சுனிதாவும்,வில்மோரும் பின்னே ஸ்பேஸ் எக்ஸூம்

கோடையின் தாக்கத்தில், குளிரூட்டியைத் (A/C) தவிர்த்து, மொட்டை மாடியில் மல்லாக்கப் படுத்துக் கொண்டு விண்மீன்களை எண்ணுவது பலருக்குப் பிடித்த செயலாய் இருக்கும். உங்களுக்கும் ஆசை இருக்கும், அல்லவா! விண்வெளியில் விண்மீன்கள் மட்டுமின்றி, கோள்கள், சூரியன், நிலாக்கள் மற்றும் பூமியிலிருந்து அனுப்பட்ட விண்கலங்களும் அதோட பன்னாட்டு விண்வெளி நிலையமும் உள்ளது.
காஷ்மீருக்கும், அருணாச்சல் பிரதேசத்துக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் பயணம் செய்வது போல் விண்வெளிக்கும் பயணம் போனால் நன்றாக இருக்கும் அல்லவா? ஆனால், விண்வெளியில் புவியிர்ப்பு விசை இல்லையே!
அதனால, விண்வெளிப் பயணமும், விண்வெளியில் வாழ்வதும் சிக்கல் நிறைந்ததாக இருக்கும். அப்போ, விண்வெளியில் நம்மளோட உடல் நிலையில் என்ன மாற்றம் நடக்குது, செடிகொடிகள் எப்படி வளர்க்கலாம் என்று எல்லாம் தெரியணும் அல்லவா? அதுக்குத் தான், விண்வெளியில் ஓர் ஆராய்ச்சிக் கூடத்தைக் கட்டி இருக்காங்க விஞ்ஞானிகள். அதுக்குப் பெயர்தான் பன்னாட்டு விண்வெளி நிலையம் (ISS-International space station). உலக நாடுகளில் இருந்து வரும் விண்வெளி வீரர்கள், இந்த விண்வெளி நிலையத்தில் தங்கி ஆராய்ச்சிகளை நடத்துவாங்க.
கொலம்பியா விண்வெளி ஓடத்தில் 2003 பிப்ரவரி முதல் நாளில் இப்படி பன்னாட்டு விண்வெளி நிலையத்துக்குப் போய்த் திரும்பும் போது நடந்த விபத்தில் தான் கல்பனாசாவ்லா இறந்து போனாங்க.
எனவே, விண்வெளி ஓடம் அனுப்புவதை அமெரிக்கா நிறுத்திட்டு, அதற்குப் பதிலா ரஷ்யாவின் விண்கலம் மூலமா ப.வி.நி.க்குப் போய்க்கிட்டு இருந்தாங்க… மீண்டும் அமெரிக்கா சார்பா ப.வி.நி.க்குப் போகும் விண்கலம் தயாரிக்க ஸ்பேஸ் எக்ஸ், போயிங் ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கு வாய்ப்பு கொடுத்தது நாசா – அதில் போயிங் தயாரிச்ச விண்கலத்தைச் சோதிக்கத்தான்.
*கடந்த ஜூன் 2024-இல் திருமதி. சுனிதா வில்லியம்ஸ் மற்றும் திரு. புட்ச் வில்மோர் இருவரும் போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் எனும் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குப் போனாங்க. அவங்களோட திட்டப்படி, மீண்டும் அவங்க, ஒன்பது நாட்களில் பூமிக்குத் திரும்பி வந்து இருக்கணும். ஆனால், ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட பழுதால, அவங்க திரும்பி வருவது தள்ளிப்போய் தள்ளிப்போய், ஒன்பது மாதங்கள் ஆகிடுச்சு. (ஒரு வேளை, அவங்க இரண்டு பேரும் mindvoice-இல் இந்தப் பாட்டைப் பாடி இருப்பாங்களோ! – “காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி..” என்று!)
ஒன்பது மாதங்கள் கழித்து, மார்ச் 2025இல் spaceX நிறுவனத்தின், crew dragon எனும் விண்கலம் மூலம், வெற்றிகரமாக, பூமிக்கு அழைத்து வரப்பட்டனர். ஹேய்ய்ய்… வெற்றி வெற்றி!!!
எல்லாம் சரி, எப்படி விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்குத் திரும்பி வராங்க?
பன்னாட்டு விண்வெளி நிலையம், பூமியைச் சுற்றிக்கொண்டு இருக்கும். அப்படி பூமியைச் சுற்றி நகர்ந்துக்கிட்டே இருக்கும் விண்வெளி நிலையத்தோட, பூமியில் இருந்து விண்வெளி நிலையத்துக்குப் போகும் விண்கலம் சரியாகப் போய்ப் பொருந்தணும். அப்படி வெற்றிகரமாகப் பொருந்தினால் தான் விண்வெளி வீரர்களைத் திரும்ப அழைத்து வரமுடியும். அப்படி பொருந்தி இருக்குற விண்கலத்தின் மூலம் வீரர்கள் கிளம்பி, பூமியை நோக்கி வரும் போது, விண்கலம், மணிக்கு சுமார் 39000 கி.மீ. வேகத்தில் நகரும். இதே வேகத்தில் பூமியில் வந்து விழுந்தால், விண்கலம் நொறுங்கிடும் அல்லவா? விண்கலங்களில், திடீரென ப்ரேக் போடமுடியாதுப்பா!
அதனால, கொஞ்சம் கொஞ்சமாக, விண்கலத்தின் வேகம் குறைக்கப்படணும். பூமியின் வளிமண்டலத்தின் அருகில் வரும் போது, மணிக்கு 39000 km வேகத்தில் இருந்து, மணிக்கு 800 km என விண்கலத்தின் வேகம் குறையும்.
பூமியின் வளிமண்டலத்துக்குள்ளே, விண்கலம் வரும்போது (இதை, வளிமண்டல மறுநுழைவு எனக் கூறுவர்), அதுக்கு ஒரு சவால் இருக்கு. வாங்க, அது என்ன என்று பார்க்கலாம்.
விண்வெளியில், காற்று இல்லை, ஆனால், பூமியின் வளிமண்டலத்தில் காற்று இருக்கு. இதை நினைவு வச்சிக்கோங்க. இப்போ, ஒரு ‘sponge’ எடுத்துக்குறீங்க. அதுல, உங்களோட கையை வச்சி அழுத்தும்போது, ‘sponge’ அழுந்தும் அல்லவா, அதுபோலத்தான், வேகமா ஒரு பொருள் வளிமண்டலதுக்குள்ள வரும்போது, அதைச் சுற்றி இருக்கும் காற்று மூலக்கூறுகள் எல்லாம், ஒன்றுக்குப் பக்கத்துல ஒன்றாகக் கிட்டக் கிட்ட வரும். அப்படி வரும்போது, அந்தக் காற்று மூலக்கூறுகளின் அருகில், வெப்பம் அதிகமாகும். இது சுமார் 3871.111 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும். இவ்வளவு வெப்பத்தைத் அந்த விண்கலம் தாங்கணும். அதோட, உள்ளே இருக்கும் விண்வெளி வீரர்களுக்கும் எந்த வகையிலும் பாதிப்பு வரக்கூடாது அல்லவா? அதுதான் வளிமண்டல மறு நுழைவில் ஏற்படும் பெரும் சவால். இந்தச் சவாலை எதிர்கொள்ளத்தான், இந்த வெப்பத்தைத் தாங்கும் அளவுக்கு வெப்பக் கவசங்களைச் செய்து, அதை விண்கலத்தின் மேல பொருத்தி இருப்பாங்க!
மேலும் பூமியை நோக்கி வரும்போது, கொஞ்சம் கொஞ்சமாக, விண்கலத்தின் வேகத்தைக் குறைக்க பாராசூட்கள் பயன்படுத்தப்படும். பூமியில் இருந்து 5 – 8 கி.மீ. இருக்கும் போது இரண்டு கட்டமாக பாராசூட்கள் விரிக்கப்படும். பூமியில் இருந்து 8.5 கி.மீ. தூரத்தில் இருக்கும் போது, முதலில், இரண்டு பாராசூட்கள் விரிக்கப்படும். அதோட, பூமியில் இருந்து 5 கி.மீ. தூரத்தில் இருக்கும்போது மேலும் இரண்டு பாராசூட்கள் விரிக்கப்படும். இதனால, விண்கலத்தின் வேகம் வெகுவாகக் குறைந்து பூமியில் பாதுகாப்பாகத் தரை இறங்கும்.
விண்கலங்கள் பொதுவாக தரையிலோ, கடலிலோ இறக்கப்படும். பாதுகாப்பாக இறங்கியதும், பூமியில் இருக்கும் விஞ்ஞானிகள், மருத்துவர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் விண்வெளி வீரர்களை, விண்கலத்தில் இருந்து வெளியேற்றி பத்திரமாக வெளியே கொண்டுவருவாங்க. இப்படித்தான், சுனிதா வில்லியம்ஸும், புட்ச் வில்மோரும் விண்வெளி நிலையத்தில் இருந்து பத்திரமா பூமிக்கு வந்து சேர்ந்தாங்க!