உலகம்
குன்றுக் குடில்கள்
அஜர்பைஜான் நாட்டின் கிழக்கில் உள்ளது கண்டோவான் என்ற மலைக் குன்றுகள் சூழ்ந்த கிராமம். இங்குள்ள மக்களின் வீடுகள் கட்டப்படவில்லை; இயற்கையாகவே அமைந்த அந்தக் குன்றுகளிலேயே அமைக்கப்பட்டுள்ளது.
மலைக் குன்றுகளின் வடிவங்களுக்கேற்ப அவற்றில் கதவு, ஜன்னல், படுக்கை ஆகியவற்றைப் பொருத்தி அமைத்துள்ளார்கள். ஒரு வீட்டில் இருக்கவேண்டிய அனைத்து அமைப்புகளும் இவ்வீடுகளில் உண்டாம்.
உலகில் வேறெங்கும் இது போன்ற முற்றிலும் இயற்கையான குன்றுக் குடில்கள் இல்லை என்பதே இதன் சிறப்பம்சம். இவற்றின் நடுவில் ஒரு 5 நட்சத்திர தங்கும் விடுதியும் இருக்கிறது.
இது நடை’பாலம்’
தண்ணீருக்கு மேலே கட்டப்பட்ட பாலங்களைத்தான் நாம் பார்த்திருக்கிறோம். இது தண்ணீருக்குள் அமைக்கப்பட்டுள்ள பாலம். ஆமாம், நடைபாலம்.
சாலைகளில் நடப்போருக்கு நடைபாதை போல இது தண்ணீருள்ள பகுதியில் நடப்போருக்கு உதவும் நடைபாலம். நெதர்லாந்து நாட்டில் உள்ள 17 ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட டச்சுத் துறைமுகப் பகுதியில் முற்றிலும் மரத்தால் இந்த நடைபாலம் அமைக்கப்பட்டுள்ளது.