குழந்தைகளின் தலைகள் பெரிதாகிக்கொண்டே போகிறது ஏன்?
யாழினி சொல்லும் கதைகள்………
குழந்தைகளின் தலைகள் பெரிதாகிக்கொண்டே போகிறது ஏன்?
[குழந்தைகளுக்கு கதைகள் சொல்வது இல்லாமலே போய்விட்டது தொலைக்காட்சியும், கணினியும் குடும்பத்தைப் பிரித்துவிட்டன. ]
குழந்தைகளுக்கு கதைகள் சொல்வது இல்லாமலே போய்விட்டது. தொலைக் காட்சியும், கணினியும் குடும்பத்தைப் பிரித்துவிட்டன. எல்லோரும் ஒன்றாய் அமர்ந்து பேசுவது கிட்டத்தட்ட காணாமல் போய்விட்டது. அம்மா, அப்பா கதைகள் சொல்ல, அதைக் கேட்கும் குழந்தைகள் அது ஏன்? எனக் கேள்விகள் கேட்க, அதிலிருந்து தகவல்கள் கிடைத்தன. பின் இதன் தொடர்ச்சியாய் குழந்தைகளும் கதைகள் சொல்லும். அப்படிக் சொன்ன கதைகளை எத்தனைப் பெற் றோர்கள் கேட்டனரோ? ஆனால் யாழினியின் தாய் ஸ்ரீதேவி அதைக் கவனமாய்க் கேட்டு எழுதியும் வைத்துவிட்டார்.
யு.கே.ஜி. படிக்கும் போது யாழினி தன் முதல் கதையைச் சொல்லி யுள்ளாள். யாழினி சொல்லிய கதைகளைத் தொகுத்து தந்திருக்கிறார்கள் இயல்வாகைப் பதிப்பகத்தினர். காடு பெருசா அழகா இருந் துச்சு என்ற அந்தத் தொகுப்பிலிருந்து இரண்டு கதைகள் இங்கே பிஞ்சு களுக்காக……..
ஒரு ஊர்ல ஒரு மரம் இருந்துச்சாம். மரத்துக்கு கீழ இலை விழுந்துச்சாம். அங்க ஒரு ஆடு வந்துச்சாம். வெயில் சுட்டுச்சாம், பூக்கள் சோர்ந்து போச்சாம், ஆட்டுக்கு ரொம்ப பசியாம். இலைகளை கடிச்சி சாப்பிட்டுச்சாம். பசி தீர்ந்து போச்சாம். ஆட்டுக்கு தூக்கம் வந்துச்சாம். அது மரத்தோட நிழல்ல படுத்து தூங்குச்சாம். தூக்கத்துல கனவு வந்துச்சாம். என்ன கனவு அது? ஆடு கனவு அது.
கனவுல ஆட்டுக்குட்டி ஒரு காட்டுக்கு வெளாடப் போச்சு. அப்ப அங்க ஒரு மான் குட்டியப் பார்த்துச்சாம். ஆடு அதுகிட்டப் போயி மானே மானே என்னோட வெளாட வர்றியான்னு கேட்டுச்சாம். மானும் வர்றேன்னு சொல்லிச்சாம். அப்போ ஆட்டுக்குட்டிக்கும் மான் குட்டிக்கும் ஒரே பசியாம். பக்கத்துல ஒரு திராட்சைத் தோட்டம். அதை பாத்துக்கிற ஆள் வீட்டுக்குள்ள இருந்து வந்தாராம்.
ஆனா ஆட்டுக்குட்டியும், மான்குட்டியும் ஒளிஞ்சிட்டே திராட்சைத் தோட்டத்துக்குப் போய் வயிறு நிறைய சாப்பிட்டாங்களாம். தோட்டத்தை நாம பாதுகாத்தும் எப்படி சாப்பிட்டாங்கன்னு அந்த ஆளுக்கு ஆச்சரியமா இருந்துச்சாம். அவங்க ஆட்டோட வீட்டுக்குப் போய் நீயா சாப்டேன்னு கேட்கவும் ஆடு நான் சாப்பிடலைன்னு சொல்லிச்சாம். திடீர்னு ஆடு கண்ண முழிச்சிப் பாத்துச்சா அங்க யாருமே இல்லை.
அட இவ்வளவு நேரம் நாம கனவு கண்டிருக்கோம்னு மனசுக்குள்ள நெனச்சு தானா சிரிச்சிடுச்சாம்.
ஒருநாள் ஒரு குழந்தையின் தலை வெடித்துச் சிதறியது. அதனால் அந்தக் குழந்தை இறந்துவிட்டது. மாலைப்பொழுதில் இரண்டாவது குழந்தையின் மூளை சிதறி மண்டை பொசுங்கி விட்டது. மறுநாள் மூன்று குழந்தைகள் கம்ப்யூட்டரில் வேலை செய்து கொண்டிருந்தனர். பின்னர் அவர்களது தலையும் வெடித்து இறந்தனர். ஏன் இப்படி நடந்தது?
குழந்தைகள் அப்படி இறக்கும் பொழுது அவர்களது கண், இமை, காதுகள், மூக்கு, உதடு, கைகள், கால்கள், கை நகம், கால் நகம் எல்லாம் தனித்தனியாகப் பிரிந்து உடல் இல்லாமல் வெடித்துச் சிதறியது. இதைப் பார்த்து அம்மா அப்பாவுக்கு ஒரே பயம். ஆனால் அவங்களுக்கு காரணம்தான் தெரியலை.
பல வீட்ல ஒரே ஒரு குழந்தைதான் இருந்தது. அப்பா அம்மா வேலைக்குப் போனாங்க. நிறைய காசு வெச்சிருந்தாங்க. அதனால விளையாட கீபோர்ட், கம்ப்யூட்டர், கேம்ஸ் நிறைய வாங்கிக் கொடுத்திருந்தாங்க. ஸ்கூல், ஸ்கூல் விட்டா டியூசன் அது முடிஞ்சு டிபன். அப்புறம் திட்டு வாங்கிட்டே தூக்கம்.
டிபனுக்கு பின்னால தூங்கும் வரைக்கும் அம்மா கதை படிச்சிக் காட்டினா நல்லா இருக்கும். அம்மாவுக்கு ஏதாவது வேலை எப்பவும் இருக்கும். டென்சனாவே இருப்பாங்க. ஏதாச்சும் கேட்டா கத்துவாங்க. அதனால நாங்க கம்ப்யூட்டர் அல்லது கீபோர்டு வெச்சிகிட்டு யோசிப்போம். அவங்கெல்லாம் வெளியில விளையாடுனதே இல்லை. கம்ப்யூட்டர்ல சின்னச் சின்ன வேலைகள் செய்யவும் குழந்தைகள் கத்துக்கிட்டாங்க. கம்ப்யூட்டரும் குழந்தைகளும் ரொம்பவும் நெருக்கமான பிரண்ட்ஸ் ஆனாங்க. கம்ப்யூட்டர் போலவே ஸ்பீடா சிந்திக்கிறதுக்கும், மறக்காம இருக்கவும் கம்ப்யூட்டர் சொல்லிக் கொடுத்துச்சு.
கம்ப்யூட்டரே உலகம்னு இருந்த குழந்தைகளோட தலைகள் பெரிசா வளர ஆரம்பிச்சது, ஏன்னா குழந்தைகள் கம்ப்யூட்டர் கிட்ட அறிவை வாங்கி மூளையில் போட்டு வெச்சாங்க. அதனால மூளையும் வளர வளர மண்டைக்குள்ள நிறைய இடம் தேவைப்பட்டது.
மண்டை பெரிசாச்சு. குழந்தைங்களோட உடல் சின்னதாகவும், தலை பெரியதாகவும் ஆக புது மனுஷங்க மாதிரி வித்தியாசமா இருந்தாங்க. இதெல்லாம் கவனிக்க அப்பா அம்மாவுக்கு நேரமே இல்லை. தலை பெரிசா இருந்த குழந்தைங்களோட டைரியில மிஸ் ஏன்னு எழுதி அனுப்பினாங்க. அதையும் பேரண்ட்ஸ் பார்க்கலை.
கொஞ்ச நாள் கழிச்சி குழந்தைங்க கம்ப்-யூட்டர் மாதிரி ஈசியா எக்சாம் பாஸ் பண்ணினாங்க. பெரிய அறிவாளியா இருந்தாங்க. அவங்களைப் பார்க்கத் தான் யாருக்குமே புடிக்கலை. மழை, காடு சுத்திப் பார்க்-கிறது, மல்லிகைப் பூவோட வாசனை, தட்டான் பிடிக்கிறது, நீச்சல், அருவியில் குளிக்கிறது இப்படி எல்லாத்தையும் குழந்தைகள் மறந்து சோகமாயிட்டாங்க.
வேற வழியில்லாம கம்ப்யூட்டரே கதின்னு கிடந்ததால ஒருகாலத்துக்கு அப்புறம் தலை பெரிதாகி ஒவ்வொரு குழந்தைக்கும் தலை வெடித்துச் சிதற குழந்தைகள் ஒவ்வொன்னா செத்துட்டே வந்தாங்க.
கொஞ்சம் குழந்தைங்க தான் மிச்சம் இருந்தாங்க. இதை நான் ஏன் சொல்றேன்னா, குழந்தைகள் வெளாடணும், மாலையில் ஸ்கூல் விட்டு வந்ததும் சாப்பிடணும்; சைக்கிள், விளையாட்டு இப்படி ஜாலியா இருக்கணும். குழந்தைகளுக்கு என்ன பிடிக்கும்னு தெரியணும். குழந்தைகள் கிட்ட நல்ல பழக்கம் மட்டும்தான் இருக்கணும், கெட்ட பழக்கங்கள் இருக்கக்கூடாது. இனிமேலாச்சும் அப்பா_அம்மா- குழந்தைங்களோட ஜாலியா இருப்பாங்களா?