கூடைப் பந்தாட்டம்(Basketball)
பந்தினை எறிவது, தட்டுவது, வேறு திசைப் பக்கம் தட்டிப் பறித்துக் கொண்டு ஓடுவது, இரும்பு வளையத்துடன் இணைக்கப்பட்டுள்ள வெள்ளை நூல்களால் பின்னப்பட்டுத் தொங்கிக் கொண்டிருக்கும் வலைகளுக்குள் போடுவது போன்ற சிறப்புகளைக் கொண்டது கூடைப் பந்தாட்டம் .
அய்க்கிய அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் நகரில் வாழ்ந்த முனைவர் ஜேம்ஸ் நெய்ஸ்மித் பால்கனியில் கூடையைத் தொங்கவிட்டு அதனுள் பந்தைப் போட முயன்று 1891இல் விளையாடியதே கூடைப்பந்து விளையாட்டு தோன்றக் காரணமாக அமைந்தது. ஆடுகளத்தின் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்கு மிக வேகமாக சில வினாடிகளுக்குள் சென்று திரும்பும் இந்த விளையாட்டு சுமார் 200 நாடுகளில் ஆர்வத்துடன் விளையாடப்படுகிறது.
எதிர் அணியினரின் கூடைக்குள் பந்தை எறிவதும், தம் பகுதியில் உள்ள கூடைக்குள் பந்தினை எதிர் அணியினர் எறிய விடாமல் தடுப்பதுமே இந்த விளையாட்டின் குறிக்கோளாகும். 5 பேர் கொண்ட இரண்டு குழுக்களிலும் சேர்த்து 10 பேர் விளையாடுவர். மாற்று ஆட்டக்காரர்களாக 5 பேர் இருப்பர்.
ஆட்ட நேரம்
50 நிமிடங்கள் கொண்ட இந்த விளையாட்டில், 20 நிமிடம் ஒரு அணியினர் விளையாடுவர். 10 நிமிட இடைவேளை. பின்பு 20 நிமிடங்கள் இன்னொரு அணியினர் விளையாடுவர்.
ஆடுகளம்
பந்தைக் கையினால் தரையில் தட்டிக் கொண்டே ஓடும்போது பந்து எழும்புவதற்கேற்ற கடினமான, சமமான 28 மீட்டர் நீளம் 15 மீட்டர் அகலத்துடன் கூடிய தரை தேவை. களத்தின் இரு முனையிலும் தரையிலிருந்து 3.05 மீட்டர் உயரத்தில் கூடை போன்ற அமைப்புடைய 45 செ.மீட்டர் விட்டமுள்ள இரும்பு வளையமும் அந்த வளையத்திலிருந்து வட்டமாகத் தொங்கும் அடிப்பாகம் திறந்த கயிற்று வலையும் இருக்க வேண்டும்.
விதிமுறைகள்
எதிரணியின் பகுதிக்கும், அவர்களது தடையில்லா எறிதல் (Free throw line) கோட்டிற்கும் இடையே 3 வினாடிகளுக்கு மேல் வீரர்கள் நிற்கக் கூடாது. எந்த வீரரின் கையிலும் 5 வினாடிகளுக்கு மேல் பந்து இருக்கக் கூடாது. தங்கள் பகுதியில் பந்து கையில் கிடைத்தால் 10 வினாடிகளுக்குள் அவர்கள் முன்பகுதிக்குப் பந்தை எடுத்துச் செல்ல வேண்டும்.
புள்ளிகள்
பந்தை எதிரணியின் கூடையில் எறிந்து விழ வைக்கும் அணிக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும். கூடைக்கு முன்பு தரையில் வரைந்துள்ள அரை வட்டத்திற்கு வெளியே இருந்தவாறே பந்து எறியப்பட்டு கூடையில் விழுந்தால் 3 புள்ளிகள் கொடுக்கப்படும். அரை வட்டத்திற்கு உட்பக்கத்தில் ஒரு வட்டம் வரையப்பட்டு நடுவில் தடையில்லா எறிதலுக்காக கோடு போடப்பட்டிருக்கும். தங்கள் கூடையில் பந்து விழாமல் தடுக்கும்போது தப்பாட்டம் (Foul Play) ஆடினால் எதிரணியினர் இந்தக் கோட்டில் நின்று தடையின்றிக் கூடையை நோக்கிப் பந்தைப் போட வாய்ப்பு அளிக்கப்படும். அப்போது 1 புள்ளி கிடைக்கும்.