அன்பு மடல் 7
மின்னணுப் புரட்சியில் காணாமற்போனவைகளும் அரிதாகி வருபவைகளும்
பாசமிகு பேத்தி, பேரன்களே, என்ன நலமா? உங்கள் பள்ளி, கல்லூரி வகுப்புப் பணிகள் எல்லாம் எப்படிப் போய்க் கொண்டிருக்கின்றன–?
சிலருக்கு முதல் பருவம், புது வகுப்பு, புதிய சூழ்நிலை இவைகளால் மனம் ஊன்ற சில நாள்கள் _ சில வாரங்கள்கூட… ஆகலாம்!
இப்போதுள்ள போட்டி உலகில் நாள், நேரம் _ காலம் இவைகளை வீணடிக்கவே கூடாது. முதற்பருவம் முன்பெல்லாம் விளையாட்டாகவே கழிந்துவிடும். இப்போது அப்படியல்ல; எனவே நன்றாய் உழைக்கத் துவங்கிவிடுங்கள்!
நவீன அறிவியல் _ குறிப்பாக மின்னணுவியல் தகவல் புரட்சி யுகத்தில் அல்லவா நாம் அனைவரும் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
எவ்வளவோ புதுமைகள் புது வெள்ளமாய்ப் பாய்ந்து வருகிறது; பழைய பல பொருள்களும் கருவிகளும், ஒன்று காணாமல் போய்விட்டன; அல்லது அரிது ஆகி வருகின்றன!
பள்ளிகளில் கால்குலேட்டர் கருவி என்பது நாங்கள் படிக்கும்போது எங்களுக்குத் தெரியாது. அப்போதெல்லாம் வாய்ப்பாடு கட்டாயம், 1ஆவது வகுப்பிலிருந்தே துவங்கிவிடும். எதையும் மனதாலேயே பெருக்கிக் கூட்டிச் சொல்லி மூளைக்கு வேலை கொடுத்து உடனே பட் என்று சொல்லிவிட மனனப் பயிற்சி பெரிதும் பயன்பட்டது. உதாரணமாக, 16 x16 என்று ஆசிரியர் கேட்டவுடன் நாங்கள் உடனடியாக தடாலடி பதிலாக 256 என்று கூவுவோம்!
இப்போதோ அந்த வாய்ப்பாடு காணாமல் போய்விட்டதே _ வகுப்புகளில்!
தேர்வில்கூட கால்குலேட்டர் அனுமதிக்கப்படும் நிலையே காணப்படுகிறது.
எனவே, வாய்ப்பாடு காணாமற் போனது மட்டுமல்ல; மூளை உழைப்பும் நினைவாற்றலை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்பும்கூட குறைந்து வருகிறதே!
அதுபோலவே பல பொருள்கள் காணாமற் போய்விட்டன! 30 ஆண்டுகளுக்கு முன் எல்லோருமே தட்டச்சு _ டைப்ரைட்டர் பயிற்சி பெற விரும்புவர். அதோடு சிலர் சுருக்கெழுத்தும் (Short Hand) இணைத்துக் கற்றுக்கொள்வர். எங்கும் பள்ளி இறுதி வகுப்பு முடித்தநிலையில், வீட்டில் சும்மா இராது _ அப்போது தொலைக்காட்சி _ (டி.வி) செல்போன் என்ற கைத்தொலைபேசி ஆகியவைகள் இல்லை _ நேரம் செல்ல நல்ல பயிற்சி (டைப்ரைட்டிங்) தட்டச்சுப் பயிற்சி.
இப்போதுகூட கணினிப் (கம்ப்யூட்டர்) பயிற்சியின் முதல் துவக்கம் டைப்ரைட்டிங் கீ போர்டில் விரல்களை இயக்கிடும் பயிற்சிதானே, என்றாலும் டைப்ரைட்டர்கள் காணாமல் போய்விட்டன.
இதன் சுருக்கமான வரலாறு பேரப்பிள்ளைகளே இதோ: தெரிந்து கொள்ளுங்கள்.
கூடன்பர்க் வடிவமைத்த அச்சு இயந்திரம்தான் தட்டச்சு கண்டுபிடிக்க மூல ஆதாரமாக அமைந்தது. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஹென்றி மில் என்பவர் தட்டச்சு இயந்திரம் போன்ற ஒரு சாதனத்தை 1714ஆம் ஆண்டில் வடிவமைத்தார். ஆனால், அதனை மேம்படுத்த முயற்சி செய்யவில்லை.
1829இல் வில்லியம் பர்ட் என்பவர் ஒரு கருவியினை வடிவமைத்து டைபோகிராபர் (Typographer) என்று பெயர் கொடுத்தார்.
உபயோகப்படுத்திப் பார்த்தபோது பல நடைமுறைச் சிக்கல்கள் ஏற்பட்டதால் அப்படியே விட்டுவிட்டார்.
கிறிஸ்டோபர் ஷோல்ஸ் 1867இல் வெற்றிகரமாக வடிவமைத்து காப்புரிமையும் பெற்றார். தான் பெற்ற காப்புரிமையை நியூயார்க் நகரின் புகழ் பெற்ற நிறுவனமான ரெமிங்டன் அண்ட் சன்ஸ்க்கு வழங்கினார்.
ஷோல்ஸ் வடிவமைத்த இயந்திரத்தில் அனைத்து எழுத்துகளும் பெரிய எழுத்துகளாக (Capital Letters) இருந்தன. இந்தக் குறையானது 1878இல் ரெமிங்டன் நிறுவனத்தால் சரிசெய்யப்பட்டது. மேலும் தட்டச்சு செய்பவருக்கு, தான் என்ன வார்த்தையினைத் தட்டச்சு செய்கிறோம் என்பது தெரியாமல் இருந்தது. பிரான்சஸ் வாக்னர் என்னும் ஜெர்மானியரால் இந்தக் குறை நீக்கப்பட்டது.
மேற்கத்திய நாடுகளில் 10 ஆண்டுகளுக்கு முன்பே காணாமல் போன தட்டச்சு, இந்தியாவில் தற்போது சில இடங்களில் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. உலகின் கடைசித் தட்டச்சுத் தொழிற்சாலையாக இருந்த கோத்ரெஜ் அண்ட் பாய்ஸ் நிறுவனமும் 2011ஆம் ஆண்டு மே மாதம் மூடப்பட்டது. இன்னொரு செய்தி; பல ரகசியத் தகவல்களைக் கணினியிலிருந்து பெயர்த்துக்கொண்டு போய்விடுகிறார்கள் என்பதால், இங்கிலாந்து போன்ற நாடுகளில் டைப்ரைட்டிங் பயன்பாட்டை மீண்டும் கொண்டு வரலாமா என்று யோசிக்கப்படுகிறதாம்!
உதாரணம்: பழையன கழிதல், புதியன புகுதல் என்பதோடு பழையன திரும்புதல் என்ற புது மொழியையும் இணைத்துக் கொள்ளவேண்டும் போலிருக்கிறது!
அதுபோலவே வானொலிப் பெட்டிகள். தமிழ்நாட்டில் முதன்முதலாகத் துவக்கப்பட்ட சென்னை வானொலிக்கு இப்போது 75 வயது. பவள விழாக் கொண்டாட்டம்தான்!
அந்த வானொலி என்றும் இருக்கும் என்றாலும் அதனைக் கேட்கப் பயன்பட்ட பெரிய வானொலிப் பெட்டிகள் பற்றி _ பேரப்பிள்ளைகளே நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள்! முன்பெல்லாம் மர்பி (Murphy) காலண்டர் என்று வி.ஜி.பன்னீர்தாஸ், வி.ஜி.சந்தோஷம், வி.ஜி.செல்வராஜ் சகோதரர்கள் கம்பெனி முகவர்களாக இருந்து வெளியிட்ட அழகான மர்பி குழந்தையுடன் காட்சியளிக்கும் மர்பி காலண்டர் மிக அழகாக நேர்த்தியாக இருக்கும்.
7 வால்வுகள், 9 (Volves) வால்வுகள் என்றெல்லாம் பிரபலமான கம்பெனிகள் ஜி.எஸ்.சி. போன்றவைகளால் தயாரிக்கப்பட்ட பெரிய வானொலிப் பெட்டிகள்தான் வீடுகளை அலங்கரிக்கும். எவ்வளவுக்கெவ்வளவு வால்வுகள் அதிகமோ அவ்வளவுக்கவ்வளவு பணம், அந்தஸ்து காட்டுவதாகும். பயன்பாடும் துல்லியமாக _ கர் முர்… இல்லாத _ ஒலிகள் நன்கு கேட்கக்கூடிய வாய்ப்பு ஏற்படும். பெரிய ஏரியல் கட்டவேண்டும்! வானொலி புகழ் என்றே இசை வல்லுநர்களை அக்காலத்தில் வர்ணித்துப் பெருமைப்படுத்துவார்கள்.
கிராமத்துப் பட்டிக்காட்டுப் பாமர மக்கள், நகரங்களுக்கு வந்து பார்த்து இந்தப் பெட்டியில் இப்படி மனிதர்களின் குரல்கள் _ பேச்சு _ பாட்டு எல்லாம் கேட்கும்போது அதிசயப்பட்டு, ஏஞ்சாமி இதுக்குள்ள எப்படி அம்மாப் பெரிய மனுஷன் புகுந்து இப்படிப் பாடறான்? என்று சொல்லி ஏதோ கடவுள் சித்தம் என்று கூறி கன்னத்துத் தாடைகளில் போட்டுக்கொண்ட விசித்திரங்களும் வினோதங்களும் உண்டே!
அந்தப் பெரிய வானொலிப் பெட்டிகளைக் கண்காட்சியில் அல்லவா தேடிக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது! அதன் பிறகு பெரிய அளவிலிருந்து சிறிய அளவுக்கு அறிவியலாளர்கள் மின்னணுவியலாளர்கள் அளவை, இடத்தை எடையைக் குறைத்து பாக்கெட் ரேடியோ, கைக்கடிகாரத்தில் ரேடியோ என்கிற அளவுக்குக் குறைத்துவிட்டார்களே!
அறிவை விரிவு செய்து, அகண்டமாக்கு என்ற புரட்சிக் கவிஞரின் பொன்னான அறிவுரையை ஏற்றதால் இந்த மாறுதல்!
சென்னை கிண்டி என்ஜினியரிங் கல்லூரியின் தமிழ் மன்றத்தில் (பேரவையில்) பெரியார் தாத்தாவைப் பேச அழைத்திருந்தனர். (அதுதான் இன்றைய அண்ணா பல்கலைக்கழகத் தலைமைப் பீடம்). அது முடிந்த பிறகு டாக்டர் வா.செ.குழந்தைசாமி அவர்கள் (அநேகமாக, 1971-_72ஆம் ஆண்டாக இருக்கலாம் _ 40 ஆண்டுகளுக்கு முன்பு) அப்போது டீன் (Dean)ஆக இருந்தார்_தொழில்நுட்பத் துறையில். தந்தை பெரியாருக்கு ஓர் அறையில் பிரம்மாண்டமாக வைக்கப்பட்டிருந்த சூப்பர் கம்ப்யூட்டர் இயந்திரக் கருவியைக் காட்டி விளக்கிச் சொன்னார். அதற்கே ஒரு தனி அறை அப்போது!
பெரியார் தாத்தாவுக்கு இதையெல்லாம் கேட்டு மிகப்பெரிய ஆச்சரியம்! அது மட்டுமா? இனிவரும் உலகத்தில் இப்படி மின்னணுவியல் புரட்சி வரும் என்பதைத் தனது பட்டறிவால் தொலைநோக்குடன் கூறினார்களே, அது மெய்யாகி வருவதினால் மெத்த மகிழ்ச்சிப் பெருக்கும்கூட! ஆனால் அதே கம்ப்யூட்டர், இன்று அவரவர்கள் சட்டைப்பையில், கைகளுக்குள் செல்போனுக்குள்ளேயே குடியேறிவிட்டதே! சூப்பர் கம்ப்யூட்டர் காணாமற் போய்விட்டதே! கட்டுரை நீண்டுவிட்டதே.
துப்புரவுத் தொழிலாளர்கள் பற்றி கடந்த மடலின் தொடர் செய்திகளை அடுத்த இதழில் உங்களுடன் பகிர்கிறேன்.
அன்புள்ள தாத்தா,
கி.வீரமணி