உள் மனதில் உறுதி ஏற்போம்
– சிகரம்
பிஞ்சுகளுக்கு மட்டுமின்றி பெரியவர்கள் உள்ளத்திலும் ஆழப் பதிக்க ஒரு அரிய கருத்தை இங்குக் கூற விரும்புகிறேன்.
உறுதி கொடுப்பது, உறுதியெடுப்பது என்ற இரண்டு செயல்கள் எல்லோர் வாழ்விலும் உண்டு. நான் இதைத் தருவேன், அதைச் செய்வேன், அங்கு வருவேன், இங்கு இருப்பேன் போன்றவை உறுதி கொடுப்பதாகும்.
நான் மது அருந்த மாட்டேன், புகைப்பிடிக்க மாட்டேன், பொய் சொல்ல மாட்டேன், தீயன செய்யேன் என்று தனக்குத் தானே உறுதியெடுப்பதும் உண்டு.
ஆனால் உறுதி கொடுக்கப்பட்டவை யானாலும், உறுதியெடுக்கப்பட்டவையானாலும் ஒருவரால் நிறைவேற்றப்படுகிறதா? என்றால், பெரும்பாலும் இல்லை. இதற்கு என்ன காரணம்?
கொடுக்கின்ற உறுதியாயினும் எடுக்கின்ற உறுதியாயினும் உள்ளார்ந்து அமையாததே அதற்குக் காரணம். அது என்ன உள்ளார்ந்து? அது வேறு ஒன்றும் இல்லை. நாம் வழக்கத்தில் சொல்வதுதான். உளப்பூர்வமாக என்று சொல்கிறோமே அதுதான்.
ஒருவர் விபத்தில் சிக்கி, இரத்தம் ஏற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். நம்மிடம் அந்த உதவி வேண்டப்படுகிறது. அவருக்கு இரத்தம் அளிக்க நாம் முயற்சிக்கிறோம். அப்போது நான்கு இடங்களில் கேட்போம். இல்லையென்றால், கிடைக்கவில்லை, வேறு இடத்தில் முயற்சி செய்யுங்கள் என்போம்.
அதே விபத்து நம் பிள்ளைக்கு, தந்தைக்கு, அக்காளுக்கு ஏற்பட்டிருந்தால் நம்முடைய இரத்தம் தேடும் முயற்சி எப்படியிருக்கும்? எப்படியாவது, யாரிடமாவது, உடனடியாக பெறவேண்டும் என்ற முனைப்பு முழுமையாக இருக்கும், தீவிரமாக இருக்கும், விரைவாக இருக்கும், துடிப்பாக இருக்கும். இதற்குக் காரணம் என்ன?
யாரோ விபத்தில் சிக்கி இரத்தம் வேண்டும்போது உதவத்தான் நினைக்கிறோம். அவருக்காக இரத்தம் தேடத்தான் எண்ணு கிறோம், அதற்கான முயற்சியும் செய்கிறோம். ஆனால், தன் தந்தைக்கு இரத்தம் தேவைப் படும்போது செய்யும் முயற்சி, முனைப்பு அப்போது இல்லையே ஏன்?
தந்தைக்கு தேடும்போது இரத்தம் பெற வேண்டும் என்ற உறுதி உளப்பூர்வமாக, முழுமனதோடு உள்ளார்ந்து இருப்பதே அதற்குக் காரணம்.
உள்ளார்ந்து எடுக்கப்படும் முடிவுகளே உறுதியாக நிறைவேறும். எண்ண அளவில் எடுக்கப்படும் முடிவுகள் (உறுதிகள்) உறுதியாக நிறைவேறுவது இல்லை.
நம்முடைய மனதில் இருவகை உண்டு. ஒன்று உள் மனது (ஆழ்மனது), மற்றொன்று புற மனது. புற மனதில் வழக்கமான எண்ணங் கள், காட்சிகள், உறுதிகள் பதிவு செய்யப்படும். ஆழ்மனதில்தான் உறுதியான எண்ணங்கள் பதிவாகும்.
நாம் மேற்கொள்ளும் உறுதிகள் எந்த மனதில் பதிவாகிறது என்பதைப் பொறுத்தே அதன் உறுதிப்பாடு, தீவிரம், முனைப்பு, முயற்சி, நிலைப்பு அமையும்.
புற மனது எண்ணங்கள் நமது உணர்வு களோடு பின்னிப் பிணைவதில்லை. ஆழ்மனது எண்ணங்கள் நம் உணர்வுகளோடு இரண்டறக் கலக்கின்றன. இதனால், புற மனது முடிவுகள் உணர்வு பூர்வமாய் இருக்காது. ஆழ் மனது எண்ணங்களே உணர்வுபூர்வமாய் இருக்கும்.
புகைப் பிடிப்பதையோ, மது அருந்து வதையோ ஒருவர் விடவேண்டும் என்று உறுதியெடுக்கும்போது அவர் உள்ளார்ந்து ஆழ்மனதில் அந்த முடிவை எடுத்தால் அவர் உணர்ச்சி வசப்படுவார். அப்படியெடுக்கப்படும் முடிவு கட்டாயம் நிறைவேறும்.
ஆனால், நாம் பெரும்பாலும் புற மனதாலே முடிவுகளை மேற்கொள்கிறோம். மது அருந்தக் கூடாது என்று நாம் முடிவு எடுக்கும்போதே, வேண்டுமானால் எப்போதாவது அருந்தலாம் என்று ஒரு பக்கத்தில் ஒரு எண்ணம் நம்முள் எழும். ஆனால் உள்மனதில் முடிவு மேற்கொள்ளும்போது, சபலங்கள், மாற்றுச் சிந்தனைகள் எழவே எழாது.
எனவே, தீயவற்றை கைவிட வேண்டுமாயின் ஆழ்மனதில் முடிவுகள் உறுதியாக மேற்கொள் ளப்பட வேண்டும். ஆழ்மனதில் எப்படி முடிவு எடுப்பது? ஆழ்மனதை எப்படி அறிவது? இந்த எண்ணம் உங்கள் மனதில் எழும்.
ஆழ்மனது எது என்று தேடி அங்கு நம் எண்ணத்தை பதிக்க முடியாது. நாம் ஆழ்மனது எது என்று தேடவேண்டியதும் இல்லை; அறிய வேண்டியதும் இல்லை. நாம் எடுக்கின்ற முடிவுகளை உறுதியாக எடுத்தாலே அது ஆழ்மனதில்தான் பதியும்.
ஆழ்மனதில் நம் எண்ணம் பதிவதை நாம் உறுதியெடுக்கும்போது, உணர்வுபூர்வமாக எடுப்போம்; உறுதி மேற் கொள்ளும்போது, அந்த உறுதி உணர்வோடு கலந்ததால், உறுதியுடையதாய், இரட்டைச் சிந்தனை, சமபலமற்றதாய் இருக்கும். உறுதியெடுக்கும்போதே அது நம் உள்ளத்திற்குத் தெரியும்.
நாள்தோறும் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யும்போதே அந்த உறுதி எப்படிப்பட்டது என்பது நம் உள்ளத் திற்கே தெரியும். அந்த முடிவை உறுதியாக எடுத்தோமா? அல்லது எண்ண அளவில் எடுத்தோமா? என்று நமக்கே தெரியும்.
உறுதியாகத்தான் அந்த முடிவை எடுத்தோம் என்றால் அது ஆழ்மனதில் பதிந்துள்ளது என்று பொருள். அப்படியெடுத்திருந்தால் கட்டாயம் நீங்கள் நாள்தோறும் நடைப்பயிற்சி மேற்கொள்வீர்கள். எண்ண அளவில் முடிவு எடுத்திருந்தால், ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி நடைப் பயிற்சியை ஒவ்வொரு நாளும் தள்ளிப் போடவே செய்வீர்கள்.
மாணவர்கள் அன்றாட பாடத்தைத் தவறாது படிக்கவும், தீயப் பழக்கங்களைச் செய்யாமல் இருக்கவும், கைவிடவும், அதிகாலை நேரத்தில் எழுந்திருக்க வேண்டும் என்பதும் ஆழ்மனது முடிவுகளால் எடுக்க வேண்டும். அதற்கு சபலமில்லா உறுதியான முடிவை எடுக்க வேண்டும்.
மாணவர் பருவத்திலே ஆழ்மனதில் உறுதிகளை மேற்கொள்ளும் வழக்கத்தை மேற்கொண்டு செயல்களைச் செய்தால், அவர்கள் வாழ்க்கையில் எண்ணிய சிறப்புகளை எட்டுவர். இதையே வள்ளுவர்
எண்ணியர் எண்ணியாங் கெய்துவர் எண்ணியர்
திண்ணிய ராகப் பெறின் (குறள்) என்றார்.
திண்ணியர் என்றால், உள்மனதில் உறுதி மேற்கொண்டவர் என்று பொருள். திண்மை என்றால்_குலையா, சபலமில்லா, தளர்ச்சியில்லா உறுதி என்று பொருள். எனவே, திண்ணிய உறுதி கொள்வோம்; எண்ணியது எட்டி வாழ்வோம்!