சுவைமிகு செய்திகள்
சாதுர்யம்
விண் இயற்பியல் துறையில் சிறந்து விளங்கியவர் எடிங்டன். 1926ஆம் ஆண்டு ஆக்ஸ்ஃபோர்டு அரங்கில், விண்மீன்களும் அணுக்களும் என்ற தலைப்பில் தொடர் சொற்பொழிவு நிகழ்த்தினார்.
அப்போது, மேகக் கலத்தில் (Cloud Chamber) ஆல்பா துகள் ஊடுருவும்போது ஏற்படுத்திய தடத்தின் ஒளிப்படத்தைப் பெரிய திரையில் போட்டுக் காட்டி விளக்கம் கொடுத்தார்.
மேகக்கலம் என்பது ஓர் அணுக்கதிர் ஆய்வுக் கருவி. இதில் அதி செறிவூட்டப்பட்ட (Super Saturated) ஆவி இருக்கும். இதன் வழியாக ஆற்றல் மிக்க மின்னூட்டத்துகள் செல்லும்போது, வழித்தடத்தில் அயனிகளைத் தோற்றுவிக்க அதி செறிவூட்டப்பட்ட ஆவி நீர்த்துளியாக அதில் படிந்துவிடுகிறது. இதைப் படம் பிடித்து, திரையில் காட்டியபோது, ஒளிப்படம் போட்டுக் காட்டும் பணியாளரின் கைரேகை அதனுள் விழுந்து, அதுவும் தடம்போல தோற்றமளித்தது. இந்த எதிர்பாராத காட்சியைப் பார்த்து திகைத்து நின்றார் எடிங்டன்.
பெரிய பெரிய அறிஞர் பெருமக்கள் கூடியுள்ள அரங்கத்தில், தலைக்குனிவை ஏற்படுத்தும் பிழை ஏற்பட்டுவிட்டதே என நினைத்து மூளைக்கு வேலை கொடுத்தார். பின்பு,
இது ஆல்பா துகளின் ஒளிப்படம் அல்ல; அது விட்டுப்போன தடத்தின் ஒளிப்படம். ஒரு கை விரல் எப்படி அதன் ரேகையோடு தொடர்புடையதாக இருக்கிறதோ அதுபோல, மேகக் கலத்தின் படங்கள் அதன் துகளோடு தொடர்புடையதாக இருக்கிறது என்று விளக்கம் கொடுத்தார்.
இந்தச் சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருந்த குரெளதெர் (J.G. Crowther) என்ற விஞ்ஞானி, அப்படியொரு சூழலில் எந்தச் சொற்பொழிவாளராலும் இவ்வளவு சாதுர்யமாக விளக்கம் கொடுக்க முடியாது என்று புகழ்ந்துள்ளார்.
பசியைப் போக்குமா?
எதிர்காலத் தேவைகளை முன்னரே கற்பனையில் யோசித்து புதிது புதிதாக இயந்திரங்களை வடிவமைப்பதில் தேர்ந்தவர் பௌல்டன் என்னும் பொறியாளர். வேடிக்கையாகவும், வெளிப்படையாகவும் பேசும் இவர், நீராவியின் செயல்திறனை உலகிற்கு வெளிப்படுத்திய ஜேம்ஸ் வாட்டின் நண்பர்.
பௌல்டனின் இயந்திர உற்பத்தித் தொழிற்சாலையைப் பார்வையிட மூன்றாம் ஜார்ஜ் மன்னரும் சார்லெட் அரசியும் வந்திருந்தனர். இயந்திரங்களையும், இன்ஜின்களையும் பார்த்துப் புகழ்ந்தனர். ஆனால், அவர்கள் எதையும் விலைக்கு வாங்கவில்லை. இதனால் மிகுந்த ஏமாற்றமடைந்த பௌல்டன் அரச பரம்பரையினரிடம், என்னைப் போல பாராட்டுப் பெற்ற மனிதன் இந்த உலகில் வேறு யாரும் இருக்க முடியாது. ஆனால், வெறும் பாராட்டு மட்டும் சட்டைப் பையை நிரப்பாது. வயிற்றுப் பசியைப் போக்காது என்று கூறியுள்ளார்.
அரசியல்வாதி
அமெரிக்க நாட்டின் பொருளாதார நிபுணர்களுள் குறிப்பிடத்தக்கவர் மில்டன் பிரைட்டன். இவர், ஒருமுறை ஹாங்ஹாங் சென்றபோது பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொண்டனர். ஒரு பத்திரிகையாளர், நீங்கள் அமெரிக்க ஜனாதிபதியானால் பொருளாதாரப் பிரச்சினைக்கு நல்ல தீர்வு காண்பீர்கள் அல்லவா? என்று கேள்வி கேட்டார். இக்கேள்விக்கு பிரைட்டன், நாற்காலியில் அமர்ந்ததும் அரசியல்வாதியாகி விடுவேன் என்றாராம்.
நீரோ மன்னன்
ரோம் நகரம் தீப்பற்றி எரிந்தபோது பிடில் வாசித்தான் நீரோ மன்னன் என்று படித்துள்ளோம். இந்த மன்னனுக்கு யாரையாவது பிடிக்கவில்லை என்றால், உங்களை எனக்குப் பிடிக்கவில்லை. எனவே, தற்கொலை செய்து கொள்ளுங்கள். இல்லையென்றால், சித்ரவதை செய்து உங்களைக் கொல்வேன் என்று கடிதம் அனுப்புவாராம். இப்படிக் கொன்றவர்களுள் அவரது தாயும், ஆசிரியர் செனேகா என்ற தத்துவ ஞானியும் அடங்குவர்.
14 ஆண்டுகள் கொடுங்கோல் ஆட்சி புரிந்த நீரோ மன்னனுக்கு ரோம் நாடாளுமன்றம் மரண தண்டனை விதித்தது. மேலும், நீரோ மன்னனின் முறைப்படியே தற்கொலை செய்து கொள்ள அனுமதியும் அளித்தது.
ஊனம் ஒரு குறையல்ல
ஆங்கிலக் கவிஞர் மில்டன் திடீரென கண் பார்வையினை இழந்து விடுகிறார். எனினும், அவர் எழுதுவதை நிறுத்தவில்லை. கண் பார்வை இழந்த பின்புதான் புகழ்மிக்க இலக்கியங்களைப் படைத்துள்ளார். தன்னைப் பற்றிக் கூறும்போது,
காலை வேளையில் மற்றவர்களைப் போல நானும் விழித்துக் கொள்வேன்; தொழிற்சாலைகளின் மணி ஒலி கேட்கும் முன் எழுந்துவிடுவேன்; கோடையில் பறவைகள் விழித்தெழும் முன் – சப்தம் கேட்கும் முன் எழுந்துவிடுவேன்; களைப்படையும் வரை மற்றவர்களைப் படிக்கச் சொல்லிக் கேட்டு, தகவல்களைக் கிரகித்துக் கொள்வேன் என்று கூறியுள்ளார்.
திருடன் தந்த மரியாதை
பெல்ஜிய நாட்டின் புகழ்மிக்க எழுத்தாளராக மேட்டாலிக் விளங்கினார். எழுதிக்கொண்டிருக்கும் போது அவரிடம் யாராவது பேசினால் கடுமையாகக் கோபப்படுவார். ஒருநாள் அவர் அறையினுள் எழுதிக் கொண்டிருந்தபோது திருடன் உள்ளே வந்து அங்கிருந்த பெட்டியைத் திருடிச் சென்றுவிட்டான்.
அந்தப் பெட்டியினுள் அவரது மனைவியின் விலை உயர்ந்த நகைகள் இருந்தன. தற்செயலாக அறையினுள் வந்த மனைவி, பெட்டியைக் காணாமல் திடுக்கிட்டார். அய்யோ, நகைப்பெட்டியைக் காணவில்லையே, திருடன் திருடிச் சென்றுவிட்டானே என்று பதற்றத்தில் பேசியுள்ளார். இதனைக் கேட்ட மேட்டாலிக் ஒரு திருடன் என் வேலைக்குக் கொடுத்த மரியாதையைக்கூட உன்னால் தரமுடியவில்லையே என்றாராம்.
அடையாளக்குறிக் கடிதம்
விக்டர் ஹியூகோ என்ற நாவலாசிரியர் தான் எழுதிய நாவல் எப்படி விற்பனையாகிறது என்பதை அறிய விரும்பினார். எனவே, பதிப்பாளருக்குக் கடிதம் எழுத நினைத்தார். அக்கடிதத்தில், ? என்பதை மட்டும் குறியிட்டு அனுப்பினார். அதற்குப் பதிப்பாளர், ! என்ற குறியிட்டுப் பதில் அனுப்பியுள்ளார்.
’?’ – நாவல் நன்றாக விற்பனையாகிறதா?
’!’ – ஓ,! ஆச்சரியப்படும் வகையில்
என்பதே அந்தக் குறிகளின் விளக்கங்கள்.
தொகுப்பு: மேகா