இஸ்லாமியர்களின் எழில் நகரம் இஸ்தான்புல்
இஸ்தான்புல்
பழமை எழில் வாய்ந்த பயணிகளின் சொர்க்கம் இஸ்தான்புல் என்று கூறுவர். கி.மு.மூவாயிரத்திலேயே மக்கள் வாழ்ந்த இடம் இஸ்தான்புல். கி.மு. ஏழாம் நூற்றாண்டில் அதாவது இன்றைக்கு 2700 ஆண்டுகளுக்கு முன்னர் பைசாஸ் அரசர் பைசாண்டியம் எனும் பெயரில் குடியேற்றம் ஒன்றை உருவாக்கினார். அந்தக் குடியேற்றம் பின்னர் ரோமானியர்களின் ஆட்சியின் கீழ் வந்தது.
ரோமானியப் பேரரசர் கான்ஸ்டான்டைன் என்பவர் கி.பி. 306ஆம் ஆண்டு பைசாண்டி யம் நகரினை ரோமன் பேரரசு முழுமைக்கும் தலைநகர் ஆக்கினார். அதுமுதல் இந்நகருக்குக் கான்ஸ்டான்டிநோபிள் எனும் பெயர் ஏற்பட்டது.
கமால் பாட்சா
கான்ஸ்டான்டிநோபிள் ஆசியா, அய்ரோப்பா, ஆப்பிரிக்கா ஆகிய மூன்று கண்டங்களுக்கு இடைப்பட்ட ஒரு வணிக நகரமாக விளங்கியது. எனவே பல நூற்றாண்டுகள் பாரசீகர்கள், அராபியர்கள் முதலானோர் இடைவிடாது தாக்குதல் நிகழ்த்தினர்.
கி.பி.1453ல் உத்மானியத் துருக்கியர்கள் இந்த நகரத்தைக் கைப்பற்றி ஆட்சி செய்தனர். கான்ஸ்டான்டிநோபிளை உத்மானியத் துருக்கியர் கைப்பற்றியதால் அங்கு வாழ்ந்த அறிஞர்கள் அதனை விட்டு வெளியேறி அய்ரோப்பாவின் பல பகுதிகளுக்கும் சென்று ஏற்படுத்திய அறிவுப் புரட்சிதான் அய்ரோப்பாவில் மறுமலர்ச்சி இயக்கம் ஏற்பட வழி வகுத்தது.
இதனைக் கைப்பற்றிய துருக்கியர்கள் கான்ஸ்டான்டிநோபிளுக்கு இஸ்தான்புல் எனும் புதுப்பெயர் அளித்தனர். அது உத்மானிய சுல்தான்களின் தலைநகரமாக விளங்கியது. அதுமுதல் அரசியல், கலை, பொருளாதாரம், பண்பாடு ஆகிய பல துறைகளிலும் பொது முதன்மை பெற்ற நகரமாயிற்று.
கான்ஸ்டான்டிநோபிள் எனும் இஸ்தான்புல்லில் சுல்தான்களுக்கு எதிராக விடுதலைப் போர் 1923ஆம் ஆண்டு ஏற்பட்டுத் துருக்கி நாடு குடிஅரசு ஆனது. அதன் தலைவராக கமால் பாட்சா என உலகம் அறிந்த புரட்சியாளர் துருக்கியை நவீனத்துக்குக் கொண்டு சென்ற கமால் ஆட்டா துர்க் நாட்டின் தலைநகரை இஸ்தான்புல்லில் இருந்து அங்காரா நகருக்கு மாற்றினார். எனினும் இஸ்தான்புல் புறக்கணிக்கப் படாமல், ஒதுக்கப்படாமல் அதன் பெருமை பெருகிக்கொண்டேதான் சென்றது.
ஏற்ற காலம் இது
இஸ்தான்புல்லில் ஜூன் முதல் செப்டம்பர் வரை வெயில் சுட்டெரிக்கும். டிசம்பர் முதல் பனிமழை பொழியும், குளிர்வாட்டும் காலம் நிலவுகிறது. இஸ்தான்புல் செல்லச் சுற்றுலா செல்ல ஏப்ரல் முதல் ஜூன் வரை, செப்டம்பர் முதல் அக்டோபர் வரை அய்ந்து மாதங்கள்தான் ஏற்றவை.
இயற்கைப் பாலம்
ஆசியா, அய்ரோப்பா, ஆப்பிரிக்கா ஆகிய பெருகண்டங்களை இணைக்கும் இயற்கையான பாலமாக இஸ்தான்புல் விளங்குவதால் உலகின் பெரும் நகரங்களிலிருந்து விமானம் பல வந்து செல்கின்றன. இதனுடைய இயற்கைத் துறைமுகத்தின் பெயர் கோல்டன் ஹார்ன். இஸ்தான்புல் நகரைச் சுற்றிப் பார்த்து மகிழ தொடர்வண்டி, பேருந்து, வாடகைக்கார், டிராம், படகு ஆகிய பல போக்குவரத்து வசதிகள் உள்ளன.
தோப்கபி அரண்மனை
உத்மானிய அரசாட்சியின் அடையாளமாக தோப்கபி அரண்மனை விளங்குகிறது. இந்த அற்புத எழில் மாளிகையின் அடுக்கடுக்கான முற்றங்கள், அரச மரபுப் பெண்டிர் தனித்து வாழ்ந்த அந்தப்புரம் எனும் உப்பரிகைகள், அழகுமிக்கத் தோட்டங்கள் ஆகியவற்றைக் கண்கொட்டாமல் கண்டு மகிழலாம். அக்கால மனிதர்களின் ஆடை, அணிகலன்கள், உத்மானியர், இசுலாமியர் ஆகியவர்களின் கலைப்பொருட்கள், பீங்கானில் வடிவமைத்த அழகிய, பயன்படுத்திய பொருட்கள் ஆகியன அந்நாளின் சுல்தான்களின் கருவூலங்கள்.
தோல்மபஹஸ் அரண்மனை
சுல்தான்களின் மற்றொரு வாழிடம் தோல்மபஹஸ் அரண்மனை. இதை எழுப்பியவர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த அப்துல் மெசித் என்பவராவார்.இந்த மாளிகைக்கு உள்ள சிறப்பு பெருமை துருக்கியப் புரட்சியாளர் முஸ்தபா கமால் பாட்சா வாழ்ந்ததும், 1938ல் உயிர் நீத்ததும் இந்த அரண்மனை யில்தான்.
உத்மானிய அரசர்கள் இஸ்தான்புல் கடல் பகுதியைக் காக்க ருமெலியக் கோட்டைக் கட்டினர். பெரிய பெரிய பீரங்கிகள் பல இக்கோட்டையையும் நகரையும், கருங்கடல், அய்ரோப்பியக் கடல் வழியே தாக்குதல் நிகழ்த்தக் கூடிய எதிரிகளிடமிருந்து காத்துள்ளன.
இஸ்தான்புல் பல நூற்றாண்டுகள் கொண்டதால் அங்கே பல அருங்காட்சியகங்கள் உள்ளன. பண்டைய கிரேக்க, ரோமானிய, எகிப் திய, துருக்கியச் சிற்பங்கள் உள்ளிட்ட கலைப் பொருட்கள் வைக்கப் பட்டுள்ளன. சிறுவர் கள் கண்டு மகிழ வேண்டிய அருங்காட் சியகம், துருக்கியக் கவிஞரும், எழுத்தாளருமானகனே அகின் அவர்களால் இரண்டாயிரத்து அய்ந்தாம் ஆண்டு அமைக்கப் பெற்ற பொம்மைகள் கண்காட்சியாகும்.
உலகம் முழுமையும் உள்ள குழந்தைகள் விளையாடப் பயன்படுத்தும் சுமார் ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட பொம்மைகள் இங்கே உள்ளன. ரோமானியப் பேரரசர் கான்ஸ்டான்டின் கட்டிய கட்டடம் ஹகியா சோபியா புனித ஞான தேவாலயம். ரோமானியப் பேரரசின் வல்லமையையும், செழிப்பையும் பறைசாற்றும் வகையில் காண்பவரை வியக்க வைக்கும் கட்டிடக் கலைத்திறனுடன் அமைந்துள்ள தேவாலயம் இது.
உலகில் வழிபாடு செய்யப் பயன்பட்ட தேவாலயங்கள் பல காட்சிக் கூடங்களாக மாறியுள்ளன. அவற்றில் ஒன்று புனித சேவியர் தேவாலயம். அதனுள் அழகிய புகழ்பெற்ற வண்ண ஓவியங்கள் உள்ளன. இஸ்தான்புல் நகரின் இரண்டாவது முதன்மை யான கிறித்துவ தேவாலயம் இது.
மசூதிகள்
உலகில் மசூதிகள் நகரம் என்று கூறப்படுவது இஸ்தான்புல். துருக்கிய இசுலாமியக் கட்டடக் கலை வல்லுநரான மிமார்சினான் என்பவர் கட்டிய சுலைமானியா மசூதி மிகவும் அழகானது. சுல்தான் அஹமத் மசூதியின் உட்புறத்தில் நீலநிற ஓடு, சதுரக்கல் ஆகியவற்றினால் பதினே ழாம் நூற்றாண்டில் வடிவமைக்கப்பட்டது. நகரின் புனித மசூதி என அயூப் மசூதியைக் கருதுவர். உத்மானிய மன்னர்களின் முடிசூட்டிக்கொள்ளும் நிகழ்வுகள் இங்கே நடைபெற்றன.
நிலத்தடி நீர்த்தொட்டி
பதினாறு நூற்றாண்டுகளுக்கு முன் கட்டப்பெற்ற நிலத்தடி நீர்த்தொட்டி விடுகதை யினைப் போல் காண்பவர்களைத் திகைக்கச் செய் யும் ஜஸ்பீனியன் எனும் அரசனால் 336 தூண்க ளுடன் அமைந்துள்ளது. இந்த நீர்த்தொட்டி ஹகியா சோபியா தேவாலயம் எதிரில் அமைந்துள்ளது.
வணிக வளாகம்
இஸ்தான்புல் நகரின் மிக முதன்மையான மிகப் பழமையான வணிக வளாகம் உலகின் மிகப் பெரியதாகக் கருதப்படுவதும், மேற்கூரை யுடன் கூடியதுமாகும். இங்கு அறுபத்தைந்து கடைவீதிகள் உள்ளன. பல நூற்றாண்டுகளாக வணிகர்கள் சந்தித்து, வாணிபம் செய்யுமிடம். இங்கு எப்போதும் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.இங்கே எகிப்திய பசார் என்பதில் நூற்றுக்கணக்கான வாசனைத் திரவியங்கள் கிடைக்கும்..
துருக்கியின் கலை, இலக்கியப் பண்பாட்டு அடையாளம் மட்டுமல்லாது, வாணிப நகரமாகவும், புகழ்பெற்ற சுற்றுலா மய்யமாகவும் இஸ்தான்புல் விளங்குவதும் அய்ரோப்பாவின் மூன்றாவது சிறந்த நகரமாகவும் உலக அளவில் எட்டாவது அழகிய நகரமாகவும் விளங்கும் நகரமாகும்.