குட்டிச் செய்திகள்
குட்டிக்கால் பூனை
முன்ச்கின் என்ற இந்தப் பூனை பழங் காலத்திலிருந்தே நம்முடன் இருக்கும் பூனை யினத்தைச் சேர்ந்ததல்ல; இது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட புதுவகைப் பூனை. இதன் கால்கள் மிகவும் குட்டியாக இருக்கும்.
உடல், தலை, நிறம் போன்றவை வழக்கமான பூனை யைப் போன்று இருக்கும். 1980களில் இருந்து அமெரிக்காவில் இவ்வகைப் பூனைகள் தொடர்ந்து வளர்க்கப்பட்டுவருகின்றன.
1995ல் பன்னாட்டுப் பூனை இனக் குழு இப்பூனைக்கு சில நிபந்தனைகளுடன் அங்கீகாரம் அளித்தது. ஆனால்,1940 களிலேயே இங்கிலாந்திலும், 1956ல் ரஷ்யாவிலும் 1970ல் அமெரிக்காவிலும் ஒரு சில பூனைகள் காணப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
குட்டிப் பறவை
சிட்டுக்குருவியைப் பார்த்திருக்கிறீர்களா? அது குட்டியாகத்தானே இருக்கும். அதைப் போலவே ஒரு குட்டிப் பறவைதான் இந்த ஹம்மிங்பேர்ட் (humming bird). 3 லிருந்து 5 அங்குல நீளமே உள்ள இப்பறவை பல வண்ணங்களில் இருக்கும்.
நடுவானில் வினாடிக்கு 12 முதல் 80 தடவை வரை தன் சிறகுகளை அடித்துக் கொண்டே பறக்கும். இப்படி மிக வேகமாக சிறகுகளை அடிப்பத லேயே அதிலிருந்து ஒரு ஓசை எழுகிறது. அதுவே இப்பறவையின் பெயர்க் காரணமாகிவிட்டது. இப்பறவைகளில் சில பின்னோக்கியும் பறக்குமாம்.