சட்டப் பேரறிஞர்
நம் நாடு சுதந்திரம் அடைந்த சில நாள்களில் அரசியல் நிர்ணய சபை கூடியது. அக்கூட்டத்தில் அரசியல் சட்டத்தை வரைவதற்காக வரைவுக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அம்பேத்கர் அந்தக் குழுவின் தலைவரானார். அவருக்கு உதவி செய்ய உறுப்பினர்கள் ஏழு பேர் தேர்வு செய்யப்பட்டனர். அந்த எழுவரில் ஒருவர்கூட அம்பேத்கருக்கு உதவி செய்யவில்லை.
ஆனாலும், அம்பேத்கர் தளர்ந்துவிடவில்லை. அதிக ஆர்வத்துடன் செயல்பட்டு அரசியல் சட்டம் முழுவதையும் தனி மனிதராக இருந்து வகுத்துக் கொடுக்க முயன்றார். அரசியல், வரலாறு, பொருளாதாரம், சட்டம் என அனைத்துத் துறைகளையும் கற்றுத் தேர்ந்தவர் அம்பேத்கர். பல மாதங்கள் கடுமையாக உழைத்துத் திறம்படச் செய்து முடித்தார்.
அம்பேத்கர் வரைந்த அரசியல் சட்டம் 6 மாதங்கள் பொதுமக்களின் முன்பு வைக்கப்பட்டது. பின்பு, அரசியல் நிர்ணய சபை கூடியது. அரசியல் சட்டத்தின் விதிகள் ஒவ்வொன்றையும் படித்து அவற்றிற்கு விளக்கம் கொடுத்தார். அரசியல் சட்டம் மும்முறை படித்து ஆராயப்பட்டது. அப்போது அவரது உடல்நலம் சிறிது பாதிக்கப்பட்டிருந்தது. சட்டச் சிற்பி செதுக்கிய அரசியல் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
நியூயார்க் நகரத்திற்கு வரும்படி அமெரிக்கர்கள் அழைத்த அழைப்பினை ஏற்று நியூயார்க் சென்றார் அம்பேத்கர். அங்குள்ள கொலம்பியா பல்கலைக்கழகம் அம்பேத்கருக்கு சட்டப் பேரறிஞர் என்னும் பட்டத்தை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.