ஓவியம் வரையலாம், வாங்க! – அஞ்சல் பெட்டி

தகவல் தொடர்பு என்பது தகவல்களை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரிமாற்றம் செய்வதாகும். கற்கால மனிதர்கள் தான் பார்த்த, அறிந்த ஒன்றைத் தொலைவில் உள்ளவருக்கோ அல்லது இனிமேல் வரப்போகும் சந்ததிகளுக்கோ குகைகளில் சித்திரமாக வரைந்து தெரியப்படுத்தினார்கள். தொலைதூரத் தொடர்பிற்கு மலை மீது நெருப்பை மூட்டி அதிலிருந்து வரும் புகையைக் கொண்டு தகவல்களைப் பரிமாறிக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து சைகைகளின் மூலமாகவும், வாய்வழியே ஒலி எழுப்பியும், தோல் கருவிகளைக் கொண்டு (மத்தளம்) ஒலி எழுப்பி, தகவல்களைத் தெரிவித்துக் கொண்டனர்.
சொற்கள் வரிவடிவம் பெற்று எழுத்துகள் உருவாகிய பின்பு தகவல் தொடர்பில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன. மன்னர்கள் காலங்களில் பறவைகள், விலங்குகள் மூலமாகத் தகவல்களைத் தெரிந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து காகிதங்களிலும், துணிகளிலும் எழுதிய தகவல்களையும் கடிதங்களையும் ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு அல்லது நாட்டிற்குக் வான்வழியாகவும், தரை வழியாகவும், கடல் வழியாகவும் கொண்டு சென்று சேர்த்தனர்.
1786இல் சென்னையில் அஞ்சல் சேவை தொடங்கப்பட்டது. மேலும் சுதந்திர இந்தியாவின் முதல் அஞ்சல்தலை 21 நவம்பர் 1947இல் வெளியிடப்பட்டது. இன்று இந்திய அஞ்சல் துறை உலகின் மிகப்பெரிய துறையாகச் செயல்பட்டு வருகிறது. நாட்டின் எந்த இடத்திலிருந்தும் மற்ற எந்த இடத்திற்கும் அதிகபட்சமாக நான்கு நாட்களில் கடிதங்கள் போய்ச் சேரும்படி செய்கின்றனர்.
அஞ்சல்களை வேகமாகவும், குழப்பமின்றியும் பிரித்து குறிப்பிட்ட பகுதிக்கு அனுப்புவதற்கு வசதியாக அஞ்சல் குறியீட்டு எண்களைப் பயன்படுத்துகின்றனர்.
இக்குறியீட்டு எண் போடும் திட்டம் 1972இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த எண் திட்டத்தில் 6 இலக்கங்கள் இருக்கும். முதல் இலக்கம் அதன் மண்டலங்களைக் குறிக்கும். இரண்டாம் இலக்கம் துணை மண்டலத்தையும், மூன்றாம் இலக்கம் அந்த அஞ்சல் பிரிப்பக மாவட்டத்தைக் குறிக்கும்.
கடைசி மூன்று இலக்கங்கள் அந்த அஞ்சல் வட்டத்தின் அஞ்சல் நிலையத்தைக் குறிக்கும்.
இவ்வாறு சிறப்புப் பெற்ற அஞ்சல் பெட்டியைத்தான் ஆங்கில எழுத்துகளின் உதவியுடன் வரையப் போகிறோம். இதற்குத் தேவையான ஆங்கில எழுத்துகள் H,D,O மற்றும் E.
‘H’ எழுத்தை படத்தில் காண்பது போல் சற்று உயரமாக எழுதவும்.
தேவையற்ற கோட்டை அழித்த பின் ‘H’ எழுத்தின் மேற்பகுதியில் ‘D’ எழுத்தை படுக்கை வசமாக எழுதவும்.
‘D’இன் மேற்பகுதியில் படத்தில் காண்பது போல் ‘O’ எழுத்தை எழுதவும்.
‘H’இன் வலதுபுறத்தில் ‘E’ எழுத்தை படத்தில் காண்பதுபோல் எழுதவும்.
தேவையற்ற கோட்டை அழித்தபின் ‘H’இன் அடிப்பகுதியில் ‘E’ எழுத்தைப் படுக்கை வசத்தில் எழுதவும்.
படத்தில் காண்பதுபோல் ‘டிசைன்’ செய்து கொள்ளவும்.