பெரியார் 1000 விறு விறு வினா விடைப் போட்டி
பெரியார் பிஞ்சு மற்றும் பகுத்தறிவாளர் கழகம் இணைந்து பெரியார் பிஞ்சுகளுக்கான பெரியார் 1000 வினாவிடைப் போட்டியை கடந்த 06.09.2012 முதல் 09.09.2012 வரை நடத்தியது. தமிழ்நாடு, புதுவை உள்ளிட்ட 33 வருவாய் மாவட்டங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள். இது ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கானது.
வினாத்தாள் ஏ.பி.சி.டி.ஈ. என்று அய்ந்து பிரிவுகளாக தயாரிக்கப்பட்டு, போட்டித் தேர்வுகள் (Competition Exam) போல விதிமுறைகள் அமைக்கப்பட்டு நடத்தப்பட்டது. இது மாணவர்கள் பலருக்கு புதிது என்பதால், முதலில் சிறிது தடுமாறினாலும், உடனடியாக சுதாகரித்துக் கொண்டு குறித்த நேரத்திற்குள் எழுதி முடித்துவிட்டனர்.
தேர்வெழுதிய அனைத்து மாணவர்களுக்கும் தேர்வு மய்யத்திலேயே பங்கேற்றதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மாவட்ட வாரியாக முதல் மூன்று இடங்களுக்கான தேர்வு முடிவுகள் 13.09.2012 அன்றும் 1800 சிறப்புப் பரிசுகளுக்கான முடிவுகள் தந்தை பெரியாரின் பிறந்த நாளான 17.09.2012 அன்று www.periyarquiz.com என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டது.
முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு அந்தந்த மாவட்ட பகுத்தறிவாளர், திராவிடர் கழகங்களின் சார்பில் முதல் மூன்று பரிசுகளும் அளிக்கப்பட்டன. அடுத்து, வெளியிடப்பட்ட 1800 மாணவர்களுக்கு, மாவட்ட கழகம், பகுத்தறிவாளர் கழகம் சார்பில் பரிசுகளும், சான்றிதழ்களும், ஆறு மாதம் பெரியார் பிஞ்சு சந்தாக்களும் அளிக்கப்பட்டன.
தேர்வுக்குப் படித்த, எழுதிய, பரிசு பெற்ற, சான்றளிக்கப்பட்ட அத்துணை மாணவர்களும் ஒரே மனதாக, அடுத்தாண்டும் இதுபோன்ற தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்கிற விருப்பத்தை தெரிவித்திருக்கிறார்கள்.