தொடர் கதை: காட்டுவாசி-7: கம்பெடுத்தால் சொல்லி அடிப்பேன்!

விடிந்தும் விடியாத காலைப் பொழுது…
இரவு முழுவதும் வீட்டில் என்ன நடந்திருக்குமோ? என்ற எண்ணத்தோடே படுத்திருந்த அமுதாவும், மாணிக்கமும் இடையிடையே விழித்து விழித்துத் தூங்கி நன்றாக விடிந்ததும் விழித்தனர்.
அடர்ந்திருந்த மரக் கூட்டத்தில் இரவே வந்து அடைக்கலமான பறவைகள் எல்லாம் தத்தமது குரலால் விடியலை வரவேற்றுப் பாடல் பாடிக் கொண்டிருந்தன. அந்தக் கூக்குரல், மலைகளின் மீது பட்டு எதிரொலித்ததால் மனதிற்கு ஆறுதலைத் தந்தது. மரத்துப் பரணில் படுத்திருந்த அமுதா மெல்ல நூல் ஏணி வழியாகத் தரை இறங்கினாள்.
அவளை வரவேற்ற காட்டுவாசி “வாம்மா அமுதா. நல்லா தூங்குனியா”… என்று கேட்ட உடனேயே விழித்த படியே பாறையில் படுத்திருந்த மாணிக்கம் எழுந்து… “எப்படிங்க எங்களுக்குத் தூக்கம் வரும். வீட்டுல பாயி, தலையணை, போர்வையோட… தாத்தா, அம்மாவோட இவ்வளவு நாளா படுத்திருந்துட்டு பொட்டல் காட்டுல வெட்ட வெளியில படுத்தா எப்படி நல்லாத் தூக்கம் வரும்?” என சலிப்போடு சொன்னாள்.
“அத்துவானக் காட்டுல… அவ்வளவு உயரத்தில சில்லுனு காத்தடிக்கிற இடத்துல தனியா படுத்திருந்தது பயமாத்தான் இருந்தது. ஆனா… துணைக்கு நீங்களும், ரங்கோவும் இருக்கிற தைரியத்துல முழிச்சு முழிச்சுப் பார்த்துக்கிட்டே தூங்கிட்டேன்.”
“சரி… சரி… இந்தாங்க… இதுதான் இங்கே பிரஷ் மாதிரி! இதுல பல்லைத் தேச்சிட்டு அதோ அந்த நீரோடையிலே முகத்தைக் கழுவிட்டு வாங்க… நீங்க உங்க வீட்டுக்குப் போறதுக்கான விவரத்தைப் பத்திப் பேசுவோம்.” என ஆளுக்கொரு மரக்குச்சியைக் கொடுத்தார் காட்டுவாசி. அமுதாவும், மாணிக்கமும் அந்தக் குச்சியைக் கொண்டு பல் தேய்த்தபடி நீரோடை நோக்கி நடந்தனர்.
“ரங்கு! நீ கூடப் போ துணைக்கு… அதுக்குள்ள நான் சாப்பிடுறதுக்கு ஏதாவது பழம் கொண்டு வர்றேன்” என்றார்.
சற்று நேரத்தில் காட்டுவாசி சப்போட்டா, மாதுளை என சில பழங்களைக் கொண்டு வந்தார். அமுதாவும், மாணிக்கமும் காலைக் கடன்களை முடித்துவிட்டுத் திரும்பி வந்தனர்.
“வாங்க… சாப்பிடலாம்…” என்றபடி ஒரு பழத்தை எடுத்து வாயில் போட்டார் காட்டுவாசி.
குழந்தைகள் இருவரும் பழங்களைச் சாப்பிடத் தொடங்கினார்கள். மரத்தின் மேல் அமர்ந்திருந்த ரங்கு “கீச்… கீச்…” எனக் கத்தினான்.
“என்னடா ரங்கு… உனக்கும் பசிக்குதா, வா வந்து ரெண்டு பழத்தை எடுத்துத் தின்னு…” என்றபடி ரங்குவைப் பார்த்தார் காட்டுவாசி.
ரங்கு காட்டுவாசி இருக்கும் அந்த இடத்திற்கு வரும் வழியைப் பார்த்தபடி தொடர்ந்து சத்தமிட்டுக் கொண்டே இருந்தான்.
“அடடே… வெளியிலே இருந்து யாரோ இங்கே வர்றாங்க… அதான் ரங்கு இப்படி சத்தம் போடுறான். யாருன்னு பார்ப்போம்” என்று சொல்லித் திரும்புவதற்குள் மாசியும், மலையாண்டியும் அந்த இடத்திற்கே வந்து விட்டனர்.
மலையாண்டி தன் கையிலிருந்த துப்பாக்கியை காட்டுவாசியை நோக்கி நீட்டியபடி, “ஓ… ஓ நீ தான் இந்தப் பொடிப் பசங்களை நேத்து காப்பாத்துனவனா? உன்னைப் போட்டுத் தள்ளிட்டு இவங்களைத் தூக்கிட்டுப் போறோம் பாருடா…” என்றபடி காட்டுவாசியை நோக்கி ஒவ்வோர் அடியாக வைத்து முன்னால் வந்தான்.
உடன் வந்த மாசி, “மலை! இத்தனை வருஷமா இந்தக் காட்டுக்குள்ள வந்து போறோமே… இவனைப் பார்த்ததே இல்லையே… “டேய் யார்ரா நீ? இங்கே என்னடா பண்றே”.
“டேய்! இவன் கிட்டே என்ன பேச்சு… குழந்தைகளைப் புடி… இவனை சுட்டுப் போட்டுட்டு நம்ம வேலையைப் பார்ப்போம். ஏய்… பசங்களா இந்தப் பக்கம் வாங்க… இல்லே… உங்களையும் சுட்டுப் போடுவோம். உம்… வாங்க இந்தப் பக்கம்.” என்றான் மலையாண்டி.
மின்னல் வேகத்தில் மரத்தின் மேலிருந்த ரங்கு மலையாண்டியின் தோள் மீது குதித்துத் துப்பாக்கியைப் பறித்துக் கொண்டு அடுத்த மரத்திற்குத் தாவினான்.
இந்தத் திடீர்த் தாக்குதலில் நிலை குலைந்த மலையாண்டியும், மாசியும் என்ன செய்வதென முடிவு செய்வதற்குள், காட்டுவாசி பக்கத்தில் இருந்த கம்பை எடுத்து இருவரையும் அடிக்கத் தொடங்கினார்.
அதைப் பார்க்கையில் சினிமாக் காட்சியில் கதாநாயகன் சிலம்பம் சுற்றுவது போல காட்சியளித்தது அமுதாவுக்கும், மாணிக்கத்திற்கும்!
மாசியும் பக்கத்தில் இருந்த மரக்கிளையை எடுத்து அடியிலிருந்து தப்பிக்க தடுத்துப் பார்த்தான். ஆனால் காட்டுவாசியின் கம்பு வீச்சில் இருந்து தப்பிக்க அந்த இடத்தை விட்டு ஓடுவதுதான் வழி என்று மாசியும், மலையாண்டியும் ஓடத் தொடங்கினார்கள்.
சற்று தூரம் வரை கம்பைச் சுழற்றிக் கொண்டே சென்ற காட்டுவாசி… அவர்கள் ஓடத் தொடங்கிய பிறகுதான் நிறுத்தினார்.
திரை அரங்குகளில் படம் பார்த்து ரசிக்கும் ரசிகர்களைப் போல அமுதாவும், மாணிக்கமும் கை தட்டி ரசித்தபடி பின்னாலேயே நின்று கொண்டிருந்தனர்.
“ஏங்க காட்டுவாசி… ரங்குவை நல்லா பழக்கப்படுத்தி வச்சிருக்கிங்க. சரியான நேரத்திலே எங்கிருந்து எப்படி குதிச்சுதுன்னே தெரியலே… படார்னு துப்பாக்கியைப் புடுங்கிக் கிட்டுப் போயிடுச்சு!” என்றான் மாணிக்கம்.
“அதுக்கு அப்புறந்தான் எனக்கு உசுரே வந்தது.” என்றாள் அமுதா.
“கவலைப்படாதீங்க! இவங்க இந்தக் காட்டுக்குள்ள பல ஆண்டுகளா மரங்களை வெட்டிக் கடத்துறது, பெரிய பெரிய மிருகங்களை வேட்டையாடி விக்கிறதுன்னு பல தப்பான, சட்டத்துக்குப் புறம்பான வேலைகளைச் செய்துக்கிட்டிருந்தவங்க. இப்ப உங்களை மாதிரி குழந்தைகளைக் கடத்துற வேலையிலே ஈடுபட்டிருக்காங்கன்னு நான் நினைக்கிறேன்…” என்று தன் கருத்தை வெளிப்படுத்தினார் காட்டுவாசி.
காட்டுவாசியின் கம்படி தாங்க முடியாமல் ஓடிய மாசியும் மலையாண்டியும் தங்கள் ஜீப் நிற்கும் இடத்திற்கு ஓடி வந்த பிறகே திரும்பிப் பார்த்தனர்.
“டேய்! மாசி எங்கிருந்துடா வந்தது இந்தக் குரங்கு?
நேத்து வந்த வனதேவதை மாதிரியே சட்டுன்னு வந்து பட்டுன்னு துப்பாக்கியைப் புடிங்கிட்டுப் போயிடுச்சே… நம்ம குருஜீக்கு என்னடா பதில் சொல்றது.”
“மலை! துப்பாக்கி கையெவிட்டுப் போனதாலே தான் நாம அந்தக் காட்டுவாசிக்கிட்டே அடி வாங்குனோம்.”
“டேய் மாசி… உடனே குருஜீக்கு போன் போட்டு நடந்ததைச் சொல்லு. நாம காட்டு மரத்தைக் கடத்தத் தடையா இருந்ததே இந்தக் காட்டுவாசிதான்னு நான் நினைக்கிறேன். அதையும் குருஜீக்கிட்டே சொல்லு.
“சரியாச் சொன்னே… மலை… அவரு சொன்ன புது நம்பருக்கே போன் போடுறேன்” என்றபடி பாக்கெட்டிலிருந்து போனை எடுத்து குருஜீயை அழைத்தான்.
சிறிது நேரத்தில் குருஜீயின் குரல் அந்தப் பக்கத்திலிருந்து கேட்டது.
“சொல்லுப்பா… குழந்தைங்கோக் கிடச்சுட்டாங்களா…”
“குருஜீ… குழந்தைங்களை காட்டுல ஒரு காட்டுவாசி பாதுகாத்து வச்சிருக்கான்.”
“என்னப்பா… நேத்து வனதேவதைன்னு கதை உட்டே… இன்னிக்கு காட்டுவாசின்னு கதை உடுறே.”
“கதை உடலே குருஜீ. உண்மைதான். காட்டுல மரத்தை வெட்டி கடத்த முடியாமப் போனதுக்கு அவன் தான் காரணம். அவனை நாங்கள் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி குழந்தைகளைக் கூட்டிக்கிட்டு வரப் போயிட்டோம்.”
“அரே… நல்ல காரியம் செஞ்சிங்கோ, அந்த காட்டுவாசியைப் போட்டுத் தள்ளிட்டு குழந்தைகளை இழுத்துக்குனு வாங்கோ.”
“அதுக்குதான் குருஜீ… கிட்டே போயிட்டோம்.”
“அப்புறம் எதுக்கு யோசிக்கிறே… ஆளைப் போட்டுத் தள்ளிட்டு குழந்தைங்களே கூட்டிக்கினு சீக்கிரம் வாங்கோ”
“அது முடியாது குருஜீ”
“ஏம்ப்பா மறுபடி வனதேவதை வந்துதா.”
“இல்லே… குருஜீ! ஒரு வானரம் வந்து… துப்பாக்கியைப் புடிங்கிக்கிட்டுப் போயிடுச்சு. அந்தக் காட்டுவாசி கம்பெடுத்து எங்களை அடிச்சு விரட்டிட்டான்.”
“அவரே சரியான முட்டாப் பசங்கப்பா… நீங்க. அது சரி… அந்த காட்டுவாசி எங்கே இருக்கான் இப்போ.”
“காட்டுக்குள்ளதான் இருக்கான் குருஜீ”
“சரி உடுப்பா… நான் பார்த்துக்குறேன். காட்டுக்குள்ளே போயி மரம் வெட்டுறதுக்கும் அவன் தான் கெடுதல் பண்ணியிருக்கான்.
ஊருக்குள்ள போயி குழந்தையைக் கடத்தினா அதுக்கும் அவன் தான் கெடுதல் பண்ணியிருக்கான். அந்தக் காட்டுவாசியை உடக்கூடாது அவனை என்னா செய்யிறேன் பாரு.
நீங்க கிளம்பி வந்துருங்கோ… மத்ததை நான் பார்த்துக்கிறேன்.”
“டேய்… காட்டுவாசி… உன்னை என்னா செய்யிறேன் பாரு” என சிரித்தபடி செல்போன் பேச்சை நிறுத்தினான்.
காட்டுக்குள்ளிருந்து புறப்பட்ட இடத்திற்கே ஜீப் திரும்பிப் போனது.
ஓடிய ஓட்டத்திலும், வாங்கிய அடியிலும் மலையாண்டியும், மாசியும் மிகுந்த சோர்வுடன் போனார்கள்.
(தொடரும்)