சூழல் காப்போம்-10
– பிஞ்சண்ணா
தாள் (Paper) பயன்படுத்துவதில் நாம் மேற்கொள்ள வேண்டிய கவனம் குறித்து கடந்த இதழில் பார்த்தோம். அதில் இரண்டு பக்கங்களும் ஒரு தாளில் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதும், எழுதாத பக்கங்களைத் தொகுத்து தனிக் குறிப்பேடு தயாரித்துப் பயன்படுத்தலாம் என்பதும்கூட சரி. ஆனால் நமக்கு வந்த அஞ்சல் உறைகளைக் (Cover)கூட திரும்பப் பயன்படுத்த வேண்டும் என்பது கொஞ்சம் கஞ்சத்தனமாகத் தெரியவில்லையா? என்று சில பிஞ்சுகளுக்கு சந்தேகம்.
கஞ்சத்தனத்துக்கும் சிக்கனத்துக்கும் வேறுபாடு உண்டு. இதோ பெரியார் தாத்தா சொல்கிறார்.
தேவைக்கு அதிகமாக செலழிப்பது ஊதாரித்தனம்,
தேவைக்கு செலவழிக்காதது கருமித்தனம் தேவைக்கு ஏற்ப செலவழிப்பது சிக்கனம்
எனவே தேவைக்கு ஏற்ப எதுவும் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் சிக்கனத்தின் அடிப்படை.
ஆனால் எல்லாவற்றையும் பணத்தைக் கொண்டு மட்டும் அளவிட முடியாது. கையில் நிரம்பக் காசு இருக்கிறது என்பதற்காக வீணடிக்க வேண்டுமா என்ன? கடிதத்தைப் பிறர் பிரித்துப் படிக்காமல் இருக்க வேண்டும், விண்ணப்பங்கள்/படிவங்கள் மீது அழுக்கோ கறையோ படியாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் அஞ்சல் உறைகள் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவான செய்திகளை அதனால்தான் அஞ்சல் அட்டைகளில் எழுதி அனுப்புகிறார்கள்.
அப்படி முக்கியமான கடிதங்களோ, படிவங்களோ சுற்றி வரும் அஞ்சல் உறைகளைப் பிரித்ததும், உள்ளே உள்ள செய்திகள் என்ன என்பதில்தான் நாம் கவனம் செலுத்துவோம். அதன்பிறகு அஞ்சல் உறையின் தேவை அழிந்து போகிறது. அதைப்பற்றி நாம் கண்டுகொள்ளவே மாட்டோம். எவ்வளவு புதிய அஞ்சல் உறையாகப் போட்டு அனுப்பினாலும் கடிதம் போய்ச் சேர்ந்தபின் அதற்கு மதிப்புக் கிடையாது என்பதை நாம் உணர வேண்டும்.
இதைவிடக் கவனம் செலுத்த வேண்டிய பகுதி என்றால் அவை திருமண அழைப்பிதழ்கள். இருவருக்குத் திருமணம் நடக்கவிருக்கிறது. வந்து பங்கேற்று சிறப்பியுங்கள் என்ற செய்தியைத் தாங்கி வருவதுதான் அழைப்பிதழின் நோக்கம். அந்த அழைப்பிதழுக்கு நாம் செய்கிற செலவும், அதில் ஆகிற வீணும் கணக்கிடக்கூடியதா? மனம் ஒப்பக் கூடியதா? ஒரு சாதாரண அழைப்பிதழ் இன்று ரூ.50 முதல் ரூ.100 வரை.
இன்னும் பகட்டான அழைப்பிதழ்கள் எனப்படுபவை ரூ.500, 1000 என்றும் புதிய தொழில்நுட்பங்கள் அடங்கியதெனில் 2000, 3000 என்றும் செலவிடப்படுகிறது. நான் சொல்வது ஒரே ஒரு அழைப்பிதழின் விலை. அந்தத் திருமணம் முடிந்த பிறகு யாருக்கு அது பயன்படப் போகிறது?
யார் அதை எடுத்து வைக்கப் போகிறார்கள்? நிச்சயம் அது குப்பைக்கூடைக்குப் போகக்கூடிய ஒன்று. அப்படிப்பட்ட ஒன்றுக்கு ஆயிரக்கணக்கில், நூற்றுக்கணக்கில் செலவு செய்வது கிரிமினல் குற்றமல்லவா? பொருளைச் செலவழித்தால் எப்படி கிரிமினல் (குற்றவியல்) வழக்கு ஆகும். அது சிவில் வழக்குதானே என்று கேட்கிறீர்களா?
வெறும் பொருட்செலவு என்று மட்டும் இதை விட முடியுமா? அதற்குப் பயன்படுத்தப்படுகிற அட்டை, தாள் இவற்றை வீணடிப்பதை என்ன சொல்வது? அதற்கு அழிக்கப்படும் மரங்களுக்கு யார் பொறுப்பு?
அதேபோன்றவை வாழ்த்து அட்டைகள்! வாழ்த்துகளைப் பகிர இன்று எளிமையான சூழலைக் கெடுக்காத எத்தனையோ வழிகள் வந்துவிட்டன. ஆனாலும் வாழ்த்து அட்டைகளுக்கும் பெருமளவிலான மரக்கூழ் பயன்படுத்தப்படுகிறது. வெறும் அஞ்சலட்டையில் வாழ்த்துச் சொல்லிவிடலாம். அதற்கா இவ்வளவு செலவு செய்வது? பணம் இருக்கிறது என்பதற்காக இவ்வளவு செலவு செய்தால் என்ன பொருள்? தேவைக்கு அதிகமாக பணம் இருக்கிறது என்ற பகட்டைக் காட்டக்கூடிய இழிசெயல் தானே இது!
ஒவ்வொரு நாளும் எத்தனை அழைப்பிதழ்களை, அவை சுற்றிவந்த அஞ்சல் உறையை சாதாரணமாகக் கிழித்துப் போடுகிறோம். இனியாவது அவற்றைக் குறித்து யோசிப்போமா? பயனற்றதென்று எதுவும் கிடையாது. இவ்வாறு முழுமையாகப் பயன்படுத்தப்பட்டபின் எடைக்குப் போடும் காகிதங்கள்கூட மறுசுழற்சி செய்யப்பட்டு, கூழாக்கப்பட்டு தரம் குறைந்த தாள்களாகவோ (துண்டறிக்கை போன்றவற்றிற்குப் பயன்படும்), பொருட்களைப் பாதுகாப்பாக அனுப்புவதற்கான அட்டைக் கட்டுகள், பெட்டிகளாகவோ வடிவமைக்கப்பட்டுப் பயன்படுகின்றன. அப்படித்தான் யோசிக்க வேண்டும். அப்படி யோசித்தால்தான் நாம் நம் பூவுலகைக் காக்க முடியும்.
(காப்போம்)