கதை கேளு கதை கேளு: அடேய் ஈ404!

செழியனுடன் அய்ந்து குள்ள மனிதர்கள் வந்துவிட்டனர். குள்ள மனிதர்கள் என்றாலும் அவர்கள் குள்ளச் சிறுவர்கள். செழியனும் அவன் நண்பர்களும் குள்ள மனிதர்களின் நாடான லில்லிபுட்டிற்குச் சென்று வந்தார்கள் அல்லவா? குட்டிச் சிறுவர்கள் ஒரே ஒரு வாரம் மட்டும் இருக்கின்றோம் என வாக்களித்தனர். அய்வருமே செழியனின் நடுவிரல் உயரத்திற்கே இருந்தனர். அய்ந்து பேரும் செழியனின் வயதினர்தான். அதே அய்ந்தாம் வகுப்புதான். அய்வர் வந்தது செழியனின் வீட்டில் யாருக்கும் தெரியாது.
“நீ எங்களைப் பார்த்த மாதிரி நாங்க உன் பள்ளிக்கு வரவேண்டும். உன் நண்பர்களை எல்லாம் எங்களுக்குக் காட்டு, அது போதும்” என்று கோரிக்கை வைத்தனர். செழியன் வேகமாகக் குளித்தான். “நீங்க குளிக்கலையா?” என அய்வரையும் பார்த்துக் கிண்டல் அடித்தான். அம்மாவிடம் “என் அய்ந்து நண்பர்களுக்கு மதிய உணவு வேண்டும். ஒரு குட்டி பாக்ஸில் போட்டுத்தாங்க” என்றான். சரியாக அய்ந்து தேக்கரண்டி புளிசாதம் மட்டும் போட்டுக்கொண்டான். ‘இது எப்படிடா பத்தும்?’ என்றதற்கு, “இதுவே அவங்க காலை டிபன், மதிய உணவு, இரவுச் சாப்பாடு” என்றான். அம்மா கொஞ்சம் குழம்பித்தான் போனார்.
சாப்பாட்டுக் கூடையில் அமர்ந்துகொண்டு அதன் ஓட்டை இடையே வேடிக்கை பார்த்து வருவது எனத் திட்டம். “பார்த்து… டிபன் பாக்ஸ் மேல உட்காராதே”ன்னு சொல்வதற்குள் அதன்மீது அ101 அமர்ந்து ‘குய்யோ முய்யோ’ எனக் கத்த ஆரம்பித்துவிட்டான். அவர்களின் பெயர்கள் அ101, ஆ202, இ303, ஈ404, உ505. சிரித்தபடியே சைக்கிளை ஓட்டினான் செழியன். சன்னமான குரலில் ஒவ்வோர் இடமாகக் காட்டிக் கொண்டே வந்தான். பள்ளியில் சைக்கிளை நிறுத்தினான். “இதோ இதுதான் விளையாட்டு மைதானம். ஆனால் விளையாட விடமாட்டாங்க” என்றான்
“ஏன்? அப்புறம் எதுக்கு மைதானம்” என்று குழப்பமாகக் கேட்டாள் உ505.
செழியன் மனசுக்குள் நினைத்துக்கொண்டான். “எங்க க்ளாஸ்ல டஸ்ட்பின் இருக்கு; ஆனா அதுல எதுவும் குப்பை போடக் கூடாதுன்னு சொல்லுவாங்க. அதைக் கேட்டா என்ன செய்வாங்களோ?”
“அய்யா சாமி செழியா, எங்களைக் கீழ இறக்கிவிடு. நாங்க நடந்தே வாரோம்” என்றனர் எல்லோரும்.
“வாவ். எவ்வளவு பெரிய கட்டிடம்! மேல ஏறிப்போகவே 2 மணி நேரம் ஆகும்போலயே” என்றான் ஆ202.
செழியனின் வகுப்பு முதல் மாடியில்! மேலே ஏறியதும் இரண்டாம் வகுப்பறை. “நீ போ… நாங்க வர்ரோம்” என்றனர். இன்னும் பள்ளியில் குழந்தைகள் வரவில்லை. செழியன் சீக்கிரமே வந்துவிட்டான். ‘ஓரமா வாங்க; பசங்க நசுக்கிடப்போறாங்க’ என எச்சரித்துவிட்டு வேகமாகச் சென்றான். ஒவ்வொரு படிக்கட்டிலும் ஏறுவதே சாகசமான விளையாட்டாக இருந்தது அய்வருக்கும். சில படிக்கட்டுகளில் முதுகு மேலேறி விளையாடியபடி சென்றனர். பத்து நிமிடத்தில் ஏறிவிட்டனர். அப்போதுதான் பணியாளர் புதிய தண்ணீர்க் கேனை வைத்துவிட்டுச் சென்றார். குழாயிலிருந்து தண்ணீர் சொட்டியது. ஈ404 ஓடிச்சென்று தலையை நனைத்துக்கொண்டான். செழியனின் வகுப்பறைக்குள் நுழைந்தனர். இரண்டு பேர் மட்டும் வகுப்பில் இருந்தார்கள்.
குட்டி நண்பர்கள் உள்ளே வந்ததும் கையசைத்து வரவேற்றான். கணக்கு வீட்டுப் பாடத்தை முடிக்கவில்லை என்பதால் வேகவேகமாக முடித்துக்கொண்டு இருந்தான். குட்டி நண்பர்கள் வகுப்பறையைச் சுற்றி என்னென்ன ஒட்டி இருக்கின்றது எனப் பார்த்தார்கள். மாணவர்கள் மெல்ல வர ஆரம்பித்தனர். அப்போதுதான் குட்டி நண்பர்கள் நால்வர் மட்டும் இருப்பதைக் கவனித்தான். ஓடிப்போய் “இன்னொருத்தர் எங்கே?” என்றான். ஆமாம் அங்கே ஈ404அய்க் காணவில்லை. வகுப்பறைக்குள் அய்வரும்தான் நுழைந்தனர்.
ஈ404 எனக் கத்திக்கொண்டே வகுப்பறையைச் சுற்றி வந்தான். தரையில் குனிந்து எங்காவது இருக்கானா எனத் தேடினான். காணவில்லை. வகுப்பறையில் ஓர் ஓட்டை இருந்தது. தண்ணீர் ஊற்றினால் வெளியே சென்று விழுவதற்கு ஏற்பாடு. அந்த ஓட்டைக்குள் பென்சில், துருவி, அழிப்பான் இவற்றைப் போட்டு விளையாடுவார்கள் சிறுவர்கள். கட்டடத்தின் பின் பக்கமாக அது வந்து விழும். ஈ404 அங்கே விழுந்துவிட்டானா? அல்லது நடுவில் சிக்கிக்கொண்டானா?
அ101 மற்றும் இ303 இருவரையும் மேல் சட்டைப் பையிலும் ஆ202 அய் கால்சட்டை இடப்புறப் பையிலும் உ505அய் வலது பையிலும் அமர்த்திக்கொண்டு தேட ஆரம்பித்தான். பூத்தொட்டியில் எங்காச்சும் இருக்கானா என்று தேடினார்கள். மற்றவர்களும் எட்டிப் பார்த்து காணவில்லை எனச் சொல்லிக்கொண்டே வந்தனர்.
பள்ளி மணி அடித்தது. அது எல்லோரும் காலை கூட்டத்திற்கு வரச்சொல்லும் மணி. எல்லோரும் கட்டடத்தின் கீழே குழுமச் சென்றனர். செழியன் மட்டும் கீழே எங்காச்சும் ஈ404 இருக்கின்றானா எனத் தேடினான். கட்டடத்தின் பின்புறம் ஓடினான். பள்ளி வழக்கமாக யாரையும் அங்கே அனுமதிப்பதில்லை. அந்த பைப் வழியாக விழுந்திருப்பானோ என நினைத்தான். அந்தச் சுவடே அங்கு இல்லை.
ஆசிரியர் ஒருவர் பார்த்துவிட்டு “செழி, என்ன செய்யற? என்ன தேடற?” என்று சத்தம்போட்டார். “ஈ404” என்றான். “நானூத்தி நாலு ஈயைத் தேடுறியா? கோ, கோ டு த அசம்ப்ளி” என்றார். செழியனுக்குத் தலை சுற்றியது – தன் பாதுகாப்பில் வந்தவர்களில் ஒருவரைக் காணவில்லை என்று. “பதட்டப்படாதே செழியன், இங்கத்தான் எங்காச்சும் பத்திரமா இருப்பான்” என்றாள் உ505. காலை கூட்டம் நடந்தது. நால்வரும் என்ன நடக்கின்றது என்று உன்னிப்பாகக் கவனித்தார்கள்.
பின்னர் வரிசையாக ஒவ்வொரு வகுப்பு மாணவர்களும் அவரவர்களது வகுப்பறைக்குச் சென்றனர். வரிசையிலிருந்து விலகி ஓரங்களில் எல்லாம் ஈ404 எனக் கத்திக்கொண்டே சென்றான் செழியன். ஒரு பயனும் இல்லை. இரண்டாம் மாடிக்குச் சென்றான். வழியில் எங்காச்சும் இருக்கின்றானா எனத் தேடினான். ஒரு வாரத்தில் இவர்களைத் திரும்ப அனுப்பணுமே அவங்க ஆசிரியருக்கு என்ன பதில் சொல்வது? இங்கயே சிக்கிகிட்டான்னா எப்படி பிழைப்பான்? என்று பலவித யோசனைகள்.
வகுப்பறைக்குச் சென்று சோர்ந்து அமர்ந்தான். வியர்த்து விட்டது. தண்ணீர் குடிக்கலாம் என்று சாப்பாட்டுப் பையில் இருந்த துண்டினை விலக்கினான். உள்ளே தண்ணீர்ப் பாட்டில் இருந்தது. ஹாயாக அங்கே ஈ404 டிபன் பாக்ஸ் மீது படுத்துக்கொண்டு இருந்தான்.
“ப்ரெண்ட்ஸ் எங்க போயிட்டீங்க?” என்றான்.
“அடேய்…” என நால்வரும் கத்தினார்கள்.
“தலை நனைஞ்சிடுச்சா… இந்தத் துண்டில் தலை துவட்டிக்க வந்தேன். அப்படியே புளி சாதம் வாசனை வரவே, திறந்து இரண்டு சாதம் சாப்பிட்டேன். அதுக்குள்ள உங்க யாரையும் காணோம். எப்படியும் வருவீங்கன்னு அப்படியே ரெஸ்ட் எடுத்துட்டு இருந்தேன்” என்றான் ஈ404.
செழியனுக்கு அப்படி ஒரு நிம்மதி. “ஈ404 இப்படி எல்லாம் செய்யாதே!” எனச் சிரித்தபடி அவன் தலையில் குட்டினான்.
பின் வரிசையில் இருந்து செழியனின் தோழி அபெகா அழைத்தாள்.
”என்னடா செழியா விநோதமா நடந்துக்கற, நீயே தனியா அ, ஆ, இ, ஈ, உன்னு பேசிட்டு இருக்க. சாப்பாட்டுக் கூடையைப் பார்த்துச் சிரிக்கிற” என்றாள் அபெகா.
அப்போதுதான் செழியனுக்கு நினைவிற்கு வந்தது – இவர்கள் அய்வரும் யாருடைய கண்களுக்கும் தெரியமாட்டார்கள் என்பது!