அய்ன்ஸ்டினின் இறுதிக் காலம்
– மேர்வின்
தன்னுடைய கண்டுபிடிப்பினால் பலர் பாதிக்கப்பட்டு விட்டார்களே என்ற வேதனை அவரை வாட்டி வதைத்தது. மிகுந்த கவலை யுடனும் ஆழ்ந்த யோசனையுடனும் இருந்தார்.
தனக்கு இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி அணுவை நாச வேலைக்குப் பயன்படுத்தாமல் இருப்பதற்கு வழிசெய்ய வேண்டும் என்று தீர்மானித்தார்.
அணுவை ஆக்கவேலைக்குப் பயன்படுத்தத் தூண்டுவதற்கு வழி என்ன என்பதைப் பற்றியே அவர் ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தார்.
நாசவேலைக்கு அணுசக்தியைப் பயன்படுத்து வதால் ஏற்படும் தீமைகளை மக்களுக்குப் புரிய வைக்க வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டார்.
இதனைக் குறித்துதான் அவருடைய மனம் மிகவும் வேதனையில் ஆழ்ந்து, இதற்கு நல்ல வழியைக் காட்ட வேண்டும் என்று தீர்மானித்துச் செயல்பமட ஆரம்பித்தார்.
விஞ்ஞானப் படிப்புப் படிக்க வந்த மாணவர்களிடமும் இந்தக் கருத்தை வலியுறுத்தினார். அவர்கள் தங்களுக்குப் பாடம் போதிக்கும் ஆசிரியரின் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையையும் உன்னிப்பாகக் கவனித்தார்கள்.
பல கல்லூரிகளில் விஞ்ஞானச் சிறப்பைப் பற்றி விளக்கினார். ஆனால் முன்புபோல் எல்லோருக்கும் அவர் பேசுவது பற்றித் தெரிவிக் கவில்லை. ரகசியமாகவே அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து செய்து வந்த சொற்பொழிவினால் அவருடைய உடல் தளர்ந்துகொண்டே வந்தது. 1955ஆம் ஆண்டு அவர் எழுபத்தாறாவது வயதை அடைந்திருந்தார்.
மருத்துவர்களின் அறிவுரைப்படி அவர் வெளியே செல்லும்போது எல்லாம் கம்பளி ஆடைகளை அணிந்துகொண்டுதான் செல்வார். நாட்கள் செல்லச் செல்ல அவர் மிகவும் பலவீனமடைந்தார்.
அவருடைய மருத்துவர் மிகவும் கவலைப்பட்டார். வீட்டில் இருந்து கவனிப்பதை விட மருத்துவமனையில் நன்றாகக் கவனிக்க முடியும் என்று மருத்துவர் கருதினார்.
அதனால் பிரின்ஸ்டன் மருத்துவமனையில் சேர்ந்தார். மிகவும் அக்கறையுடன் அய்ன்ஸ்டி னைக் கவனித்து வந்தார் மருத்துவர்.
மருத்துவமனையில் தன்னைப் பார்க்க வரும் பார்வையாளர்களிடம் அன்பாகப் பேசினார். மருத்துவமனையில் உள்ளவர்களுக்குத்தான் அதிகக் கஷ்டம் கொடுத்துக் கொண்டிருப்பதாகக் கூறினார். அதற்காக மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்.
ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி நள்ளிரவில் அய்ன்ஸ்டினுக்கு அருகில் நர்ஸ் நின்றுகொண்டி ருந்தார். அப்பொழுது அவர் மூச்சு விடுவதற்கு மிகவும் கஷ்டப்படுவது அவளுக்குத் தெரிந்தது.
உடனே மருத்துவரை அழைத்து வருவதற்காக வெளியே சென்றாள். அப்பொழுது அய்ன்ஸ்டின் ஜெர்மன் மொழியில் ஏதோ கூறுவது அவளுடைய காதில் கேட்டது.
அவருடைய படுக்கைக்கு ஓடினாள். அதற்குள் நேரம் கடந்துவிட்டது.
உலக மக்களில் அதிகமான பேர் புரிந்துகொள்ள முடியாத அளவுக்குச் சிந்திக்கும் ஆற்றல் பெற்றிருந்தார்.
உலகின் விஞ்ஞான மேதையாக இருந்த அய்ன்ஸ்டின் உயிர் பிரிந்துவிட்டது.
அய்ன்ஸ்டினுடைய வாழ்நாளில் அவர் எந்த இடத்தில் எது சொல்லி இருந்தாலும் அது மிகவும் மதிக்கப்பட்டது. போற்றப்பட்டது.
ஆனால் கடைசியாக அவர் சொன்ன சொல் நர்ஸுக்குப் புரியாதபடியினால் என்ன சொன்னார் என்பது புரியாமலே போய்விட்டது.
அணுவின் தந்தையாகப் போற்றப்பட்ட அய்ன்ஸ்டின் அகிலத்தாருக்கு இறுதியாக ஒன்றும் கூறாமலே சென்றுவிட்டார்.