அறிவியல் மனப்பான்மை: ஜோதிடம் அறிவியலா?
(சூரியக் குடும்பம்-முறையே புதன் (Mercury), வெள்ளி (Venus), புவி (Earth), செவ்வாய் (Mars), வியாழன் (Jupiter), சனி (Saturn), யுரேனஸ் (Uranus), நெப்டியூன் (Neptune). முன்பு புளூட்டோ (Pluto) – பார்வைக்காக ஒரே நேர்கோட்டில் இருப்பது போல கொடுக்கப்பட்டுள்ளது, ஆனால் கோள்கள் ஒவ்வொன்றும் அவற்றுக்கென்று தனித் தனிச் சுற்று வட்ட பாதையில் இயங்கிக்கொண்டிருக்கும்)
நம்மில் பலரும் – ஜோதிடத்தைத் தீவிரமாக நம்பிக்கொண்டு, அதனை நம் முன்னோர்கள் அறிவியல் ஞானத்துடன் கணித்திருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். சிலர் ஜோதிடம் ஜாதகம் எல்லாம் அறிவியல் என்பார்கள். உண்மையில் ஜோதிடத்திற்கும் அறிவியலுக்கும் என்ன இணைப்பு இருக்கிறது என்று அறிவியலின் உதவி கொண்டு ஆராய்ந்து பார்த்தால், நிச்சயமாக ஒன்றுமில்லை. ஜோதிடம் என்பது ஒரு வகையான நம்பிக்கை மட்டுமே! வெறும் நம்பிக்கை அறிவியலாக முடியாது. எந்த அறிவியல் கோட்பாடுகளுக்கும் உடன்பட்டு வராத ஓர் ஆதிகால நம்பிக்கையை புதுப்பித்து புதுப்பித்து ‘அறிவியல்’ என்று சொல்வது அண்டப்புளுகு ஆகாசப்புளுகு அன்றி ஒன்றுமில்லை.
ஜோதிடத்தின் மீது நாம் கொண்டுள்ள விருப்பு வெறுப்புகளையும் நம்பிக்கைகளையும் ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு, அதனை வேறு கோணத்திலிருந்து ஆராய்ந்து பார்ப்போம்.
உதாரணத்திற்கு நம் வீட்டில் பலர் காலையில் எழுந்து முதன் முதலில் நாள்காட்டியில் நமது இராசிக்கான பலனைப் பார்க்கிறார்கள். பின்பு, தொலைக்காட்சியில் விரிவாக இராசி பலனைப் பார்க்கிறோம். நாள்தோறும் அப்படி என்ன தான் சொல்கிறார்கள்? குறிப்பிட்ட இராசி என்று நம்பக்கூடிய ஒரு நபருக்கு லக்கி நிறத்தையும், லக்கி எண்களையும், அவர்கள் கும்பிடவேண்டிய கடவுள்களையும், இன்னும் சொல்லப்போனால் இராசியான திசை என்றும் கூட சொல்வார்கள். மிஞ்சி மிஞ்சிப் போனால் இவர்களெல்லாம் வேறு என்ன சொல்லப் போகிறார்கள்? ஒருவரின் வேலைவாய்ப்பு, வெளிநாட்டுப் பயணம், கல்வி, திருமணம், குழந்தைப் பேறு, கணவன் மனைவிக்கு இடையேயான சச்சரவுகள், அவற்றின் தீர்வு, உடல்நலக் கோளாறுகள், வைத்தியச் செலவுகள், கடன் தொல்லைகள், சொத்து வாங்குவது, விற்பது, வீடு கட்டுவது இன்னும் நான் இங்கு குறிப்பிடாமல் விட்ட பல “இதுகள்” இவற்றை எல்லாம் வரிசையாக அடுக்கிவிட்டு அதற்கு, “இப்பொழுது செய்யாதீர்கள், அப்பொழுது செய்யுங்கள்” என்று நாள் குறித்துச் சொல்லிவிட்டு கிளம்பிப் போய்விடுவார்கள்.
இதனைப் பார்த்துக் கொண்டிருக்கும், நம்பும் அந்த பரிதாபத்திற்குரிய “நாம்”, நமக்குச் சொல்லப்பட்ட நாட்களில், சொல்லப்பட்ட “லக்கி” கடவுள்களின் கோயில்களுக்கு சென்று, தனது பொன்னான நேரத்தையும் பணத்தையும் விரயம் செய்துவிட்டுத் தத்தமது பணிகளில் தொய்வடைய விட்டுவிடுகிறோம்.
இதில் நாம் நம் பகுத்தறிவைக் கொண்டு யோசித்துப் பார்க்க வேண்டும். இந்திய மக்கள்தொகை சுமார் நூற்று முப்பத்தைந்து கோடிகளுக்கு மேல் இருக்கிறது. இதில் ஜோதிடத்தை நம்புவோர் அய்ம்பது கோடி மக்கள் என்றே வைத்துக்கொள்வோம். மொத்தம் பன்னிரண்டு இராசிகள் என்று சொல்லும் பட்சத்தில், இந்த அய்ம்பது கோடி மக்களில் சராசரியாக நாலரைக் கோடி மக்கள் ஒரே மாதிரியான இராசிகளைக் கொண்டிருக்க வாய்ப்புகள் இருக்கிறதல்லவா? நாலரைக் கோடி மனிதர்களில் விவரம் தெரியாத குழந்தைகளைக் கூட விட்டுவிட்டுக் கணக்கிட்டால் ஒரு இராசிக்கு மூன்று கோடி மக்கள் என்று நினைத்துக்கொள்ளுங்கள். இந்த 3 கோடி மக்களில் மேலே சொன்ன அனைத்துப் பிரச்சினைகளும் அடங்கி விடும். இப்பொழுது இந்த ஜோதிடக் கணிப்பைக் கேட்போர் அவரவருக்கு பொருந்தும் பிரச்சினைகளை எடுத்துக்கொண்டு ‘நமக்குத்தான் சொல்கிறார், ச்ச….. என்ன துல்லியமாக சொல்கிறார்’ என்று நினைக்கலாம். ஆனால், அந்த மனிதர் எவ்வளவு சாதுரியமாக பொத்தாம்பொதுவாக அனைத்தையும் சொல்லிவிட்டு நழுவி விடுகிறார் என்பதை ஆராய்ந்து பார்த்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.
இதில் என்ன தான் கற்றுக்கொள்வது? பதில் மிக எளிது. முதலில், பிரச்சினைகளும், அவலங்களும், தோல்விகளும், துயரங்களும், பிரிவுகளும், ஏமாற்றங்களும், உடல் உபாதைகளும் இல்லாத வாழ்வு என்று ஒன்று இல்லவே இல்லையே! உங்களுக்கு உடல் என்று ஒன்று இருந்தால், அதற்கு வயதாகும்பொழுது அல்லது உறுப்புகள் செயல் இழக்கும்பொழுது நோய் வருவது இயற்கை. இதற்கு நாம் மருத்துவரிடம் செல்ல வேண்டுமே அன்றி ஜோதிடரிடம் தீர்வு காண இயலாது.
இரண்டாவது தோல்விகள் என்று இருந்தால் வெற்றிகள் என்று ஒன்று உண்டு. ஏன் தோல்வியுற்றோம், நமது எந்தச் செயல்பாடுகளை மாற்றி அமைத்தால் வெற்றியடைய முடியும் என்று பகுத்தறிவோடு சிந்திக்காமல், எதிர்மறையான எண்ணங்களை வளர்த்துக்கொண்டு, மாற்று வழிகளில் முயற்சிக்காமல் நம்மைத் தாண்டிய ‘சர்வ வல்லமை படைத்த ஒரு சக்தி’ நமக்கு நடத்தித் தரும் என்று முடங்கியிருப்பது அறியாமையே தவிர வேறொன்றுமில்லை.
இவை எல்லாம் புரிந்தாலும் புரியாமல் இருப்பது போல இருப்பவர்களும் உண்டு. ஆனால் இந்த கட்டுக்கதைகளுக்கு ‘அறிவியல்’ என்று பெயர் சூட்டாமல் இருத்தலே போதுமானது. “நாசா விஞ்ஞானிகள் கூறினார்கள்” என்று தொடங்கி, “முன்னோர்கள் ஒன்றும் முட்டாளில்லை” என்று முடித்துவிடுவார்கள். நாம் கற்ற கல்விதனைப் பொருத்திப்பார்த்து தெளிவு பெறும் முயற்சியை இனி வரும் இளைய சமூகமாவது தொடரட்டும்.
சரி, இதுவரை நம் பகுத்தறிவுச் சிந்தனைகள் வாயிலாக ஆராய்ந்து பார்த்தாயிற்று. இனி அறிவியல் என்ற பெயரில் ஜோதிடம் சொல்லும் கட்டுக்கதைகளை உண்மையான அறிவியலின் துணைக்கொண்டு சிந்திப்போம். ஜோதிட சாத்திரப்படி சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், சனி, சுக்கிரன், குரு, ராகு, கேது என்று ஒன்பது கிரகங்கள் இருக்கின்றன. ஆனால், அறிவியல் ஆய்வின்படி இப்பொழுது எட்டு கிரகங்கள்: புதன் (Mercury), வெள்ளி (Venus), புவி (Earth), செவ்வாய் (Mars), வியாழன் (Jupiter), சனி (Saturn), யுரேனஸ் (Uranus), நெப்டியூன் (Neptune).
முன்பு புளூட்டோ (Pluto) என்பதும் கிரகம் என்று அழைத்தார்கள். இப்பொழுது புளூட்டோ கிரகங்களுக்கான வரையறையில் வரவில்லை. ஆதலால், அறிவியல் அதனைப் பகிரங்கமாக ஒத்துக்கொண்டு விட்டது. உண்மையை அறிவதும், பொய்களைக் களைவதும் அதனை ஒப்புக்கொள்வதும் அறிவியலுக்கே உரிய சிறப்பான பண்பல்லவா?
புளூட்டோ குட்டை ரக கிரகம் என்று அழைக்கப்படுகிறது. இப்பொழுது நமது சூரியக் குடும்பத்தில் ப்ளூட்டோவைப் போன்று சிறிய சிறிய குட்டை ரக கிரகங்கள் சீரிஸ் (Ceres), கரோன் (Charon), மேக் மேக் (Makemake), ஏரிஸ் (Eris) மற்றும் கூமஸ் (Haumes) ஆகியனவும் இருக்கின்றன. இன்றும் புளூட்டோ என்பது கோள் தானா இல்லையா என்று ஆய்வுகள் நடந்துக்கொண்டு இருக்கின்றன. இந்த முதல் கட்டத்திலேயே ஜோதிடத்திற்கும் அறிவியலுக்கும் என்ன ஒற்றுமை இருக்கிறது என்று தெரிந்து விட்டது.
சூரியன் ஒரு கிரகம் அல்ல. இயற்பியல் விதிப்படி சூரியன் என்பது ஒரு நட்சத்திரம் (Star). தன்னுள்ளே நெருப்புக் குழம்பை உமிழ்ந்து கொண்டே மிளிரும் ஒரு மிகப்பெரிய நட்சத்திரம். சந்திரன் என்பதுவும் கிரகம் அல்ல. சந்திரன் நமது பூமியின் துணைக்கோள். அனைத்துக் கிரகங்களும் அவற்றின் குறிப்பிட்ட நீள்வட்டப் பாதையில் (Elliptical orbit) சூரியனைச் சுற்றிக்கொண்டு தான் இருக்கின்றன.
ஆனால் அவை எந்தத் தனி மனிதருக்காகவும் தனித்தனியாகச் சுற்றுவதில்லை. அவை இயற்கையாகவே இயற்பியல் விதியின் படி சுற்றிக்கொண்டு இருக்கின்றன.
நமது பழங்கால வானவியல் கணிப்புகள் என்பவை முன்பொரு காலத்தில், அறிவியல் வளர்ச்சிகள் சாத்தியமில்லா காலகட்டத்தில், நமது வானவியலாளர்கள் ஆகாயத்தை மணிக்கணக்காக, நாட்கணக்காக, ஆண்டுக்கணக்காக ஆராய்ந்து அதன் மாற்றங்களைக் குறிப்பெடுத்து வைத்தவையே. நம் நாட்டில் மட்டும் அல்ல, உலகின் பல நாடுகளின் முந்தைய கால வானியல் அறிவு இந்த மட்டில் இருந்தவையே.
உலகம் தட்டை வடிவமானது என்றும், சூரியன் பூமியைச் சுற்றுகிறது என்றுமே மதங்களும், மதத்தை பின்பற்றும் மக்களும் நம்பி வந்தனர். மாற்றுக் கருத்தாக அறிவியல் அறிஞர்கள் கோப்பெர்னிகசு, கெப்லெர், புரூனோ, கலிலியோ போன்றவர்கள் உலகம் பற்றியும், சூரியக் குடும்பம் பற்றியும் ஆய்வுகளைச் செய்து நிரூபிக்கும் வரையில் இந்த அறிவியல் உண்மைகளைச் சொன்னதற்காகப் புரூனோவும், கலிலியோவும் பல்வேறு துன்பங்களுக்கு ஆட்பட்டார்கள்.
கலிலியோ மதத்தை, மத நூலை அவமதிப்பதாகச் சிறையில் அடைக்கப்பட்டார்; வாழ்நாளில் பல காலங்களைச் சிறையிலும் கழித்தார். புரூனோவோ உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார். ஆனால், வரலாற்றில் ஓரிடத்தில் மதம் தன் தவற்றை அறிவியலிடம் ஒப்புக்கொண்டது. அறிவியலின் கூற்றை உள்வாங்கி கொண்டது. உலகம் கோள வடிவமானது என்று பிரகடனப்படுத்தியது. 16ஆம் நூற்றாண்டில் இத்தாலி நகரில் எந்த இடத்தில் புரூனோ எரித்துக் கொல்லப்பட்டாரோ அதே இடத்தில் அவரை எரித்த ரோமின் கத்தோலிக்கச் சபை அன்று புரூனோவை எரித்தது தவறுதான் என்று ஒப்புக்கொண்டு இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகு புரூனோவிற்குச் சிலை வைத்திருக்கிறது. அறிவியல் தான் வென்றிருக்கிறது. போகட்டும்… அடுத்த இதழில் நாம் விரிவாக சிலவற்றைப் பார்ப்போம்.
(தொடரும்…)