பறவைகள் அறிவோம் – அன்றில் (GLOSSY IBIS)
உயிர் வாழ்வனவற்றுள் பறவைகள் தொன்றுதொட்டே மக்களை அதிகம் கவர்ந்திழுத்து வருகின்றன. பறவை விண்ணில் பறக்கும் போதும், மண்ணில் தத்தித் தத்தித் தரையில் நடக்கும் போதும், அது மரக்கிளைகளில் அங்குமிங்கும் தாவித் தாவி நகரும்போதும், அதன் நீண்ட வளைந்த அலகினால் இறக்கைகளைக் கோதி தன்னைத்தானே அழகுபடுத்திக் கொள்ளும் போதும், அதைப் பார்க்கும் நம் மனது மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்திக்கொண்டே அதன் பின் செல்லும்.
இந்தியாவில் எண்ணற்ற பறவை இனங்கள் இருப்பதற்கு இங்கு பல்வேறுபட்ட தட்பவெப்பநிலை நிலவி வருவது முக்கியக் காரணம் அதனால்தான் வெளிநாட்டுப் பறவைகளும் அதிகமான அளவில் வருகை தருகின்றன. அதிகமாக மழை பொழியும் மழைக்காடுகளிலும், சதுப்பு நிலக்காடுகளிலும், அடர்த்தியான புதர்க்காடுகளிலும், சாகுபடி செய்யப்பட்டிருக்கும் விளைச்சல் நிலங்களிலும் வறட்சியான கரிசல்காடுகளிலும், பனிபெய்து கொண்டிருக்கும் இமயமலைப் பிரதேசங்களிலும், வறண்ட மணற்பாங்கான பாலைவனங்களிலும்கூட பறவைகள் வாழுகின்றன. இப்படி நம் நாட்டில் மாறுபட்ட சூழ்நிலைகள் நிலவுவதாலேயே வித, விதமான பறவைகள் வாழத் தகுந்ததாக இருக்கிறது.
பறவைகளின் வாழ்க்கையில் வலசை போதல் என்னும் நிகழ்வும், அவற்றின் வாழ்க்கை முறையும் மனிதனின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் இருக்கின்றன. பறவைகள் ‘வலசை போதல்’ என்பது, ஒரு குறிப்பிட்ட காலத்தில் அவை வசிக்கும் இடத்தைவிட்டு மற்றொரு புது இடத்திற்குச் சென்று, சில மாதங்கள் அங்கு இருந்துவிட்டு மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வருவதைக் குறிப்பது. பறவைகள் நடத்தும் இப்பயணம் பெரும்பாலும் வடக்கிலிருந்து தெற்குப் பகுதியை நோக்கியும், தெற்கிலிருந்து வடக்கு நோக்கியும் செல்வதாகவே இருக்கின்றன. வலசை செல்லும் சில பறவைகள் அங்கு நிலவும் தட்பவெப்ப நிலையையும், சூழ்நிலைகளையும் ஆராய்ந்து அங்கேயே தங்கி விடுவதும் உண்டு. வலசை செல்லச் சில பறவைகள் இரவு நேரத்தையும், சில பறவைகள் பகல்பொழுதையும் தேர்வு செய்கின்றன. புழு, பூச்சிகளைத் தின்னும் பறவைகள் இரவு நேரத்திலும், இராசாளி, உழவாரக்குருவி, தகைவிலான் குருவி முதலியன பகல் நேரத்திலும் வலசை செல்கின்றன. இரவில் பயணம் மேற்கொள்ளும் பறவைகள் மிகஉயரத்தில் பறந்து செல்லுகின்றன.
பறக்கும் உயரம் இனத்திற்கு இனம் வேறுபடும்.
பொதுவாகப் பறவையினங்களில் பல கூட்டங் கூட்டமாகவே வலசை போகின்றன. இருப்பினும் சில இனங்கள் தனித்தனியாகப் பறந்து செல்கின்றன. பறவைகள் வலசை போவதற்குப் பல நாட்களுக்கு முன்பே தங்கள் பயணத்திற்கேற்ப உடலைத் தயார்படுத்திக் கொள்கின்றன. அதிகமாக உண்டு உடலில் கொழுப்பின் அளவைக் கூடுதலாக்கிக் கொள்கின்றன. இறக்கை அசைவிற்கு உதவும் மார்புத் தசைகளில் கொழுப்பு கூடுதலாக ஓர் அடுக்கு சேர்கிறது. பல நாட்கள் பயணம் செய்யும்பொழுது அப்பறவைக்கு மிக அதிக அளவு சக்தி தேவைப்படுகிறது. வழியில் போதிய உணவு கிடைக்காமல் போகலாம்; அல்லது இரை பிடிக்க நேரமில்லாத காரணமாகவும் இருக்கலாம். ஒரே வெறியில் இலக்கு நோக்கிப் பயணம் செய்யும்பொழுது அவற்றைச் சோர்ந்துவிடாமல் காப்பது உடலில் சேர்த்து வைத்துள்ள கொழுப்பு மட்டும்தான். அந்த வகையில் வலசை செல்லும் பறவைகளில் ஒன்று தான் அன்றில்.
அன்றில் பறவை அய்ரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவின் அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் உள்ள கரீபியனிலும் ஆங்காங்கே காணப்படுகின்றது. இவை இணைச் சேர்க்கை காலங்கள் அல்லாத பிற காலங்களிலும் பரவலாக இடம் பெயர்கின்றன. அன்றில் நெய்தல் நிலத்தில் வாழும் பறவையினமாகும்.கடலும் கடல் சார்ந்த இடங்களிலும் அதிகமாகக் காணப்படுகின்றன; சதுப்பு நிலங்களிலும் கூட்டமாக இரைதேடக் கூடியவை. மீன், தவளை மற்றும் பிற நீர்வாழ் சிறு உயிரினங்களையும் சில சமயங்களில் பூச்சிகளையும் இரையாக உட்கொள்கின்றன.
இப்பறவை 55-60 செ.மீ. நீளமும் 85-105 செ.மீ. வரை இறக்கை வீச்சளவும் கொண்டது. சுமார் 3 கிலோ கிராம் எடை வரை வளரும், இதன் தலையின் மேல்பகுதி சிவப்பு நிறம் கொண்டது. பருவம் அடையாத இளம் பறவைகள் பழுப்பு நிறத்திலும், பருவமடைந்த பறவைகள் செந்நிற உடலுடன், ஒளிரும் கரும்பச்சை இறக்கைகளையும் கொண்டிருக்கும். இப் பறவையின் அலகு நெற்கதிர்களை அறுக்கப் பயன்படும் பன்னரிவாளைப் போல வளைந்து இருப்பதால் அரிவாள் மூக்கன் என்ற பெயரும் இதற்கு உண்டு. இதன் அலகு வளைந்திருப்பது பற்றி “கொடுவாய் அன்றில், மடிவாய் அன்றில்” என்று தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது. நீண்ட கழுத்தும், நீண்ட கால்களும் உடையது.
அன்றில் காதலுற்று தனது துணையுடன் ஒரு முறை இணைசேர்ந்துவிட்டால் அதன்பின் வாழ்நாளில் மற்ற எந்தப் பறவையுடனும் இணைசேராது. ஏதேனும் சில காரணங்களால் தனது துணையை இழந்துவிட்டால் உடனே அந்தப் பறவையும் கூடவே இறந்துவிடும் குணத்தைப் பெற்றது. மேலும் தன் துணையுடன் எப்பொழுதும் சேர்ந்தே இருக்கும். ஏன், தூங்கும்போது கூட ஒன்றின் மீது மற்றொன்று பார்வையை வைத்தபடியே உறங்கும்.
இந்நிகழ்வைக் கூட நளவெண்பாவில் “ஒரு கண் ஆர்வத்தால் அன்றில் இன்றுணை மேல் வைத்துறங்கும்”
எனும் வரிகளின் மூலம் அறியலாம். பிரிய நேரிடின் உடனே கூவி இணைப் பறவையை அழைக்கும். இதனை அகவல் என்றும், ஆணும், பெண்ணும் சேர்ந்திருக்கும் போது எழுப்பும் குரலை உளறல் என்றும், பெண் கருவுற்றிருக்கும் போது எழுப்பும் குரலை நரலல் என்றும் அழைப்பர். இவை கூடுகளை பெண்ணை என்ற பெண் பனை மரத்தில் சிறு, சிறு குச்சிகளைக் கொண்டு நேர்த்தியாகக் கட்டி முட்டையிடுகின்றன. பனை மரங்களில் தங்களுடைய வாழ்க்கையைத் தொடங்குவதால் பனங்கிளி என்ற மற்றொரு பெயரும் உண்டு. பொதுவாக காதலிக்கு எடுத்துக்காட்டாக புறாக்களையும், காதல் பறவைகளையும் (லவ் பேர்ட்ஸ்) சொல்வார்கள்.
ஆனால், அதையும் தாண்டி காதலின் இலக்கணத்திற்கு அன்றும் இன்றும் எடுத்துக்காட்டிப் போற்றப்படும் பறவை அன்றில் தான்.
இந்தப் பறவை இப்பொழுது அழிவின் விளிம்பில் இருப்பதாகக் கருதப்படுகிறது. இந்நிலையை மாற்றி இப்பறவையை நாம் மீட்டெடுக்க வேண்டும். பறவைகளைப் போற்றிப் பாதுகாத்திட வேண்டும். இன்றைய காலகட்டத்தில் உயிர் வாழ்வதற்காகப் பறவைகள் எப்பொழுதும் போராட வேண்டியதிருக்கிறது. குஞ்சு பொரிக்கும் பருவத்தில்தான் அதிக ஆபத்தைச் சந்திக்கின்றன பாம்பு, எலி, அணில், ஓணான், குரங்கு மற்றும் பிற பறவைகளோடு மனிதர்களும்கூட பறவைகளின் முட்டைகளைக் களவாடுவதுண்டு. இதை நாம் மனதிற் கொண்டு மேற் குறிப்பிட்ட ஆபத்துகள் நேராவண்ணம் பறவைகளுக்குத் தேவையான பாதுகாப்பை ஏற்படுத்தி தர வேண்டும்.
அன்றில் பறவையைப் பாதுகாப்போம்!
தென்றல் காற்றைச் சுவாசிப்போம்!