சுவைமிகு செய்திகள்
தங்களுக்குத் தெரியாது
பையில் குட்டியுடன் காணப்படும் தோற்றத்தையும், தாவித் தாவிச் செல்லும் இயல்புடைய காங்கருவினை ரசித்திருக்கிறோம். இந்த விலங்கிற்கு காங்கரு என்ற பெயரினை வைத்தவர் யார்? அந்தப் பெயர் எப்படி வந்தது தெரியுமா?
காங்கரு என்ற பெயர் கேப்டன் ஜேம்ஸ் குக் என்பவரால் சூட்டப்பட்டது. குக் முதன்முறையாக ஆஸ்திரேலியாவை அடைந்தபோது தாவித் தாவி ஓடிவரும் காங்கருக்களைக் கண்டார். குக்குடன் இருந்த ஆங்கிலேயர்கள் அந்த விலங்குகளை, -குதித்தோடித் தாவி வரும் வாலுள்ள அரக்கர்கள் என நினைத்தனர்.
அங்கு வாழ்ந்த ஆதிகுடி மக்களிடம் இதன் பெயர் என்ன? என்று கேட்டார் குக். அவர்கள், தங்கள் மொழியில் -காங்கரு என்றனர். -காங்கரு என்றால் -தங்களுக்குத் தெரியாது என்று பொருள். அந்த விலங்கினங்களுக்குக் -காங்கரு- என்ற பெயரையே வைத்துவிட்டார் குக்.
சமையலறைக் கண்டுபிடிப்பு
ஜெர்மன் — சுவிட்சர்லாந்து நாட்டின் வேதியியல் அறிஞரான கிறிஸ்டியன் ஃபிரெட்ரிக் சோயன் பெயின் வீட்டுச் சமையலறையில் சோதனைகள் செய்து பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது, நைட்ரிக் அமிலத்தில் சிறிதளவு கை தவறி கீழே சிதறிவிட்டது. தன் மனைவிக்குத் தெரிந்தால், திட்டுவாரே என நினைத்து அருகில் இருந்த பருத்தித் (காட்டன்) துணியினை எடுத்து அந்த இடத்தைச் சுத்தப்படுத்தினார்.
நனைந்த துணியையும் விரைவாக உலர்த்த நினைத்து எரிந்து கொண்டிருந்த அடுப்பில் காட்டினார். அப்போது, அது புகையினை எழுப்பாமல் வெடித்து மறைந்தது. தற்செயலாக நடந்த இந்த நிகழ்வினால் துப்பாக்கிப் பஞ்சு (Gun – Cotton) என்றழைக்கப்படும் செல்லுலோஸ் நைட்ரேட்டைக் கண்டுபிடித்தார் கிறிஸ்டியன் ஃபிரெட்ரிக்.
பெரிய பயன்
மின்மாற்றியின் (Transformer) தத்துவத்தையும் டைனமோவையும் கண்டுபிடித்த பெருமைக்குரியவர் மைக்கேல் ஃபாரடே. டைனமோவுக்கு அனைவரது முன்னிலையிலும் செய்முறை விளக்கம் காட்டிய போது, இங்கிலாந்து நாட்டின் அப்போதைய பிரதமர் கிளாட்ஸ்டோனும் வந்திருந்தார்.
ஃபாரடே செய்முறை விளக்கத்தினைக் கூறிக் கொண்டிருந்த போதே, கிளாட்ஸ்டோன் குறுக்கிட்டார். எல்லாம் சரி, இதனால் என்ன பயன் கிடைக்கப் போகிறது என்றார்.
இதனைக் கேட்ட ஃபாரடே, நீங்கள் விரைவில் வரி போடுவதற்கான வாய்ப்பு இதனால் ஏற்படுமே. அது உங்களுக்குக் கிடைக்கக்கூடிய பெரிய பயனில்லையா? என்று சாதாரணமாகப் பதில் அளித்தார்.
தொகுப்பு:செல்வா