கால் பந்தாட்டம் (Foot Ball)
விறுவிறுப்பான _ மிகவும் வேகமான விளையாட்டு கால்பந்தாட்டம் ஆகும். எந்த நாட்டிலிருந்து வந்தது? எந்த நாட்டிற்குச் சொந்தம்? யார் கண்டுபிடித்தது என்பதற்கு ஆதாரப்பூர்வமான விடை இல்லை.
கால் பந்தாட்டம் விளையாட இரண்டு குழுக்கள் தேவை. ஒவ்வொரு குழுவிலும் 11 பேர்கள் இருக்க வேண்டும். இருவர் கோல் கீப்பராகச் செயல்பட வேண்டும். 28 அங்குலச் சுற்றளவு கொண்ட பந்தின் மேல்பாகம் விளையாடுபவர்களுக்குத் தீங்கு விளைவிக்காத வகையில் இருத்தல் அவசியம். பந்தினுள் 16 அவுன்சிற்கு மேற்படாத வகையில் காற்று அடித்துக்கொள்ள வேண்டும்.
ஒரு குழுவிற்கு 45 நிமிடங்கள் வீதம் 90 நிமிடங்கள் கொடுக்கப்படும். இடைவேளை 5 நிமிடத்திற்குமேல் கிடையாது.
ஒவ்வொரு அணியிலும் எழுவர் இடம்பெற்று விளையாடும் விளையாட்டாகவும் கால்பந்தாட்டம் பின்னர் உருவாகியுள்ளது.
விளையாட்டு அரங்கின் நடுவில் வைக்கப்படும் பந்து நிலைப்பந்து எனப்படும். டாஸ் மூலம் வெற்றி பெற்ற குழுவிலிருந்து ஒருவர் எதிர்ப்பகுதியை நோக்கி உதைக்க ஆட்டம் தொடங்கும். முதலில் பந்தினை உதைத்துத் தொடங்கியவர், மீண்டும் 2ஆம் தடவையாக மற்றவர்கள் ஆடும்முன் ஆடக்கூடாது. கோல் போட்ட குழுவினர், அடுத்து பந்தை உதைத்து ஆடும் வாய்ப்பைப் பெறுவர். இப்படி, இடைவேளை வரை ஆடிய பிறகு இரண்டு குழுக்களும் தத்தம் இடங்களை (கோல் சைடுகளை) மாற்றிக் கொள்வர்.
முழங்கால், கணுக்கால் இவற்றின் இடையில் பந்தை ஏந்திக் கொண்டும் கோல் போடலாம். பந்தை நேராகக் குறிவைத்து உதைத்துக் கோல் போடக் கூடாது.
பிரி கிக் என்பது தவறு செய்துவிட்ட குழுவிற்கு எதிராக அளிக்கப்படும் சலுகை. இதன்படி, அந்தக் குழுவிற்கு எதிராகப் பந்தினை உதைத்து நேராகக் கோல் போடலாம். இன்டைரக்ட் கிக் என்று கொடுக்கப்படும் சலுகையின்படி, பந்தை நேரடியாக உதைத்துக் கோல் போட முடியாது.
டைரக்ட் அல்லது இன்டைரக்ட் கிக் கிடைக்கும்போது, எதிர்ப்பகுதி ஆட்டக்காரர்கள் அனைவருமே பந்து இருக்குமிடத்திலிருந்து 10 கெஜ தூரத்தில் நிற்க வேண்டும். எந்த நிலையிலும் பந்தினை முன்னோக்கியே உதைக்க வேண்டும்.
எந்தக் காரணத்தைக் கொண்டும் உதைக்கப்பட்டு ஓடிவரும் பந்தைக் கையால் தடுப்பதோ, எடுப்பதோ அடிப்பதோ அல்லது தள்ளுவதோ கூடாது. இப்படிப்பட்ட தவறுகள் நேரும்போது, எதிர்ப்பகுதியினர் டைரக்ட் ஃப்ரி கிக் என்ற பலனைப் பெற்றுக் கோல் போட்டு வெற்றி பெற்றுவிடுவர்.