சூழல் காப்போம்-5
தண்ணீர்…தண்ணீர்…!
தண்ணீரை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதுபற்றி பெரியார் தாத்தா என்ன சொல்லியிருக்கிறார் என்று சொல்வதாகச் சொன்னேனல்லவா?
ஈரோட்டில் பெரியார் தாத்தாவின் உறவினர் வீட்டில் விருந்து ஒன்று ஏற்பாடாகியிருந்தது. உணவு முடிந்தது. அந்தக் காலத்தில் தண்ணீர்க் குழாய் எல்லாம் கிடையாது அல்லவா? அதனால் உணவை முடித்து கை கழுவ வந்த தந்தை பெரியார் தாத்தாவுக்கு ஒரு சொம்பில் வைத்து நீர் ஊற்றிக் கொண்டிருந்தார் உறவினர் சிறுவர் ஒருவர். கை கழுவத் தேவையான அளவைவிட அதிகமாக நீர் ஊற்றிக் கொண்டே இருந்திருக்கிறார் அந்தச் சிறுவர். உடனே அதைக் கண்டித்த பெரியார் தாத்தா, தண்ணீர் சும்மா கிடைக்குதுங்கிறதுக்காகத்தானே நீ உன்பாட்டுக்கு ஊத்திக்கிட்டே இருக்கிற. இதே எண்ணெயாக இருந்திருந்தா இப்படி ஊத்துவியா? என்று கேட்டிருக்கிறார்.
வெகு எளிதான இந்தக் கேள்வியில் எவ்வளவு பொருள் அடங்கியிருக்கிறது பார்த்தீர்களா? அதிகச் சிரமமின்றி கிடைக்கிறது என்பதற்காகவும், காசில்லாமல் கிடைக்கிறது என்பதற்காகவும் தண்ணீரை வீணாகச் செலவழிப்பதா? தண்ணீர் மாதிரி செலவழிக்கிறான் பணத்தை! என்று ஊதாரித் தனமாகச் செலவழிப்பதைப் பற்றிச் சொல்வார்கள். சிக்கனம் என்பது தேவைக்கு செலவு செய்வது. அது பணமாக இருந்தாலும் சரி! தண்ணீராக இருந்தாலும் சரி! அனைத்தும் ஒன்றே என்பதுதான் பெரியார் தாத்தாவின் கருத்து!
சரி கடந்த இதழில் இன்னொன்றையும் சொல்லியிருந்தேனே! செய்து பார்த்தீர்களா? ஒரு நாளைக்கு, காலை முதல் இரவு வரை எது எதற்குத் தண்ணீரைப் பயன்படுத்துகிறோம்? எவ்வளவு பயன்படுத்துகிறோம்? அதில் எவ்வளவு பயனுடையது? எவ்வளவு விணானது? என்று பட்டியல் போட்டுப் பார்க்கச் சொன்னேன் அல்லவா?
சரி, இப்போது பார்ப்போம். முதலில் பல் துலக்குவதைப் பற்றி பார்ப்போம். காலை எழுந்து சோம்பல் முறித்தபடி சென்று கையில் பற்பசையையும் (Tooth Paste), , பல் துலக்கும் குச்சியையும் (Tooth brush) எடுப்பதற்கு முன்பாகவேகுழாயிலிருந்து தண்ணீரைத் திறந்து விடுவோம். பின்பு கண்ணாடியைப் பார்த்தபடி எதையோ யோசித்துக் கொண்டு தண்ணீரில் பல்துலக்கும் குச்சியை ரெண்டு ஆட்டுஆட்டி கழுவிவிட்டு பற்பசையைப் பிதுக்கி வைப்போம். அதுவும் ஒரு சிறு அளவு போதுமானது. ஆனால் நாமோ தொலைக்காட்சி விளம்பரத்தில் காட்டுவதுபோல அந்த குச்சியின் நீளத்துக்கு முழுவதுமாக வைத்து மீண்டும் தண்ணீரில் காட்டுவோம். அதில் பாதி அடித்துச் செல்லப்பட்டிருக்கும். பிறகு பொறுமையாக 2-_3 நிமிடங்கள் பல் தேய்ப்போம். பின்னர் பற்குச்சியைக் கழுவி வைத்துவிட்டு, இரண்டு கை நீரைப் பிடித்து முகத்தில் அடித்து, வழலை (Soap) போட்டு தேய்த்து மீண்டும் நீரால் முகம் கழுவுவோம்.
துணியை எடுத்துத் துடைத்து, முகம் பளீரென இருக்கிறது என்று நாம் நிறைவு கொண்ட பின் குழாயை மூடிவிட்டுக் கிளம்புவோம். இப்போது நினைத்துப் பாருங்கள். கிட்டத்தட்ட 5 நிமிடம் குழாயிலிருந்து நீர் கொட்டிக் கொண்டேயிருக்கும். அதிலும் குறைவாய்த் திருகினால் நமக்குப் பிடிக்காது. முழுதாக, வேகமாகக் கொட்டும்படிதான் நாம் திறந்து பயன்படுத்துவோம். அந்த 5 நிமிடத்தில் எவ்வளவு தண்ணீர் வீணாகியிருக்கும்? அளவுகூட நமக்குத் தெரியாது. ஆனால் இதையே குவளை(விரீ)யைப் பயன்படுத்தியிருந்தால் நமக்குத் தேவை 2 குவளை, அதிகபட்சம் 3 குவளைத் தண்ணீராக இருக்கலாம்.
இதையெல்லாமா போய்க் கணக்கு பார்ப்பது? என்று யோசிக்காதீர்கள். இது ஓர் ஆள் மட்டும் செய்வதில்லை. ஒவ்வோர் ஆளும் செய்வது! நம் வீட்டில் நால்வர் இதேபோல் செய்தால் எவ்வளவு வீண்! நாடு முழுக்கச் செய்தால்.. யோசித்துப் பாருங்கள்… காலையில் பல்துலக்கவே எவ்வளவு வீண் செய்கிறோம் என்று தெரியும்! இப்படியே கணக்குப் பாருங்கள். குளிக்கிறோம் என்ற பெயரில்… கழிக்கிறோம் என்ற பெயரில்… சுத்தம் செய்கிறோம் என்ற பெயரில் எவ்வளவு நீரை வீணாக்குகிறோம். மேற்கண்டவை எல்லாம் அவசியம் தினமும் செய்யப்பட வேண்டியவைதான். ஆனால் முறையாக!
ஆற்றில் குளிப்போர், அருவியில் குளிப்போர் எவ்வளவு நேரம் வேண்டுமானாலம், குளிக்கலாம். அவர் சுத்தம் செய்து கொண்டு, அழுக்காக்கிய நீரை, மீனும் செடியும், பாறையும், கோரையும் வடிகட்டி சுத்தம் செய்துவிடும். ஆனால் நாம் ஷவரில் குளிக்கிறோம் என்று தேவையான அளவுக்கு மீறிப் பயன்படுத்துகிறோம்.
பாத்திரம் கழுவுகிறோம்; வீடு கழுவுகிறோம்; மகிழுந்து வாகனம் கழுவுகிறோம் என்று குழாயில் நீரைப் பயன்படுத்துகிறோம். அதிலும் வாகனம் கழுவுவதற்கு குழாயில் நீரைப் பீய்ச்சியடித்து விளையாடுவோமே! அப்பப்பா அதனால் எவ்வளவு வீண் தெரியுமா? அதையே ஒரு ஸ்பான்ச் வைத்தோ, துணிவைத்தோ வாளியில் தண்ணீரை நிரப்பித் துடைத்தால் குறைவான தண்ணீரில் நிறைவான சுத்தத்தைப் பெறலாம்.
இதைச் சொல்லும்போது எனக்குப் பழைய எம்.ஜி.ஆர். படம் ஒன்று நினைவுக்கு வருகிறது. குலேபகாவலி என்றொரு படம். அதில் ஒரு போட்டி வைப்பார்கள். சகதி நிறைந்த ஓரிடத்தை போட்டியாளர் கடக்கவேண்டும். முழங்காலுக்குக் கீழே சகதியும் சேறும் அப்பிக் கிடக்கும். அதைத் தாண்டி வந்ததும் ஒரு கொட்டாங்குச்சியில் (தேங்காய் ஓட்டில்) தண்ணீர் கொடுப்பார்கள். அதைக் கொண்டு சுத்தம் செய்துகொள்பவர் வெற்றியடைவார். எல்லோரும் அந்த நீரை வேகமாகக் கழுவப் பார்ப்பார்கள். முடியாது! ஆனால் அதைக் கையால் தொட்டுத் தொட்டுக் கழுவும் கதைநாயகன் போட்டியில் வெற்றிபெறுவான். அப்படியென்றால் என்ன பொருள் அவ்வளவு சகதியையும் கழுவ அந்த கொட்டாங்குச்சி அளவு தண்ணீர் போதும் என்பதுதானே!
அது மட்டுமல்ல.. கழிவறையில்கூட நவீன அய்ரோப்பிய பாணி (இருக்கையில் அமர்வதுபோன்ற) கழிவறையைவிட, முந்தைய பம்பாய் பாணி கழிவறை தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தக்கூடியது என்கிறார்கள். காரணம் பிளஷ் செய்கிறோம் என்று நாம் அழுத்திவிட்டால் அந்தத் தொட்டியில் இருக்கும் நீர் முழுமையாக வெளியேறிவிட்டுத்தான் நிற்கும்.
வேறு வழியே இல்லை! நம்முடைய சூழலை நம்முடைய எதிர்காலத்துக்காகக் காக்க வேண்டுமானால் இதைப்பற்றியெல்லாம் யோசித்து நாம் செயல்பட்டே ஆகவேண்டும். நீங்கள் மட்டுமல்ல… இதையே உங்கள் நண்பர்களும் பழக்கப்படுத்திக் கொள்ளுமாறு செய்வது பெரியார் பிஞ்சுகளாகிய உங்கள் கடமை.
– பிஞ்சண்ணா