று இருந்த சமூகச் சூழலில், அரிதாய்க் கிடைத்த கல்வி வாய்ப்பைப் பயன்படுத்திச் சிறப்பாகக் கற்றார். எப்படிப்பட்ட தடைகள் இருந்தாலும், எல்லாவற்றையும் தகர்த்து, முயன்றால் சாதிக்க முடியும் என்பதற்கு ஆசிரியர் தாத்தா சிறந்த எடுத்துக்காட்டு.
* பகுத்தாய்ந்து, சரியானதைத் தேர்வு செய்து பின்பற்றுவதில் அவர் திறமை வாய்ந்தவர். தொடக்கக்கல்வி பயிலும் காலத்திலே அறிவு வழி வாழ வேண்டும்; மூடநம்பிக்கைகளை முற்றாக ஒழிக்க வேண்டும்; மக்களுள் இழிவு, உயர்வு இல்லை என்பதைத் தெளிவாக உணர்ந்து, அதன்படியே வாழ்ந்தார். அதனால், அச் சிறு வயதிலே தந்தை பெரியார் கொள்கைகளை ஏற்று, பின்பற்றி நடந்தார். மூடநம்பிக்கைகள் மிகுந்த காணப்பட்ட அக் காலத்திலே, மிகத் தெளிவாக அறிவின் வழி வாழ அவர் முடிவு செய்தது பிஞ்சுகள் பின்பற்ற வேண்டிய அறிய செயலாகும்.
* பள்ளிப் பருவத்திலேயே பல்துறை ஆற்றல் களை வளர்த்துக் கொண்டார். பள்ளியில் நடத்தப்பட்ட சாலமன் நாடகத்தில் சாலமனாக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். பாடுவதிலும் தன் திறமையைக் காட்டியவர் ஆசிரியர். நாகூர் ஹனிபாவுடன் சேர்ந்து இசைப் பாடல்களைப் பாடியுள்ளார்.
* பத்து வயதிலேயே மேடைப் பேச்சில் சிறந்து விளங்கினார். தந்தை பெரியாரின் கொள்கைகளைத் தெளிவாக மக்கள் மத்தியில் எடுத்து மக்களைச் சிந்திக்கச் செய்யும் வல்லமைப் பெற்றிருந்தார். இந்த இளம் வயதிலேயே பல பகுதிகளுக்கும் சென்று சிறப்புரையாற்றியுள்ளார்.
* பத்தரை வயதில் திருமண நிகழ்வில் வாழ்த்துரை வழங்கி அனைவரும் வியக்கும்படிச் செய்தார்.
* பதினொரு வயதில் நாகை வெளிப் பாளையத்தில் பொதுக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கி தெளிவான கருத்துகளைக் கேட்போரை ஈர்க்கும் வகையில் எடுத்து வைத்தார்.
* அந்த வயதில் பெரியாரைச் சந்தித்துத் தான் அவரது தொண்டர் என்பதைப் பெரியாரே பெருமை கொள்ளும் வகையில் அறிவித்தார். ஒரு மாபெரும் தலைவரைப் பதினொரு வயதிலேயே சந்தித்துப் பேசும் அளவிற்கு அவர் தெளிவும், துணிவும், ஆற்றலும் பெற்றிருந்தார்.
ஓர் இயக்கத்தில் மாநாடு என்பது வரலாற்றில் முதன்மையானது. அப்படிப்பட்ட சிறப்புக்குரிய மாநாட்டில் கொடியேற்றம் சிறப்பைத் தமது 12ஆம் வயதில் பெற்றார்.
* 14ஆம் வயதில் (1947) தந்தை பெரியாரின் படத்தைத் திறந்து வைக்கும் தகுதியும், திறமையும் அவர் பெற்றிருந்தார். அந்தச் சிறப்பை பெரும் அளவிற்கு அவர் இயக்கத் தொண்டர்கள் உள்ளத்தில் உயர்ந்த இடத்தைப் பெற்றிருந்தார்.
* மாணவர் பருவத்தில் மற்ற மாணவர்களைப் போல, படிப்பதில் மட்டும் தன்னை முடக்கிச் சுருக்கிக் கொள்ளாமல், அந்த வயதிலேயே ‘முழக்கம்’ ‘புதுமை’ என்ற இரு பத்திரிகைகளை நடத்தினார் என்றால் அவரது நெஞ்சுறுதியும், அறிவுத்தெளிவும் பிஞ்சுகள் நெஞ்சில் கொள்ள வேண்டிய, பின்பற்ற வேண்டிய செயலாகும்.
* பள்ளிப் பருவத்திலே படிப்பதோடு இவ்வளவு பணிகளையும், பயணங்களை மேற்கொண்ட ஆசிரியர் தாத்தா படிப்பிலும் முதன்மையான நிலையில் இருந்ததால், அவருக்குக் கல்வி அலுவலர் சிறப்பு உதவித்தொகை வழங்கினார். இது கல்வித்துறையின் மிகச் சிறந்த பரிசும், பாராட்டும் ஆகும்.
* 1948ஆம் ஆண்டு திருவாரூரில் கலைஞர் நடத்திய மாநாட்டில் சிறப்புரையாற்றினார் என்பது அவரின் இளம் வயதுச் சாதனைகளில் எல்லாம் சிகரம் போன்றது. கலைஞரும் இளம்வயதிலேயே எழுச்சியும், போர்க்குணமும், இனப்பற்றும், மொழிப்பற்றும், பேச்சு திறமையும் கொண்டவர். அப்படிப்பட்டவரே தாம் நடத்திய மாநாட்டில், ஆசிரியரைச் சிறப்புரையாற்றச் செய்தார் என்றால் அவரின் தகுதியும், திறமையும், கொள்கைத் தெளிவும், அறிவு நுட்பமும், பேச்சாற்றலும் எப்படிப்பட்டது என்பதை புரிந்து கொள்வதோடு, அப்படித் தாங்களும் முயன்று, உழைத்து, சிறப்புகளைப் பெற பிஞ்சுகள் உறுதி கொள்ள வேண்டும்.
* அச் சிறு வயதிலேயே அண்ணாவிடம் தூது சென்ற அதிசயச் சிறுவனாகவும் நமது ஆசிரியர் தாத்தா விளங்கினார். தந்தை பெரியாருக்கும் அண்ணாவிற்கும் இடையே சிறு கருத்து வேறுபாடு வந்தபோது அண்ணாவைச் சமாதானப்படுத்த தூது சென்றவர்களில் சிறுவனான ஆசிரியர் தாத்தாவும் சென்றார் என்பது அனைவரையும் புருவம் உயர்த்தச் செய்யும் அரிய செயலாகும். அந்த வயதிலேயே ஆசிரியர் பெற்றிருந்த அறிவு முதிர்ச்சியை அனுபவ முதிர்ச்சியை அது காட்டுவதாய் அழைத்தது என்பத்தோடு, பிஞ்சுகள் பின்பற்ற வேண்டிய துணிவையும், தெளிவையும் அது உணர்த்துவதாய் அமைந்தது.
* பள்ளிப் படிப்பு முடிந்து, பல்கலைக்கழகக் கல்வி பயின்றபோது, முதுகலைப் படிப்பில் வழங்கப்படும் தங்க மடல்கள் எல்லாவற்றையும் ஆசிரியர் தாத்தா பெற்றார் என்பது அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றில் சாதனையாகும். பேராசிரியர்கள், துணைவேந்தர் மத்தியில் அவர்கள் அனைவரும் வியக்கும் வண்ணம் உரையாற்றிய பெருமைக்கும் உரியவர் ஆசிரியர் என்பவை பிஞ்சுகள் பின்பற்றிச் சாதிக்க வேண்டிய சாதனைகள் ஆகும். படித்து முடித்த பின் வழக்கறிஞராகப் பணிபுரிந்த போது, பொய் சொல்லி வழக்காட மறுத்த நேர்மைக்குரியவர். வாழ்க்கையில் நேர்மையாக வாழ வேண்டும் என்ற உயரிய உறுதியை ஆசிரியரிடம் இருந்து பிஞ்சுகள் பின்பற்ற இது வழிகாட்டக் கூடியதாகும்.
* எளிமை, இனிமையாகப் பழகுதல், சமூக நீதி, சமத்துவம் இவற்றிற்காகத் தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவரும் ஆசிரியர் தாத்தாவின் இந்த அரிய இலக்குகளையும், தொண்டையும், உறுதியையும் பிஞ்சுகள் பின்பற்றி நாட்டிற்கு உழைக்க வேண்டியது கட்டாயமாகும்.
“ஊருணி நீர் நிறைந்தற்றே” என்ற குறளுக்கு ஏற்பத் தாம் கற்றவற்றை இவ்வுலகுக்குப் பயன்பட வாழ்வியல் சிந்தனைகளாக வழங்கி வருபவர் ஆசிரியர் தாத்தா. ஊரின் நடுவில் உள்ள குளம் முதலில் பல வகையிலும் நீரைப் பெற்று தன்னை நிரப்பிக் கொள்ளும். பின் அந் நீரை ஊர் மக்களுக்கு வழங்கி அவர்களை வாழ்விக்கும். அதே வகையில் தான் பல வகையில் படித்து, அனுபவித்து, அறிந்து பெற்ற அரிய கருத்துக்களை அவர் வாழ்வியல் சிந்தனைகளாகத் தொடர்ந்து வழங்கி வருகிறார். இந்த அரிய, உயரிய பணியைப் பிஞ்சுகள் பின்பற்றி தங்கள் வாழ்விலும் அதைச் செய்து உலக மக்களுக்கு விழிப்பூட்ட வேண்டும்.
சுயநலம், சபலம், பதவி நாட்டம் என்று எந்த ஒன்றிலும் நாட்டம் இல்லாமல் பெரியார் பணி முடிக்கும் ஒரே தொண்டைத் தலை மேல் ஏற்று, அதையே தன் வாழ்நாள் பணியாக ஆற்றி மக்களுக்குத் தொண்டு செய்யும் அவர் வாழ்க்கை முறைகள் அத்தனையும் பிஞ்சுகள் படித்தறிந்து, அவற்றைப் பின்பற்றி வாழ்வில் சாதிக்க வேண்டும், மக்களுக்குப் பயன்பட வேண்டும். சிறந்து வாழ வேண்டும்.<