பித்தா பிறைசூடி? நிலவில் மனிதன் காலடி?

பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்த 6 ஆம் வகுப்பு படிக்கும் அரசு, தன் தந்தை தாயன்பனிடம், “அப்பா.. எங்க வகுப்புக்கு வர்ர ஆசிரியருங்க என்னைப் போட்டுக் குழப்புறாங்கப்பா..” என்றான்.
“அப்படியா..? கொஞ்சம் விளக்கமாச் சொல்லேன் அரசு!” என்றார் தாயன்பன்.
“தமிழ் செய்யுள் நடத்தின தமிழாசிரியர், ‘பித்தா பிறைசூடி..’னு
ஆரம்பிக்கற “ஏழாம் திருமுறைச் செய்யுளைச் சொல்லி, பிறை நிலாவைத் தலையில் சிவபெருமான் சூடி இருப்பதாக அதற்கு விளக்கமும் சொன்னார்” என்ற மகனிடம், “இதிலே உனக்கு என்ன அரசு குழப்பம்?” எனக் கேட்டார் அரசுவின் அப்பா தாயன்பன்.
“தமிழ் ஆசிரியர் போன பிறகு வந்த அறிவியல் ஆசிரியர், வானத்தில் உள்ள கோள்களைப் பற்றிப் பாடம் நடத்தினார். நிலவு ஒரு கோள் அல்ல; துணைக்கோள் என்றும், அப்பல்லோ 11 விண்கலம் மூலம் சென்ற மனிதர்கள் நிலவில் இறங்கினார்கள் என்று கூறினார்.
அப்படியானால் அந்த மனிதர்கள் சிவபெருமான் தலைமீதா கால் வைத்தார்கள்? இதுதான் எனக்குக் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது” என்றான் அரசு.
“இதில் வீணாகக் குழப்பிக் கொள்ள எதுவுமில்லை அரசு… தமிழாசிரியர் சொன்ன ‘பித்தா பிறைசூடி…’ என்பது புராண மூடநம்பிக்கைக் கற்பனையை அடிப்படையாகக் கொண்ட செய்யுள். அது தேர்வில் மதிப்பெண் வாங்க மட்டுமே உதவும். ஆனால் நிலவில் மனிதர்கள் கால் பதித்ததாக அறிவியல் ஆசிரியர் சொன்னது உண்மையில் நடந்தேறிய நிகழ்வு. அறிவியல் பூர்வமான நிகழ்வு; இது மதிப்பெண் வாங்க மட்டுமின்றி, வாழ்க்கை முழுவதும் மனதில் வைத்திருக்க வேண்டிய செய்தி.
இது போன்ற பல கதைகளையும் கற்பனைகளையும் நீதான் கார்ட்டூன் சேனலில் பார்க்கிறாயே! அப்படித்தான் இதுவும் ஒரு கதை! அறிவியல் அடிப்படையில் நிரூபிக்கப்பட செய்தியை எப்போதும் பயன்படும் வகையில் மனதில் நிறுத்திக் கொள்வதோடு, பிறரிடமும் பகிர்ந்து கொள்” என்று தன் மகனுக்கு தாயன்பன் விளக்கினார்.
“என் குழப்பம் தீர்ந்தது அப்பா. மிக்க நன்றி” என்றான் அரசு தன் தந்தையிடம்.
“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு”
என்று குறளை வள்ளுவர் கூறியுள்ளாரே! இதையும் மனதில் வைத்துக் கொள்! என்றார் தாயன்பன்.<