மழலையும் மழைத்துளியும்
கடல் அல்லது ஆறு, ஏரி, குளம், சாக்கடை என்று எங்கு நீர் இருந்தாலும் அது சூரிய ஒளியால் ஆவியாகி, உயரே சென்று மேகமாகக் கறுத்து குளிர்ந்த காற்றுப்பட்டதும் மழையாக பொழிகிறது.
மழையானது இயற்கையில் காய்ச்சி வடித்த நீர் என்பர். எனவே அது 100% தூய்மையானது.
ஆனால், அந்த மழை தூறலாக, மழையாக தூவும்போதோ, பொழியும் போதோ, வான்வெளியில் உள்ள காற்றுமண்டல மாசுக்களை முதலில் பெற்று மாசடைகிறது. அதன்பின் பூமியில் வீழ்ந்ததும் அது வீழும் இடத்தைப் பொறுத்து நன்னீராகவோ அல்லது மாசுடை நீராகவோ மாறுகிறது.
செம்மண்ணில் வீழ்ந்தால், செந்நிறம், கரிசல் மண்ணில் வீழ்ந்தால் கரிசல் நிறம், சுண்ணாம்பு பாறைகளில் வீழ்ந்தால் பால் நிறம் என்று நிலத்தின் இயல்பிற்கேற்ப நீரின் தன்மை மாறுபடுகிறது.
மழலைகளும் அவ்வாறே, வசதியுள்ள பெற்றோரோ, ஏழைப் பெற்றோரோ, நல்ல பெற்றவர்களோ, தீய பெற்றோர்களோ, அவர்களின் குழந்தைகள் மழைத்துளியைப் போல மாசற்றே பிறக்கின்றனர்.
பெற்றோர் போலவே பிள்ளை என்பதெல்லாம் வருணாசிரம சிந்தனையின் வெளிப்பாடு. நரிக்குறவர் பிள்ளை இன்றைக்கு மருத்துவ படிப்பு படிக்கும் அளவிற்கு அறிவு பெற்றுள்ளான்.
படித்த பெற்றோரின் பிள்ளைகள் அவன் மதிப்பெண்ணில் பாதி அளவே பெற்றுள்ளனர். சேரியில் பிறந்த குழந்தையை கொண்டு சென்று உயர்கல்வி கற்கும், வசதியான சூழலில் வளர்த்தால் அது மேட்டுகுடியின் பண்பை நடையாலும், உடையாலும், அறிவாலும் பெறும்.
மேட்டுக்குடியில் பிறந்த பிள்ளையைச் சேரி சூழலில் வளர்த்தால் அது அப்படியே வளரும். எனவே, எந்தக் குழந்தையும் நல்ல குழந்தையே! அவர்கள் நல்லவராவதும், தீயவராவதும், கற்பதும் கற்காமல் போவதும், உயர்வதும், தாழ்வதும் சூழ்நிலையைப் பொறுத்ததே!
ஆக, பெற்றோர் எந்தநிலையில் உழன்றாலும் பிள்ளைகளுக்கு நல்ல சூழல் அமைத்து தரவேண்டும். நல்ல நெறிகளைக் கற்பிக்க வேண்டும். நல்லவர்களோடு சேர்ந்து பழகுகிறார்களா என்று தொடக்கத்திலிருந்தே கண்காணிக்க வேண்டும்.
பிள்ளையின் சூழல் பெற்றோரைப் போல மற்றோரையும் பொறுத்திருக்கிறது. எனவே, சுற்றுச் சூழலையும் ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும்.
தாத்தா பாட்டி அளிக்கும் அன்பையும், அறிவையும் குழந்தைகளுக்கு வேறு யாரும் அளித்துவிட முடியாது. எனவே, அவர்களை குடும்பத்துடனே வைத்து, பேரக்குழந்தைகளைப் பேணச் செய்தல் சாலச்சிறந்த. அது இருதரப்பு சிறப்புக்கும் செழுமைக்கும் வழிசெய்யும். பேரப்பிள்ளைகளால் தாத்தா பாட்டியும், தாத்தா பாட்டியால் பேரப்பிள்ளைகளும் மகிழ்வடைவர், மன நிறைவடைவர், இனிமையாய் பொழுது இருவருக்கும் கழியும். தாத்தா பாட்டி உடன் இருக்க இயலாமல் போனால் மட்டுமே பேரப்பிள்ளைகள் பிரிந்திருக்க வேண்டும். மற்றபடி வாய்ப்பிருப்பின் பேரப்பிள்ளைகளுடன் இருப்பதே இருதரப்புக்கும் நலம் சேர்க்கும். பேரப்பிள்ளைக்கு விளையாடிக் காட்டுவதே அவர்களுக்கு உடற்பயிற்சி மனமகிழ்ச்சி.
தாத்தா பாட்டி உடன் இருக்க இயலாத சூழலில் பெற்றோர் அக்கடமையை ஆற்றத் தவறக் கூடாது.
பிள்ளைகள் எப்போதும் பெற்றோரின் நடவடிக்கைகளை ஊன்றிக் கவனிப்பர். எனவே, பிள்ளைகள் மத்தியில் நம் செயல்பாடுகள் மிகச் சரியானதாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
மழலைப் பருவத்தில் கற்பிக்கும் ஆசிரியர்களின் பங்கு அதைவிட முக்கியமானது. காரணம் அந்த பிஞ்சு உள்ளத்தில் ஆசிரியர் சொல்லே கட்டளைகள்! அவர்கள் சொல்வதுதான் உண்மை! அவர்கள் சொல்வதே சரி! (தவறாகக் கூறினால்கூட)
இப்படியொரு உள இயல்பு எல்லாக் குழந்தைகளிடமும் உண்டு. பிஞ்சு மனதில் அவர்கள் என்ன பதிக்கிறார்களோ அதுவே ஆழமாய் வேர் விட்டு வளரும். எனவே, மிகச் சரியானவற்றை, பகுத்தறிவிற்கு உகந்தவற்றை, பண்பானவற்றை, அன்பானவற்றை, உறவானவற்றை உயர்வானவற்றைக் கற்பிக்க வேண்டும்.
தங்களிடமுள்ள தனிப்பட்ட மூடநம்பிக்கைகளை, மத நம்பிக்கைகளை, சாதிய உணர்வுகளை குழந்தைகளிடம் எக்காரணம் கொண்டும் வெளிப்படுத்தக் கூடாது. மனிதநேய கருத்துகளை, உதவி வாழும் சிந்தனைகளை, ஒற்றுமை உணர்வுகளை பிஞ்சு உள்ளங்களில் பிழையின்றி பதிக்க வேண்டும்.
பெரியார் பிஞ்சுகளும் விழிப்போடிருந்து கருத்துகளை உள்வாங்க வேண்டும். யார் கூறினாலும், எவ்வளவு உயர்நிலையில் நின்று கூறினாலும், பாடநூல்களில் வந்திருந்தாலும் அவை சரியா என்று சிந்திக்க வேண்டும். உங்களுக்கு அய்யம் எழுந்தாலும், விளங்கவில்லை என்றாலும் வினா எழுப்பி விளக்கம் கேட்க வேண்டும். விளக்க முடியாத, காரணம் புரியாத, மூடநம்பிக்கையான கதையையும் ஏற்கக் கூடாது.
உடலுக்கும் உள்ளத்துக்கு கேடான எதையும் உண்ணவும் கூடாது. எண்ணவுங் கூடாது. தீயவற்றை பார்க்காதே, கேட்காதே, பேசாதே என்ற அறிவுரையை ஏற்று நடக்க வேண்டும்.
நல்லவற்றை கேள், பார், பேசு என்ற நெறிப்படி நடக்க வேண்டும். சிறுவயது முதலே உலக நடப்புகளைக் கவனிக்க வேண்டும். அதற்கேற்ப விழிப்புடன் வாழப்பழக வேண்டும்.
பெண் குழந்தைகள் ஆசைகளைப் போலவே அனைத்தும் கற்க வேண்டும். தற்காப்பு பயிற்சிகள், ஓட்டம், நீச்சல் என்று பயிற்சி பெறவேண்டும்.
நம் வாழ்வை எந்தக் கடவுளும் தீர்மானிப்பதில்லை; நம் வாழ்வை நாமும், நம்மைச் சுற்றியுள்ளவர்களும், சுற்றிவுள்ளவையுமே தீர்மானிக்கிறார்கள், தீர்மானிக்கின்றன என்ற உறுதியான உண்மையை உள்வாங்கிக் கொண்டு, உறுதியாக முயன்று வாழ்வில் உயரவேண்டும்.
மழைநீர் சாக்கடையில் வீழ்ந்தாலும் பாழ், மழலை சாக்கடை மனிதர்களுடன் சேர்ந்தாலும் பாழ்! பெற்றோரும் பிள்ளைகளும் விழிப்புடன் இருந்து செழிப்புடன் வாழவேண்டும்!.
– சிகரம்