சாமிகளின் பிறப்பும் இறப்பும்-8
’டவுசர் சர்ச்’சும் குடைக்காத்த சாமியும்
– ச.தமிழ்ச்செல்வன்
சென்ற கதையில் சொன்ன வடக்கன் குளம் சர்ச் பற்றி இப்போது பார்ப்போம். தாழ்த்தப்பட்ட ஜாதி மக்களும் கிறிஸ்துவர்களாக மாறினார்கள். மேல்ஜாதி எனக் கருதப்படும் பிள்ளைமார் ஜாதிக்காரர்களும் கிறிஸ்துவர்கள் ஆனார்கள். ஆனால் ஒரே வாசல் வழியாக சர்ச்சுக்குள் வந்து பறையர்களோடும் பள்ளர்களோடும் ஒரே இடத்தில் நாங்கள் உட்கார முடியாது என்று பிள்ளைமார் ஜாதியார் பாதிரியாரிடம் சண்டை போட்டதை ஏற்கெனவே பார்த்தோம்.
பாதிரியார் பலத்த யோசனைக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வந்தார். புதிதாக ஒரு சர்ச் கட்ட ஏற்பாடு செய்தார்.
ஒரு வாசலுக்குப் பதிலாக இரண்டு வாசல்களைக் கொண்டதாக சர்ச் கட்டப்பட்டது. வாசலின் முதல் வழியாக ஒரு ஜாதிக்காரர்களும், வாசல் இரண்டாவது வழியாக இன்னொரு ஜாதிக்காரர்களும் வாங்கப்பா என்று சொல்லிவிட்டார். உள்ளே வரைக்கும் சுவர் இருக்கும். சர்ச்சுக்குள்ளேயும் இவர்கள் ஒருவர் முகத்தை இன்னொருவர் பார்க்க வேண்டிய அவசியமில்லை.
ஆனால் இருவரும் ஒரே நேரத்தில் பலிபீடத்தையும் பாதிரியார் பிரார்த்தனை செய்வதையும் பார்க்க முடியும். அப்போதும், ஒரு பிரச்சனை பாக்கி இருந்தது. பாதிரியார் எந்த ஜாதியாருடைய வாசல் வழியாக வருவார்? ஆகவே மூன்றாவது வழி ஒன்றினைச் சந்து போல இரண்டு சுவர்களுக்கு இடையே உண்டாக்கி இதன் வழியாக பாதிரியார் வரலாம் என்று முடிவானது. தூரத்திலிருந்து பார்த்தால் பையன் அணியும் டவுசர் போல இருந்தது.
காலப்போக்கில் இந்த சர்ச் டவுசர் சர்ச் என்று சுற்று வட்டாரத்தில் பிரபலமானது. இப்படியே கொஞ்ச நாள் ஓடியது. அதன் பிறகு அருட்தந்தை கௌசானல் என்பவர் பாதிரியாராக வந்தார். அவர் இந்த டவுசரைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது ஏசுவுக்கே அடுக்காது என்று தலையில் அடித்துக் கொண்டார். இதை இடித்தே தீர வேண்டும். எந்த ஜாதியில் பிறந்தாலும் எல்லோரும் ஏசுவின் பிள்ளைகள்தான். ஏசுவுக்கு ஜாதி கிடையாதப்பா என்று சொல்லிப் பார்த்தார். எங்க ஊரில் ஜாதி உண்டப்பா என்று மீண்டும் மேல் ஜாதியார் அடம்பிடித்தனர். சாமி கோவிலை இடிக்கக்கூடாது என்று நீதிமன்றத்தில் வழக்குப் போட்டனர்.
அருட்தந்தை கௌசானல் விடவில்லை. வாதாடி வழக்காடி ஒருநாள் அந்த டவுசரைக் கிழித்தே போட்டார். சர்ச் இடிக்கப்பட்டு எல்லோருக்கும் பொதுவான சர்ச் கட்டப்பட்டது.
இதுபோல பல ஊர்களில் பிரச்சனை வந்தபோது தாழ்த்தப்பட்ட மக்கள் ஆளை விடுங்க சாமிகளா என்று தனி சர்ச் கட்டி தாழ்த்தப்பட்ட ஏசுநாதரோடு அங்கே போன கதைகளும் நம் நாட்டில் நிறைய நடந்தன.
நாம் பார்க்க வேண்டியது என்னவென்றால் சாமிக்குத் தன் கோவிலைக் கட்ட முடியாது. மனிதன்தான் கட்ட வேண்டும். ஆகவே அவன் இப்படிச் சண்டை போட்டுத் தன்னிடம் இருக்கும் ஜாதியைச் சாமிக்கும் கொடுத்தான். இப்போதும் கிறித்துவப் பிள்ளைமார் அவர்கள் ஜாதிக்குள்தான் கல்யாணம் செய்கிறார்கள். கிறித்துவ நாடார்கள் அவர்கள் ஜாதிக்குள்தான் கல்யாணம் செய்கிறார்கள். ஜாதியே இல்லாத கிறித்துவம் நம்ம ஊருக்கு வரும்போது இப்படி ஆகிவிட்டது. நிற்க,
இதுவரை நாம் என்ன பார்த்திருக்கிறோம்?
சாமியில் இரண்டு வகை உண்டு. அவை
பெருந்தெய்வங்கள் _ சிறுதெய்வங்கள் எனப்படுகின்றன. அதாவது பெரிய சாமி _ சின்னச்சாமி. சின்னச்சாமிகளுக்குப் பெரிய கோவில், கோபுரம், சர்ச், மசூதி எதுவும் இருக்காது. மண்ணால் கட்டிய பீடம்தான் இருக்கும். ஏனெனில் இந்த சின்னச்சாமிகளை உண்டாக்குவதே சாதாரண ஏழை கிராமப்புற மக்கள்தான். அந்த சாமிகளும் கற்பனையான சாமிகள் அல்ல.
வாழ்ந்து செத்துப்போன பாவப்பட்ட மனிதர்களும், மனுஷிகளும்தான் சாமிகளாக கும்பிடப்படுகிறார்கள். அப்படிச் சாமிகள் உருவான கதைகள் சிலவற்றை இதுவரை பார்த்திருக்கிறோம். இன்னும் சில ஏழைச்சாமிகளைப் பற்றிப் பார்த்துவிட்டுப் பெரிய சாமிகள் எப்படி வந்தன என்று பார்க்கப் போகலாம்.
மக்களுக்கு அனாதையாக நாதியில்லாமல் யார் செத்துப் போனாலும் இரக்கம் வந்துவிடும். அவர்களைப் புதைத்துப் பூப்போட்டுச் சாமியாக்கிவிடுகிறார்கள். ரொம்பப் பரிதாபமான மனிதர்கள் செத்தால் மட்டுமல்ல கொஞ்சம் சேட்டைக்கார மனிதர்கள் செத்தாலும் கூட விடுவதில்லை. விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் அருகே இருப்பது கொடக்காத்தான் சாமி.
ஒரு நூறு வருசத்துக்கு முன்னால் மதுரைப்பக்கம் களவு செய்வதையே தொழிலாகக் கொண்டு மக்கள் சிலர் இருந்தார்கள். அதில் ஒரு களவுக் கூட்டம் களவாடிக் களவாடி திருவில்லிபுத்தூர் வரைக்கும் வந்துவிட்டது.
அக்குழுவின் தலைவர்தான் இந்த கொடக்காத்தான். அவர் எந்நேரமும் கையில் ஒரு குடையுடன் இருப்பாராம். கொள்ளையிட்ட பணம் சேரச் சேர அவரும் கொலை ரெங்கசாமி என்பவரும் சரக்கையும் பணத்தையும் அவ்வப்போது மதுரைக்குக் கொண்டுபோய்ச் சேர்த்துவிட்டு வருவார்கள். கையில் காசு நிறைய இருந்தால் கொஞ்சம் சேட்டைகளும் வருமல்லவா?
கொடைக்காத்தான் மதுரையில் பல பெண்களோடு ஊரைச் சுற்றும் பழக்கம் வைத்திருந்தார். அப்படி ஒருமுறை களவுப்பணத்தைச் சேர்த்துவிட்டுத் திரும்பும் வழியில் ஒரு வீட்டிலிருந்த பெண்ணோடு ஜாலியாக இருந்தார்கள். அப்போது அப்பெண்ணின் கணவர் வந்துவிட்டார்.
இவர்களைப் பார்த்து ஆத்திரத்தோடு கத்தியை எடுத்து வயிற்றில் குத்திக் குடலைச் சரித்துவிட்டார். இருவரும் தப்பித்தோம் பிழைத்தோம் என்று சுவர் ஏறிக்குதித்து ஓடினார்கள். வழியில் கொலை ரெங்கசாமி வடமலைக்குறிச்சிக் கண்மாய் அருகே விழுந்து செத்துப் போனார்.
அவரை அங்கேயே அடக்கம் பண்ணிவிட்டு வந்த கொடக்காத்தான் தன் கையில் எந்நேரமும் இருக்கும் குடையை ஊன்றி ஊன்றி நடந்து திருவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவிலுக்குப் பின்னால் வந்தபோது அதற்குமேல் நடக்க முடியாமல் கீழே படுத்துத் தலைக்கு அடியில் குடையை வைத்தபடி செத்துப் போனார்.
அந்தப் பகுதியில் இருந்த மக்கள் இரக்கப்பட்டு அவர் பிணத்தைத் தூக்க அவர் உடலோடு சேர்ந்து அந்தக் குடையும் வந்தது. அதிசயப்பட்ட மக்கள் அவர் சமாதியைக் கும்பிட ஆரம்பித்தார்கள். குடைகாத்தான் என்று பெயர் வைத்துக் கும்பிட்டார்கள். காலப்போக்கில் குடைகாத்தான் என்பது பேச்சு வழக்கில் கொடக்காத்தான் ஆகிவிட்டது.
இப்படிக் கள்ளனுக்கும் கோவில் கட்டியிருக்கிறார்கள். குடை கூடவே வருதே என்கிற ஒரு ஆச்சரியம் போதும் போலிருக்கிறது. இப்படிக் கொலை, சாவு இல்லாமலும் சாமிகள் கும்பிடப்படுகின்றன. அதில் ஓரிரு கதைகளை அடுத்துப் பார்ப்போம்……