அறிவின் விரிவு – அறுவை சிகிச்சையில் ஒரு புரட்சி DIGITAL TWIN ORGAN
`சைபர் புத்தா’ வினோத் ஆறுமுகம்
ஒரு நோயாளிக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். ஆபேரேஷன் தியேட்டர். எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் செய்தபின் அறுவை சிகிச்சை தொடங்குகிறது. மார்பைத் திறந்து (Open Heart) சிகிச்சை செய்யும் போது தான் டாக்டருக்குச் சிக்கல் புரிகிறது. நோயாளியின் இதயம் சற்றே சிக்கலானது. அவர் சந்தித்த சிக்கல்களில் கற்ற அனுபவங்களைக் கொண்டு அவர் திட்டமிட்டாலும் இந்த நோயாளியின் இதயத்தில் எதிர்பார்க்காத புதிய சிக்கல்.
பல நேரங்களில் இந்த அறுவை சிகிச்சைகள் சிக்கலாகி மரணம் கூட நேர்ந்துவிடும். சரி இதற்கென்ன தீர்வு? ஒருவேளை டாக்டர் அந்த நோயாளியின் இதயத்தை வைத்து மீண்டும் மீண்டும் அறுவை சிகிச்சை செய்து பயிற்சி எடுத்திருந்தால் அந்த அறுவை சிகிச்சையின் வெற்றி சதவிகிதம் அதிகமாகும். ஆனால், உயிருள்ள ஒரு நோயாளியின் இதயத்தை வைத்து எப்படி பயிற்சி செய்வது? இங்கு தான் செய்யறிவின் (செயற்கை நுண்ணறிவைக் குறிக்கும் மற்றொரு தமிழ்ச்சொல்) டிஜிட்டல் இரட்டையர்கள் (Digital twins) வருகிறார்கள்.
முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், ஒவ்வொரு மனிதரின் உடலும் ஏதோ ஒரு வகையில் மற்றவர்களை விட வித்தியாசமானதாக இருக்க வாப்புண்டு. எந்த அறுவை சிகிச்சையையும் முன்பே எவ்வளவு திட்டமிட்டாலும், தீர்மானித்தாலும், மருத்துவருக்கு முன்னறிவு இருந்தாலும் ஒரு சில நோயாளிகளின் உடல் கடைசி நேரச் சிக்கல்களைக் கொடுத்துவிடும். அந்த நேரத்தில் மருத்துவரின் திறமை, அனுபவம் தாண்டி அறுவை சிகிச்சை சிக்கலாகி, நோயாளி மரணம் கூட அடையலாம்.
இங்கு தான் செய்யறிவின் வருகை, புரட்சி.
உங்கள் இதயம், அல்லது மூளை அல்லது எந்த உடலுறுப்பில் அறுவை சிகிச்சை செய்யப் போகிறார்களோ, அதை முதலில் முப்பரிமாண ஸ்கேனிங் (Scan) தொழில்நுட்ப உதவியுடன் ஸ்கேன் செய்து தகவல்களைச் சேமிப்பார்கள். உங்கள் உறுப்பை அனைத்து சாத்தியமான கோணாங்களிலும் ஸ்கேன் செய்து தகவல்களைச் சேகரிப்பார்கள்.
இப்போது சேகரித்த தகவல்களைச் செய்யறிவூட்டப்பட்ட மென்பொருளுக்குக் கொடுப்பார்கள். இந்த மென்பொருள் ஏற்கனவே பல ஆயிரம் (ஏன்… சில லட்சம்!) உடல் உறுப்புகளின் ஸ்கேன் தகவல்களைக் கொண்டு எந்திரக்கற்றல் (Machine Learning) செய்யபட்டிருக்கும். நோயில்லாத உடல் உறுப்பு முதல் நோயுற்ற பல உடலுறுப்புகளைப் பற்றி ஏற்கனவே இந்த மென்பொருளுக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டிருக்கும்.
இப்போது நீங்கள் கொடுக்கும் நோயாளியின் உடல் உறுப்பு பற்றிய தகவலை, தனக்கு ஏற்கனவே தெரிந்த தகவல் உதவியுடன் செய்யறிவு மென்பொருள் ஒப்பிட்டுப் பகுப்பாய்வு செய்யும். இறுதியாக வரும் தகவல்களைக் கொண்டு செய்யறிவு உதவியுடன் Virtual 3 Dimension Model செய்வார்கள். அதாவது, டிஜிட்டலாக முப்பரிமாண மாதிரிகளை உருவாக்குவார்கள். பின் 3 டி பிரிண்டிங் (முப்பரிமாண அச்சு) எனும் தொழில்நுட்ப உதவியுடன் 2 அல்லது 3 இதயங்களை 3 டி பிரிண்ட் செய்வார்கள். 3-டி பிரிண்டிங் என்பது சிறப்பு கூழ் பிளாஸ்டிக், சிலிகான், இன்னும் பல மென்மையான ரசாயனப் பொருட்களின் உதவியுடன் ஒரு பொருளை உருவாக்குவது. நீங்கள் ஒரு பொம்மையைக் கொடுத்தால்
3 டி பிரிண்டர் அந்தப் பொம்மையை அழகாக அப்படியே உருவாக்கிக் கொடுத்துவிடும்.
சரி 3 டி பிரிண்டிங் செய்த இதய மாதிரிகளை வைத்து மருத்துவர்கள் மாதிரி அறுவை சிகிச்சை செய்து பார்ப்பார்கள். உங்கள் உண்மையான இதயத்தை அறுவை சிகிச்சை செய்யும் போது வரும் சிக்கல்கள் இப்போது மருத்துவருக்குப் பிடிபடத் தொடங்கும். அறுவை சிகிச்சை நேரத்தில் ரத்தம் வெளியேறி உயிர் ஊசலாடும் போது அவர் பதற்றமாகச் சிந்திக்க வேண்டாம். மாறாக 3 டி மாதிரியில் என்ன சிக்கல் என்று பிஸ்கெட் சாப்பிட்டபடி பார்த்துச் சிந்தித்து அதற்கான திட்டத்தை உருவாக்கிக்கொள்ளலாம்.
மருத்துவரிடம் இப்போது சரியான திட்டம் இருக்கும். அந்த அறுவை சிகிச்சையும் ஏற்கனவே பழக்கமான இதயத்தில்தான் என்பதால் உங்கள் ஆபரேஷன் வெற்றி சதவிகிதம் அதிகமாகிவிடும். இதன் மூலம் அறுவை சிகிச்சையில் பல்வேறு உயிரிழப்புகளை இனி நாம் குறைக்கலாம். உங்கள் அன்புக்குரியவர் இனி மகிழ்ச்சியாக இருக்கலாம்.
(தொடரும்)