சாகச நிகழ்ச்சிகளைப் பார்த்து சாதித்தவர்
ஆள் பாதி ஆடை பாதி என்று சொல்வதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். விலை உயர்ந்த வித்தியாசமான ஆடைகளை உடுப்பது என்றால் எல்லோருக்கும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கும். அதுவும், அந்த வித்தியாசமான உடையினை அணிந்து கொண்டு விமானத்தின் உதவியின்றி விண்ணில் பறக்கலாம் எனில் யாருக்குத்தான் ஆசை இருக்காது.
இந்த ஆசையை நிறைவேற்றும் வகையில், நியுசிலாந்து நாட்டின் கிறிஸ்ட் சர்ச் நகரில் வசிக்கும் கிளன் மார்டின் என்பவர் பறக்கும் உடையினை வடிவமைத்துள்ளார்.
இரண்டு சிலிண்டர்களுடன் முன்னோக்கித் தள்ளக்கூடிய காற்றாடிகள் அமைக்கப்பட்டு, அவை கார்பன் இழையினாலான சட்டங்களில் பொருத்தப்பட்டுள்ளன. வானத்தில் பறக்க நினைப்பவர் உடையினை முதுகில் மாட்டிக் கொண்டு அதிலுள்ள பட்டை வாரினால் இறுக்கமாகக் கட்டிக் கொள்ள வேண்டும். நாம் செல்லும் திசைக்கு ஏற்றபடி மாற்றிக் கொள்ளும் வகையில் கைப்பிடிகள் அமைந்துள்ளன. ஒரு மணி நேரத்திற்கு 74 கிலோ மீட்டர் வரை செல்ல இயலும் இதில் 330கிலோ எடையுள்ள பொருள்களை எடுத்துச் செல்ல முடியும்.
சிறுவனாக இருந்தபோது தான் பார்த்து ரசித்த தொலைக்காட்சித் தொடர்களான தண்டர்பர்ட்ஸ், லாஸ்ட் இன் ஸ்பேஷ் போன்றவையே தனது முயற்சிக்கும் வெற்றிக்கும் காரணம் என்று மார்டின் கூறியுள்ளார்.
2014ஆம் ஆண்டு உபயோகத்துக்கு வரும் இந்த உடை 75 லட்சம் ரூபாயாம். முதலில் ராணுவ வீரர்கள், விமான ஊழியர்கள், தீயணைப்பு வீரர்களுக்காக பிரத்யேகமான முறையில் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட உள்ளது. 2015ஆம் ஆண்டில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளது.
பிஞ்சுகளே, தொலைக்காட்சியில் சாகசச் செயல்களைப் பார்க்கும் நீங்களும் அதனை அப்படியே செய்ய நினைக்காமல், ஆராய்ச்சியில் ஈடுபட்டு செயலில் காட்டி பெயரும் புழும் நாட்டிற்குப் பெற்றுத் தந்து வரலாற்றில் இடம் பெறலாமே.