உலகப் புகழ் பெற்றவர்கள் உக்ரைன் நாட்டின் உள்ஓளி தாராஸ் செவ்சென்கோ (TARAS SHEVCHENKO) (1814-1861)
– சாரதாமணி ஆசான்
முன்னுரை:
அய்ரோப்பாக் கண்டத்தின் இலக்கிய வரலாற்றில் தனக்கெனத் தனி இடம் பதித்தவர் தாராஸ் செவ்சென்கோ. இவர் ஓர் அடிமை விவசாயியின் மகன்; ஆர்த்தெழும் மக்களின் முடிசூடா மன்னன். அடிமையாகப் பிறந்தார்; ஆனால் மனித நேயத்தின் மகத்தான சக்தி. பள்ளிப்படிப்பைத் தொடர்ந்ததில்லை; ஆனால் பேராசிரியர்க்கும் பேரறிஞர்க்கும் புதிய பாதையை வகுத்துச் சென்றவர். அரசப்படைகளால் பத்தாண்டுகள் அடக்கப்பட்டவர்; ஆனால் பத்து வெற்றிப்படைகள் ஆற்றிய பணியைத் தனித்தே நின்று நடாத்திக் காட்டிச் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கச் செய்தவர். இவர் துன்பத்தின் பிடியை மதியால் வென்றவர். இவர் பாதையில் ஒருபோதும் மனிதநேயம் மாண்டுபோனதில்லை. இவரது கவிதைகள் வாழ்வின் வளம் கொழிக்கும் நீர் ஊற்றாகவும், அழியாப் புகழின் நிலைக்களனாகவும் திகழ்கின்றன. இலட்சோப இலட்சம் மக்களின் உள்ளஙகளில் நீடித்த மகிழ்ச்சியின் உறைவிடமாக இவரது படைப்புகள் விளங்குகின்றன. உக்ரைன் நாட்டின் காலக் கண்ணாடியாக, பண்பாட்டின் அடையாள மாகத் திகழ்ந்த இவர் உக்ரைன் நாட்டின் தேசியக் கவிஞராக அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டார்.
பிறப்பும் உழைப்பும்:
இவர் 1814ஆம் ஆண்டு மார்ச் மாதம் 7ஆம் நாள் உக்ரைன் நாட்டில் மோரின்ட்சி (MORYNTSI) கிராமத்தில் கிரிகோரி செவ்சென்கோ என்ற அடிமை விவசாயியின் மகனாகப் பிறந்தார். இளம் வயதிலேயே தனது பெற்றோர் இருவரையும் இழந்தார். அன்னையின் அன்பும், தந்தையின் கவனிப்பும் இவருக்கு எட்டாக் கனியாயிற்று. உக்ரைன் நாட்டின் நடுவில் டினிப்பர் (Dnieper) ஆறு ஓடுகிறது. நாட்டின் வளத்திற்கும் வாழ்விற்கும் ஆதாரமாக விளங்கிய அந்த ஆறு அந்நாட்டின் இயற்கை அரண். வற்றாத நீரைக் கொண்ட அவ்வாற்றின் வலது புறக்கரை போலந்து நாட்டினரால் கையகப்படுத்தப்பட்டிருந்தது. இடதுபுறக்கரை முஸ்கோவி (MUSCOVY) நாட்டினரால் கைப்பற்றப்பட்டிருந்தது. இதனால் உக்ரைன் நாட்டு மக்கள் இவ்விரண்டு அண்டை நாட்டினராலும் ஒடுக்கப்பட்டனர்.
இந்தப் பின்னணியில், அடிமை வம்சத்தில் பிறந்த தாராஸ் செவ்சென்கோ தன் விருப்பப் படி கல்வி கற்கவோ தன் இயல்புக்கு ஏற்ற வண்ணம் வாழவோ முடியவில்லை. ஆனால் எட்டு வயதிலேயே இவர் ஓவியம் வரையும் திறன் பெற்றிருந்தார். சுயசிந்தனை மிக்கவரான இவர் இயல்பாகவே கவிதை இயற்றும் ஆற்றலையும் பெற்றிருந்தார். இளம் வயதிலே இவர் எழுதிய கவிதைகளும் ஓவியங்களும் மக்களுக்குச் சுதந்திர உணர்வை ஊட்டின. இவரது ஓவியங்கள் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன. அதன் பலனாக அவருக்கு வருவாயும் வரப்பெற்றது. அங்ஙனம் சேர்ந்த தொகையைக் கொண்டு பண்ணையில் இருந்த அடிமைத் தளையிலிருந்து 1838ஆம் ஆண்டு விடுவிக்கப் பெற்றார்.
உயர்கல்வியும் பணியும்:
இவருடைய பன்முகக் கலைத்திறனால் இவர் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் (St. Petersburg) கலைக்கழகத்தில் மாணவராகச் சேர்க்கப் பட்டார். இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு கோப்சர் (Kobzar). 1840ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இத்தொகுப்பு இவர் நாட்டின் வரலாற்றையும், கலாச்சாரத் தையும் பண்பாட்டையும் பிரதிபலிப்பவையாக விளங்கியது. இவரது நீண்ட கவிதைத் தொகுப்பு அய்டாமேக் (HAIDAMAKS) 1841ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 1847ஆம் ஆண்டு செவ்சென்கோ கிவ் (KYIV) பல்கலைக் கழகத்தில் கலை அறிஞராக (VISUAL ARTS) அங்கீகாரம் பெற்று பேராசிரியர் பணியை ஏற்றார். இன்று இப்பல்கலைக் கழகம் இவரது பெயரில் இயங்கி வருகிறது. உலகப் புகழ்பெற்ற கல்வி நிறுவனமாகத் திகழ்கிறது.
சிறை வாழ்வு:
இவரது கவிதைகள் தன் நாட்டின் விடுதலைக்கு வித்திடும் வகையில் அமைந்திருந்தன. டிரீம் (Dream), காகசஸ் (CAUCASUS) மற்றும் ஏபிஸ்டில்(EPISTLE) என்ற தலைப்பில் சுதந்திர தாகத்தை ஊட்டும் பல கவிதைகள் இவரால் எழுதப்பட்டுள்ளன. இக்கவிதைகள் உக்ரைன் நாட்டின் அடிமை விலங்கொடிப்பதற்கான புரட்சி விதைகளைத் தூவும் என்று எண்ணிய ஜார் மன்னர் நிகோலஸ் மி என்பவர், இவரை 1847ஆம் ஆண்டு கைது செய்ய ஆணையிட்டார். அதைத் தொடர்ந்து இவர் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சிறைச்சாலையில் பல ஆண்டுகள் அடைக்கப்பட்டார். பாடும் குயிலாக விளங்கிய இவர் சிறையிலிருந் தவாறே பலவிதமாக நிலப்பரப்புகளின் அழகினை ஓவியங்களாக வரைந்தார். தான் வரைந்த ஓவியங்களைத் தொகுப்பாக வெளியிட்டார். அதனால் இவரது தண்டனைக் காலம் அதிகரித்தது. பீட்டர்ஸ் பர்க்கிலிருந்து வெகு தொலைவில் அமைந்துள்ள ஆரல் ஏரியின் கரையில் ஓர்ஸ்கயா (ORSKAYA) என்ற இடத்தில் 6 ஆண்டுகள் வெஞ்சிறையில் அடைக்கப்பட் டார். அந்த ஆறு ஆண்டுகளும் இவரது வாழ்வில் மிகவும் வருந்தத்தக்க நாட்கள். ஏனெனில் இவரது அறிவுபூர்வமான எழுத்துக்களும், எண்ணங்களும் மக்களிடம் சென்று சேர வாய்ப்பில்லை. 1857ஆம் ஆண்டு வரை அதாவது அவரது இறுதிக் காலம் வரை அச்சிறையிலேயே வாடினார். எனினும் அவரது உள்ளத்தில் வீரமும், தீமைக்கு அடிபணியா உறுதியும் நீடித்திருந்தது.
செவ்சென்கோவின் துடிப்புள்ள கவிதைகள்:
சுதந்திர உணர்வுகளை அடக்க நினைத்த அதிகார வர்க்கத்தினரை நோக்கி இவர் தொடுத்த கணைகள்: நீ செய்த தவறுகளை எண்ணி வருந்து! மனிதனாக இரு!
இல்லையேல் இங்கு புரட்சி வெடிக்கும்!
அடக்குமுறையில் அடங்கிக் கிடக்கும் அடிமைகள்
அடிமை விலங்கொடித்து ஆர்த்தெழுவர்!
அங்கு ஒரு தீர்ப்பு வரும்! அப்பொழுது
டினிப்பர் ஆறும் மலைகளும் விடுதலைக்குக் குரல் கொடுக்கும்!
மனித நேயம் கொன்ற உங்களுக்கு உதவ ஒருவரும் முன்வாரார்!
விழிப்புற்ற மக்கள் என்றும் ஓய்வதில்லை!
இவரால் எழுதப்பட்ட மரணசாசனம்:
நான் பிறந்த என் சொந்த உக்ரைன் நாட்டில், வற்றாது ஓடும் டினிப்பர் ஆற்றின் அருகில் எனது கல்லறையைத் தோண்டுங்கள். என் உயிரனைய நாட்டின் விரிந்த நிலப்பரப்பில் வளமான தானிய வயல்களைப் பார்த்துக் கொண்டும், விரைந்து ஓடும் ஆற்றின் ஓசையைக் கேட்டுக்கொண்டும், சுதந்திர ஒளி அமைநதுள்ள சிம்மாசனம் நோக்கிப் பாதை அமையுங்கள். என்னை என் தாய்த்திருநாட்டில் புதையுங்கள். அடிமை விலங்கொடித்து, புதிய சுதந்திரப் பயிரை வளர்த்தெடுங்கள். மகத்தான வலிமையுடைய குடும்பமாக நாட்டு மக்களாகிய நீங்கள் ஒன்று திரளுங்கள். சுதந்திரம் கிடைக்கப் பெற்ற மாந்தர் அனைவரும் இதயம் கனிந்த வார்த்தைகளால் என்னை நினைத்துப் பார்க்கட்டும். இவர் தி டெஸ்டமென்ட் (The Testament) என்ற கவிதை யின் வாயிலாக மேற்கண்ட தன் விருப்பத்தைப் பதிவு செய்திருந்தார். அவரது விருப்பத்தை அவரது நாட்டு மக்கள் நிறைவு செய்தனர்.
உக்ரைன் நாட்டின் காலக்கண்ணாடி:
இவரது மனிதகுல மேம்பாட்டுப் படைப்புகள் பற்றி ஆல்பிரெட் ஜென்சன் என்ற சுவீடன் நாட்டு அறிஞர் குறிப்பிடும்போது தாராஸ் செவ்சென்கோ ஒரு தேசியக் கவி மட்டுமல்ல; அவர் உலகம் தழுவிய மாமேதை. மனித சமுதாயத்தின் ஒளிவிளக்கு என்கிறார். இவர் ஒரு பொதுமக்கள் கவிஞர். இவரது ஓவியங்கள் யாவும் மக்களால் விரும்பி ஏற்றுக்கொள்ளப்பட்ட அதி அற்புதப் படைப்புக்கள். இன்று அவர் உலகம் முழுமையும் அறியப்படும் மாமனிதர். இவரது நினைவைப் போற்றும் வண்ணம் பல நாடுகளில் இவரது உருவச் சிலைகளை அமைத்துள்ளனர். உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் இவரது படைப்புக்கள் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. உயர்ந்த சிறப்புக்குரிய இவரது பெயர் இன்று உக்ரைன் நாட்டின் பல சிற்றூர்களில் உள்ள சாலைகளிலும் நகரங்களிலுள்ள சதுக்கங்களிலும் பூங்காக்களிலும் சூட்டப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் புற எழிலை இவரது ஓவியங்களும் அகப்பண்பாட்டை இவரது கவிதைகளும் என்றென்றும் பறைசாற்றிக் கொண்டுள்ளன.