விளையாட்டு – கைப்பந்தாட்டம்
விரித்த விரல்களினால் தள்ளியும், மூடிய கைகளினால் அடித்தும், வலைக்கு மேலேயே பந்தையிருத்தி மாறி மாறி அனுப்பி விளையாடுவதால் கைப்பந்தாட்டம் எனப்பட்டது. ஆண், பெண் இருவரும் விரும்பி பந்தினைத் தள்ளியும், அடித்தும், குத்தியும் விளையாடும்போது உடல் உறுப்புகளுக்கு நல்ல பயிற்சியும் மனதிற்கு மகிழ்ச்சியும் கிடைக்கிறது.
ஜெர்மனியில் ஃபாஸ்ட் பால் (Faust Ball) என்னும் பெயருடன் விளையாடப்பட்டு வந்த மின்டன் (Minton) என்ற ஆட்டமே கைப்பந்தாட்டம் தோன்றக் காரணமாக இருந்தது. இது, வலைக்கு மேலேயே பந்தை மாறி மாறி அடித்து விளையாடப்படுவது. இதில் பந்தை மாறி மாறி அடிக்க மட்டைகள் இருக்கும். இவற்றை மாற்றி வைத்தால் என்ன என்று சிந்தித்தார் அமெரிக்காவைச் சேர்ந்த வில்லியம் மோர்கன்.
மட்டைகளுக்குப் பதில் கைகளை உபயோகப்படுத்த நினைத்தார். டென்னிஸ் விளையாட்டில் பயன்படுத்தப்பட்ட வலையினை எடுத்துக் கொண்டார். இப்படி, மின்டன் என்ற விளையாட்டிலிருந்து உருவான கைப்பந்தாட்டத்திற்கு மின்டானெட் (Mintonnette) என்று பெயரிட்டார் வில்லியம் மோர்கன்.
பந்தின் வடிவத்தினைப் புதிதாக்க, ஏ.ஜி. ஸ்பேல்டிங் சகோதரர்கள் என்ற விளையாட்டுக் கம்பெனியிடம் பந்து வடிவமைக்கும் பணியினை வழங்கினார் மோர்கன். அவர்கள் தயாரித்துக் கொடுத்த பந்தின் வடிவமே இன்றும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஸ்பிரிங்பீல்டு கல்லூரியில் பணிபுரிந்த டாக்டர். ஏ.டி. கால்ஸ்டெட், வலைக்கு இருபுறமும் மாறி மாறித் தள்ளும் விளையாட்டு என்பதால் இதற்கு வாலிபால் (Volleyball) என்று பெயரிட்டார். வாலிபால் என்னும் சொல்லுக்கு மாறி மாறி அடித்தல் என்பது பொருளாகும்.
முதலில் கனடாவில் பரவிய வாலிபால் விளையாட்டு பின்பு கியூபாவிற்குச் சென்றது. பின் அய்ரோப்பாக் கண்டம் முழுவதும் விரும்பி விளையாடப்பட்டது. 1947ஆம் ஆண்டு அகில உலகக் கைப்பந்தாட்டக் கழகத்தின் தலைமைக் கழகம் பாரிசில் தோற்றுவிக்கப்பட்டது. 1949ஆம் ஆண்டு 12 நாடுகள் கலந்துகொண்ட முதல் உலகக் கைப்பந்தாட்டப் போட்டியில் ரஷ்யா வெற்றி பெற்றது.
இன்று, ஒலிம்பிக் விளையாட்டுகளில் ஒன்றாக – ஒப்பற்ற ஆட்டமாக கைப்பந்தாட்டம் விளங்குகிறது. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் அமெரிக்காவிலிருந்து வந்த இளங்கிறித்துவக் கழகத்தின் உறுப்பினர்களால் இந்தியாவிற்குள் புகுந்தது. 1950ஆம் ஆண்டு அகில இந்தியக் கைப்பந்தாட்டக் கழகம் தொடங்கப்பட்டது. 1953ஆம் ஆண்டு ஆசிய நாடுகளுக்கிடையே டோக்கியாவில் நடைபெற்ற போட்டியில் இந்தியா (Asian Champion) வெற்றி பெற்றது.
கைப்பந்தாட்ட ஆடுகளத்தின் மொத்த நீளம் 18 மீட்டர். அகலம் 9 மீட்டர். நடுவில் 9 மீட்டர் தூரத்தில் நடுக்கோடு இருந்து ஆடுகளத்தை 2 பகுதிகளாகப் பிரித்துக் காட்டும். மேலும், ஒவ்வொரு பக்கத்திலும் தாக்கும் எல்லைக்கோடு (Attach Line) என்று நடுக்கோட்டிலிருந்து 3 மீட்டர் தூரத்தில் கோடு ஒன்று இருக்கும்.
ஆண்கள் ஆட்டத்தின் வலையின் உயரம் 2 மீ 43 செ.மீட்டரும், பெண்களுக்கான உயரம் 2 மீ 24 செ.மீ. என உள்ளது போல கட்டுவதற்குப் பயன்படும் 2 உயர்ந்த கம்பங்கள் தேவை. அந்தக் கம்பங்கள் நடுக்கோட்டிலிருந்து 50 செ.மீ. தூரத்திற்குள் தள்ளி பக்கவாட்டில் நடப்படல் வேண்டும். வலையின் நீளம் 9.50 மீட்டர். அகலம் 1 மீட்டர். நடுக்கோடும் பக்கக்கோடும் சந்திக்கும் இடங்களுக்கு நேர்மேலாக இருபுறங்களிலும் 2 அங்குல நீளத்தில் வெள்ளை நாடாக்கள் கட்டப்பட வேண்டும்.
ஒரு குழுவிலிருந்து ஒருவர் பந்தை அடித்து (Service) எதிர்க்குழுவிற்கு வழங்க வேண்டும். அவர்கள் அந்தப் பந்தினைத் தொட்டு 3 முறைக்குள் விளையாடி, வலைக்கு மேலேயே பந்து இருக்கும்படி இரு குழுவினரும் மாறி மாறித் தள்ளியும், உயர்த்தியும், அடித்தும், தடுத்தும், தரையில் விழவிடாது ஆடிக் கொண்டிருப்பதுதான் இந்த விளையாட்டின் நோக்கமாகும். ஒரு குழு தான் அடித்தெறிந்து வழங்கிய பந்தை, எதிர்க்குழு ஆடாமல் தரையில் விட்டுவிட, மீண்டும் அடித்தெறிதலைச் செய்யும் அந்தக் குழு ஒரு வெற்றி எண்ணைப் (Point) பெறும்.
இவ்வாறு ஒவ்வொரு முறையும் எதிராளியைத் தவறிழைக்கச் செய்து தொடர்ந்து பெறுகின்ற அடித்தெறியும் வாய்ப்பு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வெற்றி எண் கிடைக்கும். 15 வெற்றி எண்ணைப் பெறும் குழுவே வெற்றி பெறுகிறது. இரு குழுக்களும் 14 வெற்றி எண்கள் பெற்று சமநிலையில் இருந்தால், ஒரு குழு வெற்றி பெற மற்றொரு குழுவைவிட 2 வெற்றி எண்கள் அதிகம் பெறவேண்டும். அதாவது, 17-15, 18-16, 19-17, 20-18 என்பது போல் இருக்க வேண்டும்.
ஒரு குழுவிற்கு நிரந்தர ஆட்டக்காரர்களாக 6 பேர்களும், மாற்றாட்டக்காரர்களாக (Substitutes) 6 பேர்களும் இருக்க வேண்டும். முன் வரிசையில் மூவர், பின் வரிசையில் மூவர் என நிற்க வேண்டும். பந்து எதிர்க்குழுவினரால் அடிபட்டுக் கிளம்பியவுடன் ஆட்டக்காரர்கள் தாங்கள் விரும்புகின்ற இடங்களில் நின்று விளையாடலாம். எனினும், அடித்தாடும் எல்லைக்குள் தாண்டிக் குதித்துப் பந்தை அடிக்காமல், தள்ளி ஆடலாம். இதனை மீறினால் தவறுக்குள்ளாக (Foul) நேரிடும்.
இப்படி விளையாடும்போது, அடித்தெறியும் வாய்ப்பு ஒவ்வொருவருக்கும் உண்டு. அதனைச் சுற்றுமுறை (Rotation) என்பர். அந்தச் சுற்று முறையில் தனக்கு வாய்ப்பு வரும்பொழுதுதான் போய் அடித்தெறிய முடியும். தவறாகப் பயன்படுத்துதல் தண்டனைக்குரியதாகும். கைப்பந்தாட்டம் ஒரு குழு விளையாட்டு (Team Game) என்பதால், ஒவ்வொருவரும் தமது பொறுப்பினை உணர்ந்து, உடன் விளையாடுபவரின் குறிப்பினைப் புரிந்து விளையாடும் திறமையை உயர்த்திக் கொள்ள வேண்டும்.