சின்னச் சின்ன செய்திகள்
கூகுள்….. இங்கே வாடா….!
குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவதில் ஒரு பொருள் இருக்கவேண்டும். இப்போதெல்லாம் பொருளற்ற பெயர்கள் அதிகம் சூட்டப்படுகின்றன. நியூமராலஜி, நேமாலஜி என கண்டபடி பார்த்து பொருளற்ற பெயர்களை சூட்டும் மூடநம்பிக்கைகள் நிலவும் காலத்தில் புது டெல்லியில் ஒரு வாழ்விணையர்கள் தங்கள் குழந்தைக்குப் பொருத்தமான பெயர் ஒன்றை சூட்டியுள்ளனர்.
வழக்குரைஞரான முனீஸ் சந்தர் ஜோஷி என்பவர் தன் ஆண் குழந்தைக்கு கூகுள் (google) என்று பெயர் சூட்டியுள்ளார். இணையத்தில் எதனையும் தேடவேண்டுமானால் எல்லோரும் தேடு பொறியைதான் நாடுகிறோம். ஜோஷியின் வீட்டில் ஏதாவது காணாமல் போனால் இந்தக் குழந்தை கூகுள் உடனே தேடிக் கண்டுபிடித்துவிடுகிறதாம். அதனால் google என்று பெயர் வைத்தாராம் இந்த வழக்குரைஞர். குழந்தை கூகுள் 3 வயதில் அடி எடுத்து வைத்துள்ளான்.
கால் வைத்தால் மின்சாரம்
தாராபுரம் புனித அலோய்சியஸ் பள்ளி மாணவன் என்.அகிலன் படிக்கட்டில் ஏறி இறங்கும் போதே மின்சாரம் உற்பத்தியாகும் புதிய தொழில் நுட்பத்தை உருவாக்கியுள்ளான். தற்போது 8 ஆம் வகுப்பு படிக்கும் அகிலன் கடந்த ஆண்டு இதனை அங்கு நடந்த அறிவியல் கண்காட்சியில் வைத்தான். படிகள் சற்று சாய்வாக அமைக்கப்பட்டுள்ளது. அதன் மீது ஏறி நடக்கும் போது அழுத்தம் ஏற்படுகிறது. அந்த அசைவினால் படிகளின் கீழே இணைக்கப்பட்டுள்ள சைக்கிள் செயின் மற்றும் சக்கரத்தின் மூலம் டைனமோவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. பெரிய அங்காடி வளாகங்கள், கோவில் படிக்கட்டுகள் போன்ற படிகளில் இதனை அமைத்தால் மின்சாரம் உற்பத்தி செய்யலாமே என்கிறான் அகிலன்.
தோள்கள் இல்லை ; தோற்கமாட்டேன்
பிறக்கும்போதே இரண்டு தோள்களும் இல்லாமல் அதனால் இரண்டு கைகளும் இல்லாமல் பிறந்தவர் மாட் ஸ்டட்ஸ் மேன். வில் வித்தைக்கு தோளும் கையும் தேவை. ஆனால் இவர் கால்களாலும் வாயாலும் வில் வித்தை யைக் கற்றிருக்கிறார். அமெரிக்காவின் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு அணியில் இடம்பெற்றுள்ள மாட் ஸ்டட்ஸ் மேன், இந்த மாதம் லண்டனில் நடந்து வரும் மாற்றுத் திறனாளர்களுக்கான ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ளார். தோள்கள் இல்லையென்றால் என்ன…? தோற்கமாட்டேன் என்கிறார் மாட் ஸ்டட்ஸ் மேன். இதற்குப் பெயர்தான் தன்னம்பிக்கை.
விழிப்பு வியப்பு
10 இலட்சம் காபிக் கொட்டைகளை வைத்து (180 கிலோ) இந்த ஓவியத்தை வரைந்துள்ளார் ரஷ்ய ஓவியர் அர்காடி கிம். 30 சதுர மீட்டர் பரப்பில் இரண்டு வாரங்களில் இந்த ஓவியத்தை வரைந்து முடித்தது ஒரு உலக சாதனை யாகும். மாஸ்கோவில் உள்ள கோர்கி பூங்காவில் இது வரையப் பட்டது. இதற்கு விழிப்பு என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மிதக்கும் தீவு
ஆஸ்திரியா நிறுவனம் ஒன்று மிதக்கும் தீவு ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள். எந்த நீர் நிலைகளிலும் மிதக்கும் இந்தத் தீவு மரங்கள், பூங்கா, சூரிய ஆற்றல் மின்சாரம், சுத்திகரிக்கப் பட்ட நீர் என எல்லா வசதிகளுடன் ஒரு பெரிய பங்களாபோல உருவாக்கப்பட்டுள்ளது. நாம் விரும்பும் எந்த இடத்திற்கும் இதனைக் கொண்டு செல்லமுடியும். 65 இலட்சம் அமெரிக்க டாலர் செலவில் 55 அடி அகலம், 100 அடி நீளம் உள்ள இதனை 18 மாதங்களில் தயாரித்திருக் கிறார்கள்.