குட்டிக் கதை – உழைப்பின் மகிமை
நாம மூனு பேருமா சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமா அந்தப் பாறையை வெட்டி எடுத்துட்டா, நிச்சயமா அதுக்குக் கீழே தண்ணி இருக்கும். கொஞ்சம் தயவு பண்ணுங்கய்யா.
வேலப்பன் தன் இரு மகன்களிடமும் கெஞ்சினார்.
அட போப்பா, இந்த வட்டாரத்துலே எல்லாக் கெணறும் வருஷத்துக்கு முன்னேயே வத்திப்போச்சு. ஏதோ அதிருஷ்டம் நம்மளது மட்டும் நாலு மாசம் முன்னாலதான் வத்திப்போச்சு. இனிமே பாறையெல்லாம் வெட்டி எடுத்தாக்கூட, தண்ணி கெடைக்குமுன்னு நிச்சயமே இல்ல. வெட்டி வேலைக்கு நாங்க இல்லே என்ற இருவரையும் ஏக்கத்தோடு பார்த்தார் வேலப்பன்.
சுத்த சோம்பேறி மகன்கள், சாப்பிடறதும் ஊர் சுத்தறதும்தான் வேலை. அந்த வட்டாரத்திலுள்ள எல்லாக் கிணறுகளும் ஒரு வருடத்துக்கு முன்னரே வற்றியபோதிலும், வேலப்பனின் பாட்டன் காலத்துக் கிணறு மட்டும் வற்றாமல் இருந்தது. அதுவும் நாலு மாதங்களாக வற்றிவிட்டது. கிணற்றின் அடியிலுள்ள பெரிய பாறையை வெட்டி நீக்கினால், நிச்சயமாக அதன் கீழே ஊற்றுப் பெருக வாய்ப்புண்டு என வேலப்பன் உறுதியாக நம்பினார். எங்கேயோ அடைப்பு இருப்பதால்தான் கிணறு வற்றியிருக்குமென நினைத்தார். அறுபது வயதான அவரால் தனியாக அந்தப் பாறையை வெட்டி நீக்க முடியாததால்தான், தன் மகன்களின் உதவியை வேண்டினார். உழைத்தே வாழ்ந்த அவருக்குச் சோம்பேறிகளாக இரண்டு மகன்கள். நிலம் காய்ந்து கிடப்பதைக் கண்ட அவர் மனம் இரத்தக் கண்ணீர் சிந்தியது.
அவர் ஒரு முடிவுக்கு வந்தார். ஒரு கடப்பாறை, மண்வெட்டி, கூடையுடன் கிணற்றுக்குள் இறங்கி, தனியாளாக தினமும் சிறிது சிறிதாகப் பாறையை வெட்டி நீக்க ஆரம்பித்தார். விடியற்காலை இறங்குபவர், அந்தி மாலைவரை உழைத்தார். அவரது மகன்களும், ஏன், சில அயல் நிலத்துக்காரர்களும்கூட அவரை ஏளனமாகப் பார்த்தபடி, கெழவனுக்கு ஏன் இந்த வெட்டி வேலை என்று சொன்னதைப் பற்றியும் அவர் கவலைப்படவே இல்லை.
கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் கடுமையாக உழைத்தார். எட்டுக்கு எட்டடி நீளமும் அகலமும், பத்தடிக்கு மேல் ஆழமுள்ள பாறையை அவர் ஒருவரே சிறிது சிறிதாக வெட்டி நீக்கினார்.
ஒருநாள் ஒரு மூலையில் ஈரப்பதம் கண்டவுடன், அந்த இடத்தில் கடப்பாறையால் தன் வலிமை முழுவதையும் திரட்டி, ஒரு பெரிய பாறைத்துண்டை வெட்டி அகற்றியதும், அந்த இடத்திலிருந்த ஒரு பெரிய ஊற்று உடைப்பெடுத்துப் பெருகி, தண்ணீர் மிக வேகத்துடன் பீச்சியடித்ததும், அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையேயில்லை.
ஊற்றின் கண் மிகப் பெரியதாக இருந்ததால், வெகுவேகமாக அந்தக் கிணற்றின் மேல் விளிம்புவரை நீர் உயர்ந்து நிறைந்து, வெளியே வழியவும் ஆரம்பித்தது. அவரை ஏளனம் செய்தவர்கள் வெட்கப்பட்டார்கள். வேலப்பன் எல்லோரையும் அந்தக் கிணற்று நீரை எடுத்துப் பயன்படுத்த அனுமதித்தார். அவர்களது வெள்ளாமைக்கும் பயன்படுத்த உதவினார்.
அவரது தனிமனிதப் பேருழைப்பின் சாதனையால், அந்த வறண்ட வட்டாரம் செழிக்க ஆரம்பித்ததை அறிந்த மாவட்ட ஆணையர், நேரில் வந்து வேலப்பனைப் பாராட்டி, அய்ம்பதாயிரம் ரூபாய் ரொக்கப் பரிசையும் அளித்தார். மேலும், ஒரு பெரிய குடிநீர்த் தொட்டியை அமைத்து, குடிநீர்க் குழாய்களின் வசதிக்கும் உடனடியாக ஆணையிட்டார்.
வேலப்பனின் உழைப்புக்குப் பெரும் ஊதியமும் கிடைத்து, பெரும்புகழும் கிடைத்து, ஊருக்கு நன்மையும் கிடைத்ததைக் கண்ட இரு மகன்களும், தந்தையின் பெருமையையும், உழைப்பின் மகிமையையும் பூரணமாக உணர்ந்து கொண்டவர்களாய், ஆளுக்கொரு மண்வெட்டியுடன் வயலை நோக்கி நடந்தனர்.
– கே.பி.பத்மநாபன்