பதில் இல்லை
அம்மா என்று சொல்லிக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான் முத்துக்குமார். வந்திட்டியாப்பா! நல்லா படிச்சியாடா தம்பி என்று கேட்டுக்கொண்டே அடுப்பை ஊதினாள் தாய் தனலெட்சுமி.
நல்லா சாப்பிட்டியா பத்திரமா போனியான்னு ஒருநாள் கூட கேக்கமாட்டியே! என்றான் முத்துக்குமார்.
டியூசனுக்கு நேரமாகிடுச்சி நீ வேகமா கிளம்பு என்றவுடன் அம்மா போயிட்டு வாரேன் என்று சொல்லிக் கிளம்பிச் சென்றான் முத்துக்குமார்.
போகும் வழியில் தனது நண்பன் சேக்முகமதுவையும் அழைத்துச் சென்றான் வழியில் சேவியரும் சேர்ந்து கொண்டான்.
மூன்று பேரும் டியூசன் வாசலை அடையும்போது, ஆசிரியர் தமிழ்அன்பன் வாங்க… வாங்க என்றார். அன்பான ஆசிரியர் தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவர். பெரியாரால் படிப்பினை பெற்றோம், பெரியாரால் அரசு உத்தியோகம் பெற்றோம் என்ற நன்றி மறவாதவர். பாடத்தைத் துவங்கினர்.
இடைஇடையே பெரியாரின் சிந்தனைகளைச் சொல்லி மாணவர்களை உற்சாகப்படுத்துவார்.
பாடத்தை முடித்துவிட்டு சிறிது நேரம் மாணவர்களிடம் மனிதநேயத்தைப் பற்றியும் இயற்கை வளங்களை பாதுகாப்பது பற்றியும் விவரிப்பது தமிழ் அன்பனின் வழக்கம். டியூசன் முடிந்தது.
மாணவர்கள் மூன்று பேரும் ஆசிரியருக்கு நன்றி சொல்லிவிட்டு சாலையோரமாக நடந்து சென்றனர்.
சிறிது தூரத்தில் சாலையோரமாக ஒருவர் விழுந்து கிடந்தார். மாணவர்கள் ஓடிச்சென்று பார்த்தனர். மண்டையில் பலத்த காயம் ஏற்பட்டு மயக்க நிலையில் கிடந்தவரைசேவியர் முதலில் துணிச்சலுடன் திருப்பிப் பார்த்தான்.
முத்துக்குமார்… நம்ம கணேஷ் அண்ணன்டா என்றான் பதற்றத்துடன். அப்போது இருவர் இரண்டு சக்கர வாகனத்தில் வேகமாக வந்து நின்றனர்.
இருவரும் கணேஷ் வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்காரர்கள் அய்யப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து இருந்தார்கள்.
அண்ணே! நம்ம கணேஷ் அண்ணனை யாரோ வண்டிக்காரங்க அடிச்சுப்போட்டுவிட்டு போயிட்டாங்க வாங்க! மருத்துவமனையில் கொண்டுபோய் சேர்க்கலாம் என்றான் முத்துக்குமார்.
தம்பி நாங்க அய்யப்பனுக்கு மாலை போட்டிருக்கோம். இந்த நேரத்தில் அவரை நாங்க தொட்டு தூக்கக்கூடாது என்று சொல்லியபடியே இரண்டு சக்கர வாகனத்தைக் கிளப்பிவிட்டனர்.
அந்தப் பக்கம் எதேச்சையாக ஆட்டோக்காரர் அறிவழகன் வந்துவிட மாணவர்கள் சொன்ன தகவலை அறிந்து அரசு மருத்துவமனைக்கு கணேசைக் கொண்டு சேர்த்தார்கள்.
மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர் உடனடியாக இவருக்கு இரத்தம் செலுத்த வேண்டும் கணேஷ் சட்டையை கழட்டுங்க என்றார்.
முத்துக்குமார் வேகமாக கழட்டும்போது அவருடைய சட்டையில் இருந்த அடையாள அட்டை கீழே விழுந்தது.
அதில் கணேஷின் இரத்தம் O+ என்று எழுதப்பட்டிருந்தது முத்துக்குமார் மருத்துவரிடம் காண்பித்தான். மருத்துவர் O+ இரத்தம் இப்போது இருப்பில் இல்லை. உடனே இந்த O+ குரூப் இரத்தம் உள்ளவர் யாராவது இருந்தால் அழைத்துவாருங்கள் என்று கூறினார்.
உடனே சேக்முகமதுவும் சேவியரும் எங்களுக்கும் இரத்தம் O+ தான் உடனே எடுத்துக்கொள்ளுங்கள் என்றனர்.
ஆனால் அதற்குள் கணேசின் இதயத்துடிப்பு நின்றுவிட்டது.
அறிவழகனும் மாணவர்களும் ஆழ்ந்த வருத்தத்துடன் கண்ணீர் சிந்திவிட்டு நடந்த விசயத்தை ஊருக்குள் சென்று உடனே தெரிவித்தார்கள்.
அய்யப்பன் கோவிலுக்கும், ஓம்சக்தி கோவிலுக்கும் மாலை அணிந்து விரதம் மேற்கொண்டவர்கள் கணேசின் இறுதி ஊர்வலத்திற்கு வரவில்லை.
முத்துக்குமார் தன் தாயாரிடம் கேட்டான், அம்மா! ஏன் கணேஷ் அண்ணன் இறந்ததற்கு நீங்கள் போகவில்லை?
அப்பா அய்யப்பன் கோவிலுக்கு மாலை போட்டு இருக்காரு. அதனால நாம போகக்கூடாதுப்பா என்றார்.
அப்படின்னா நாளைக்கு நம்ம வீட்டுல யாராவது இறந்தா அவங்க யாரும் நம்ம வீட்டுக்கு வரமாட்டாங்கதானே என்றான் முத்துக்குமார்.
பதில் சொல்ல முடியாமல் விழிபிதுங்கி நின்றாள் தாய் தனலெட்சுமி.
– செந்தமிழ் யோகராசு, அறந்தாங்கி