குழந்தை ரோபோ
உயிருள்ள குழந்தைகளின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் குழந்தை ரோபோவை அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக அறிவியலாளர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். ஹான்சன் ரோபோட்டிக்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த டேவிட் ஹான்சன் என்பவர் கலிபோர்னியா பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்த புதிய வகை ரோபோவை உருவாக்கியுள்ளார்.
ஒன்றரை வயது குழந்தையைப் போன்று வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரோபோவுக்கு டியாகோ சான் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.உயிருள்ள குழந்தையைப் போன்றே சிரிப்பது,அழுவது,கோபப்படுவது, குழப்பம் மற்றும் மகிழ்ச்சி ஆகிய உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வகையில் இந்த ரோபோவை உருவாக்கியிருக்கின்றனர்.
உணர்ச்சிகளைக் காட்டும் முக அமைப்பை வெளிப்படுத்தும் வகையில் நெகிழும் தன்மையுள்ள பிளாஸ்டிக்குகள் பயன்படுத்தப்பட்டு இந்தக் குழந்தை ரோபோவின் முகம் உருவாக்கப்பட்டுள்ளது.உணர்ச்சிகளைக் காட்டும் உலகின் முதல் குழந்தை ரோபோ இதுவாகத்தான் என்றார்கள் லண்டன் செய்தியாளர்கள்.
போரில் ஈடுபடுத்த உருவாக்கப்படும் ரோபோக்களை விட, இதுபோன்று மனித உணர்ச்சிகளை வெளிப்படுத்தக்கூடிய ரோபோக்கள்தான் மிகவும் முக்கியமானது.இந்த ரோபோவுக்கு செயற்கை நுண்மதியை ஏற்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறோம் என்கிறார் இதனை உருவாக்கிய டேவிட் ஹான்சன்.இவர் சொல்வதும் சரிதானே…!