சாதனை செய்ய வயது ஒன்றும் தடையில்லை
அன்புள்ள பெரியார் பிஞ்சுகளே! திராவிடர் திருநாளாம் பொங்கல் தமிழ் புத்தாண்டு கொண்டாடிக் கொண்டிருந்த நன்னாளில் நமக்கெல்லாம் மகிழ்ச்சியூட்டும் செய்தி ஒன்று வந்தது. அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் வில்லோ என்ற ஆரம்ப பள்ளியில் 4-ம் வகுப்பு படிக்கும் பிரணவ் கல்யாண் என்ற 9 வயது சிறுவன் மைக்ரோசாஃப்ட் கணினி நிறுவனம் நடத்தும் கணனித்துறை நிபுணத்துவத்துவ சோதனை தேர்வில் (ASP.Net) மிகவும் குறைந்த வயதிலேயே எழுதித் தேர்ச்சி பெற்றுவிட்டான் என்ற செய்தி தான் அது!
இந்த தேர்வில் வென்றதற்காக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பிரணவ் கல்யாணுக்கு தொழில் நுட்ப நிபுணர் சான்றிதழ் “Microsoft Certified Technology Specialist” கொடுத்து பாராட்டி இருக்கிறது. இந்த சாதனைச் சிறுவன் பிரணவ் கல்யாண், யாரோ அல்ல? நம்ம பையன் தான்! ஆம், தமிழகத்தில் ஜல்லிக்கட்டிற்கு புகழ்பெற்ற பாலமேட்டை சொந்த ஊராக கொண்டவர்.
அமெரிக்காவில் உள்ள வங்கி ஒன்றில் இவரது தந்தை அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். தனது விபரம் தெரிந்த பருவத்தில் இருந்து சதுரங்க விளையாட்டு போட்டிகளில் மிகுந்த ஆர்வமாக இருந்து வருபவர். இவருக்கு கால்பந்தாட்டம், மற்றும் கிரிக்கெட்டிலும் ஆர்வம் உண்டு, அமெரிக்க குழந்தைகள் நினைவாற்றல் பயிற்சிக்கான கணித தேனீ (Math Bee) போட்டிகளில் கலந்து கொண்டு தன்னுடைய 7-ம் வயதில் இரண்டு முறை பரிசுகளை வென்றவர் சிறுவயதில் தனது தந்தை கல்யாண் அவர்களிடம் கணிதம் மற்றும் கணினி பயிற்சி பெற்றார்.
ஓய்வு நேரங்களில் பள்ளிப்பாடங்களைத் தவிர கணினி மென்பொருள் நுட்பம் குறித்த இவரது ஆர்வத்தை பார்த்த இவரது அன்னை விசாலாட்சியும் இவரது அத்தை நதியாவும் பிரணவின் சாதனைக்கு பெரிதும் உதவியாக இருந்துள்ளனர். மைக்ரொசாஃப்ட் நிறுவனம் நடத்தும் நிபுணத்துவ தேர்வு குறித்து இவரது மாமா சதீஷ் மூலம் அறிந்து கொண்டு அந்த தேர்வில் கலந்து கொள்ள இரண்டு வருடமாக பல பயிற்சிகள் எடுத்தார், ஆர்வம், பயிற்சி மற்றும் காலம் தவறாத உழைப்பின் காரணமாக ஜனவரி 12-ம் தேதி இவர் ASP.Net தேர்வில் வெற்றிபெற்று மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் “Microsoft Certified Technology Specialist” என்ற பட்டத்தை வென்றார்.
மைக்ரொசாஃப்ட் நிறுவனம் நடத்தும் இந்த தேர்விற்கு அபார நினைவாற்றல் மற்றும் கணினி தொழில் நுட்பம் தெரிந்து இருக்கவேண்டும். காலம் தவறாமை மற்றும் கடின உழைப்பு பிரணவை இந்த சாதனை படைக்க காரணமாக இருந்துள்ளது. இதற்கு முன்பு குறைந்த வயதில் இந்தச் சாதனையைச் செய்தவர் அரபு நாட்டைச் சேர்ந்த 12 வயது சிறுவர்! அவரையும் விஞ்சி 9 வயதிற்குள் புகழ் பெற்றுள்ளார் பிரணவ்.
நாமும் காலம் தவறாமை ஆர்வம் மற்றும் கடின உழைப்புடன் இது போன்ற சாதனைகளை செய்து சிறுவன் பிரணவ் கல்யாண் போல் பெற்றோருக்கும் நமது ஊருக்கும் பெருமை பெற்றுத்தரலாம்.
செல்வகுமார் & சரவணா ராஜேந்திரன்