அடேயப்பா…! – 12: ஸ்காரா ப்ரே: மலைப் பாறைகளில் ஒரு பழைய்ய்ய்ய் குடியிருப்பு

நாம் இதுவரை நம் நாட்டைத் தாண்டி உலகின் பல்வேறு பகுதிகளிலிருக்கும் வியப்பான, ஆர்வத்தைத் தூண்டவல்ல பல இடங்களைப் பற்றி ‘அடேங்கப்பா’ எனும் இந்தப் பகுதியில் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று “ஸ்காட்லாந்தின் பாம்பீ” என்றறியப்படும் “ஸ்காரா ப்ரே”(Skara Brae) பற்றிப் பார்க்கலாம் வாருங்கள்.
ஸ்காட்லாந்தின் வடக்குக் கடற்கரைக்கு அப்பால் ஓர்க்னி தீவுகள் அமைந்துள்ளன. 70க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட தீவுக்கூட்டமாக வடக்குப்பகுதி கடல் முழுவதும் ரொட்டித் துகள்கள் போலச் சிதறிக் கிடக்கின்றன. நீண்ட குளிர்காலமும், சீற்றத்துடன் வீசும் காற்றும், மரங்களற்ற நிலப்பரப்பும் இந்த இடத்தை ஒரு வெளிப்படையான தொலைதூர இடமாக மாற்றுகின்றன. இருப்பினும், நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை, ஓர்க்னிகள் கற்காலக் கலாச்சாரத்தின் அதிநவீன மய்யத்தில் இருந்துள்ளனர் என்பதை இந்த இடம் நமக்குப் பறைசாற்றுகின்றது.
பொதுவாகவே, இந்தத் தீவுகள் ஒரு மாபெரும் தொல்பொருள் தளமாக விளங்குபவை. இயல்பாக ஒரு மண்வெட்டியைக் கொண்டு மண்ணைத் தோண்டுபவர்களுக்கு, அடக்கம் செய்யப்பட்ட கல்லறைகள், ஒற்றைப் பாதைகள் அல்லது கல் வேலைப்பாடுகளைக் கண்டுபிடிப்பதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன.
மனிதனால் மட்டுமல்ல, இயற்கையாலும் கண்டுபிடிக்க இயலும். அப்படித் தான் 1850இல் ஏற்பட்ட ஒரு பெரும் புயலால் ஓர்க்னியின் மிக முக்கியமான புதிய கற்காலத் தளமான ஸ்காரா ப்ரே எனும் இக்கிராமம் விவசாயி ஒருவரால் கண்டறியப்பட்டது. ஸ்காரா ப்ரே “ஸ்காட்டிஷ் பாம்பீ” எனவும் அழைக்கப்படுகிறது.
இந்தப் பெயர் “பாறைகளால் உருவான மலை” என்று பொருள்படும். 1920களில் தொடங்கப்பட்ட அகழ்வாராய்ச்சியின் மூலம் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அய்ரோப்பாவின் ‘புதிய கற்காலக் கிராமம்’ (Neolithic village) என ஸ்காரா ப்ரேவைக் குறிப்பிட்டுள்ளனர். இது ஒரு காலத்தில் 100 பேர் வரை வாழத்தக்க எட்டு செவ்வகக் கட்டமைப்புகளைக் கொண்டிருந்துள்ளது. இவை நடைபாதைச் சந்துகளால் இணைக்கப்பட்டிருந்தன. ஓர்க்னி பகுதியில் மரப்பற்றாக்குறை இருந்த காரணத்தால் கல்லில் கட்டும்படியான சூழல் இருந்திருக்கலாம் என்கிறது அந்த ஆய்வு.
1999இல் யுனெஸ்கோ அமைப்பு உலக பாரம்பரியத் தளங்களைக் குறிப்பிட்டபோது, இக்கிராமத்தை “புதுமை மற்றும் பரிசோதனையின் மய்யம்” என்றழைத்தது. அது மிகைப்படுத்துதல் இல்லை. ஏனெனில் பெரிய தட்டையான கல் பலகைகளால் கட்டப்பட்ட வீடுகளில் குப்பை கொட்டுவதற்கான இடங்கள் மற்றும் பூட்டிக் கொள்ளக்கூடிய கதவுகள் ஆகியவையும் கற்களாலே அமைக்கப்பட்டுள்ளன. பார்வையாளர்கள் இதனுள்ளே சென்றால் கல்சுவரில் கட்டப்பட்ட பொருள் வைப்பிடம், வீட்டின் பாத்திரங்கள், அலங்கரிக்கப்பட்ட கல் பொருட்கள் போன்றவற்றைக் காணலாம். அடுப்புகளும், சேமிப்புக் கிடங்குகளும் தரையில் தோண்டப்பட்டுள்ளன. இடதுபுறத்தில் ஆண்களுக்கு வலதுபுறத்தில் பெண்களுக்கும் என தனித்தனி படுக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
வியப்புக்குரிய சிறப்பம்சம் என்னவென்றால், வீடுகள் தோறும் கழிப்பறைகள் இருந்துள்ளன. கழிவுகளைக் கடலுக்குக் கொண்டு செல்லும் பொது வடிகாலுடன் (Drainage) இணைக்கப்பட்ட துளைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் ஆராய்ச்சிகளின் போது, பல கலைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை அப்படியே கட்டடக் கலையுடன் பொருந்தி இருப்பதால் அம் மக்களின் வாழ்க்கைச் செழுமையை நமக்கு விவரிக்கின்றது. பாலும், திரவ உணவுகளும் கல் கிண்ணங்களில் பரிமாறப்பட்டுள்ளன. திமிங்கிலத்தின் சிலைகளும், வால்ரஸ் தந்தத்தின் பகடைக் காய்களைக் கொண்டு விளையாடப்படும் விளையாட்டுப் பொருள்களும் ராட்சதத் திமிங்கலங்களின் பற்களால் செய்யப்பட்ட நகைகளும் அங்கு கண்டறியப்பட்டுள்ளன. அந்தப் பகுதியில் வாழ்ந்த மக்கள் ஆடு, மாடு வளர்ப்பவர்களாக இருந்திருக்கக்கூடும்.
எகிப்தின் பிரமிடுகள், இந்தியாவின் ஹரப்பன் நாகரிகத்திற்கு முன்பே சுமார் கி.மு.3200இல் ஸ்காரா ப்ரேயில் மக்கள் வசிக்கத் தொடங்கியுள்ளனர். பின்னர் சுமார் கி.மு.2500இல் ஸ்காரா ப்ரேயில் மக்களின் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. தொல்பொருள் பதிவுகளின் மூலம் திடீரென இந்த வாழ்விடங்களில் மக்கள் வசிப்பது நின்றுவிட்டதைப் போல அறிய முடிகிறது. மக்கள் படிப்படியாக கூட்டு வாழ்க்கையிலிருந்து விலகி, தீவுகளை ஒட்டியிருந்த தனிமைப்படுத்தப்பட்ட பண்ணைக் காடுகளுக்குச் சென்று குடியேறி இருக்கலாம் என யூகிக்கப்படுகிறது. இந்த மாற்றத்திற்கான அடிப்படைக் காரணம் பற்றி எங்கேயும் தெளிவாக அறியமுடியவில்லை. ஒரு சமூக மறுசீரமைப்பைக் கட்டாயப்படுத்திய ஆளும் வர்க்கத்தின் முடிவினாலோ அல்லது நிலத்தை வளமற்றதாக மாற்றிய காலநிலை மாற்றத்தாலோ இது நிகழ்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
காரணம் எதுவாக இருந்தாலும், இன்று ஸ்காரா ப்ரே முழுவதுமாக மனிதர்கள் இல்லாத இடமாக மாறி உள்ளது. இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு செய்தி தெளிவாக உள்ளது. அதாவது, ஒரு சமூகத்தின் வாழ்க்கை முறை எத்தனை உச்சத்தில் இருந்தாலும்கூட, ஒரு நாள் நிரந்தரமாக இல்லாமல் போவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பதே அது.