அறிவின் விரிவு – 5: இரண்டாம் நோபல் பரிசு
செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு கொடுத்த இன்ப அதிர்ச்சியிலிருந்து கணினி உலகம் மீள்வதற்குள் மறுநாள் மற்றுமோர் அதிர்ச்சி. அடுத்து அறிவிக்கப்பட்ட வேதியியலுக்கான நோபல் பரிசும் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளர்களுக்குக் கொடுக்கப்பட்டது. இந்த முறை ஆல்பா போல்டு என்ற மென்பொருளை உருவாக்கக் காரணமாக இருந்த டெமிஸ் ஹபீஸ், ஜான் ஜம்பர் ஆகிய இருவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது.
‘AlphaFold’ செயற்கை நுண்ணறிவு மென்பொருள். இதன் வேலை புரதங்களின் வடிவங்களையும் அதன் கட்டமைப்பையும் ஆராய்ச்சி செய்வது. அதன் மூலம் புதிய புரதங்களை உருவாக்குவதற்கான சாத்தியக் கூறுகளை விளக்க முனைவது.
நம் உடல் முழுவதும் பல்வேறு புரதங்கள் உள்ளன. ஆனால், நம் உடல் தனக்குத் தேவையான புரதத்தை எவ்வாறு உருவாக்கிக் கொள்கிறது என்பது மிகப்பெரிய மர்மம். புரதத்தின் கட்டுமானம் என்ன? அது எப்படி உடலில் உருவாகிறது என்பதை நாம் புரிந்து கொண்டால் பல்வேறு நோய்களுக்கான மருந்துகளை மிக எளிதில் கண்டுபிடித்து விடலாம்.
இந்த ஆராய்ச்சிகளில் கணினியின் பயன்பாடு இருந்தாலும் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு மென்பொருளைக் கொண்டு புரதத்தை உருவாக்கும் முயற்சி மிகப் பெரிய வெற்றியைத் தந்துள்ளது. இதன் மூலம் புதிய மருந்துகள் கண்டுபிடிப்பதில் மிகப்பெரிய பாய்ச்சல் உருவாகியுள்ளது.
நாம் கோவிட் காலத்திலேயே பார்த்தோம் அல்லவா? ஒரு வைரஸுக்குத் தடுப்பூசி கண்டுபிடிப்பதெல்லாம் பல ஆண்டுகளாக நடக்கும் ஆராய்ச்சிகள். சில பத்து ஆண்டுகள் ஆராய்ச்சிக்குப் பின் கூட சில வைரஸ்களுக்கு நம்மால் சரியான தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், அண்மைக்கால தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாகத்தான் கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பு மருந்தை மிக விரைவில் எளிதாகக் கண்டுபிடிக்க முடிந்தது.
புற்றுநோய் உட்பட பல உயிர்க்கொல்லி நோய்களுக்கான மருந்துகளைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகளில் இந்தச் செயற்கை நுண்ணறிவு மென்பொருள் மிகப் பெரிய உதவியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவுத் துறை என்பது கணினியின் விளையாட்டுத்துறை அல்ல; அது கணினித் துறைக்கு நோபல் பரிசு பெற்றுத் தரக்கூடிய மிகவும் முக்கியமான துறை என்பதை உலகிற்கு எடுத்துக்காட்டி விட்டது.
நாமும் இனிவரும் காலங்களில் செயற்கை நுண்ணறிவு பற்றி மிகச் சுவையான தகவல்களை மிகவும் கவனமாகவும் அதே நேரம் அதன் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டு கற்றுக்கொள்ளப் போகிறோம்.
(தொடரும்)