பிரச்சினைகளை பெற்றோரிடம் சொல்லத் தவறாதீர்!
– சிகரம்
பிஞ்சுகள் உள்ளம் கள்ளம் கபடமற்றது. அதேநேரத்தில் அய்யங்கள் நிறைந்தது. வினாக்கள் விடாது எழுந்துகொண்டே இருக்கும். வினவத் தெரிந்த வயது என்று அதை அழைப்பர். வெனவு தெரிந்த நாளாய் என்று வழக்கத்தில் இதைக் கூறுவர்.
வினவ என்பதன் திரிபே வெனவு என்பது. அதாவது, அது என்ன? இது என்ன? என்று கேள்வி கேட்கத் தொடங்கும் நாள் என்பது அதன் பொருள்.
பிறந்த குழந்தை முதலில் பார்த்தறியும், பின் கேட்டறியும் அதன்பின் பேசக் கற்றுக்கொள்ளும். அடுத்த கட்டம்தான் எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள முயலும். அதன் விளைவாய் வினாக்கள் தொடுக்கும். பிள்ளைகளின் அறிவு என்பது வினாக்கள் எழுப்பும் அளவையும் அதற்குப் பெரியவர்கள் அளிக்கும் பொறுப்பான, தெளிவான, சரியான பதிலைப் பொறுத்தே அவர்களுக்கு அறிவும் தெளிவும் கிடைக்கும்.
விடை தெரியாமலோ அல்லது விடை சொல்ல ஆர்வமின்மையாலோ பிள்ளைகள் கேள்விக்கு மடை போட்டுவிடக் கூடாது. அது அவர்களின் அறிவு வளர்ச்சிக்குத் தடையாகிவிடும். எனவே, பிள்ளைகள் வினா எவ்வளவு எழுப்பினாலும் அவர்களை ஊக்குவித்து தெளிவான, சரியான விடைகளை விளக்கமாகச் சொல்ல வேண்டும்.
எந்த அய்யமிருந்தாலும் கேள் என்று பிள்ளைகளை ஊக்கப்படுத்த வேண்டும். இதன் மூலம் பெற்றோர் பிள்ளை உறவு சிறக்கும். பிள்ளைகளும் தயக்கமின்றி பெற்றோரிடம் கருத்துப் பரிமாற்றம் செய்ய இது துணை நிற்கும்.
வினா எழுப்பி விளக்கம் தருவது எந்த அளவிற்கு பிள்ளைகளுக்கு இயல்பான ஒன்றாக இருக்கிறதோ, அதேபோல சில நிகழ்வுகளை பெற்றோரிடம் சொல்லத் தயங்குவது அவர்களின் இயல்பாக உள்ளது.
குறிப்பாக, வெளியிலும் பள்ளியிலும் வீட்டிலும் தன்னிடம் பிறர் நடந்துகொள்ளும் செயல்பாடுகளை எப்படிச் சொல்வது என்ற தயக்கத்தில் சொல்லாமல் மறைக்கின்றனர். பிள்ளைகள் இவ்வாறு மறைப்பது அவர்களுக்குப் பெரும் சிக்கலை ஏற்படுத்தும்.
எனவே பிள்ளைகள் எது நடந்தாலும் அதைப் பெற்றோரிடம் தயங்காது சொல்ல வேண்டும். பெற்றோரும் அவ்வாறு சொல்ல அறிவுறுத்த வேண்டும். ஒவ்வொரு நாளும் பிள்ளைகளிடம் இன்று ஏதாவது உனக்கு எரிச்சலூட்டும், தொல்லை தரும் நிகழ்வு நடந்ததா என்று கேட்க வேண்டும்.
பள்ளியில் ஆசிரியர் அல்லது பெரிய மாணவர்கள், வெளியில் சந்திக்கின்றவர்கள் அல்லது வீட்டுக்கு வருகின்றவர்கள் என்று பலரும் பிள்ளைகளுக்குப் பாலுணர்வுத் தொல்லைகள் கொடுப்பது அதிகரித்து வருகிறது.
எனவே தன்னைத் தொடுகின்றவர், அணைக்கின்றவர், தடவுகின்றவர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதைக் கண்டறியும் விழிப்புணர்வைப் பிள்ளைகளுக்கு உருவாக்க வேண்டும். எங்கெல்லாம் தொடக்கூடாது, எப்படியெல்லாம் தொடக்கூடாது, நல்ல தீண்டல் எது? கெட்ட தீண்டல் எது? என்பவற்றைச் சிறு வயதிலேயே விளக்க வேண்டும்.
பாலுணர்வு சார்ந்த தொல்லைகள் மட்டுமன்றி பிள்ளைகளைக் கடத்த மிட்டாய் தருதல், பொம்மை தருதல் என்று அறிமுகம் இல்லாத யார் வந்தாலும் அதை ஏற்க மறுக்கவும் அவர்களை அடையாளம் காட்டவும் பழக்க வேண்டும்.
பிள்ளைகளுக்குப் போதிக்கும் ஆசிரியர்கள் இவை சார்ந்த விழிப்புணர்வைப் பிள்ளைகளுக்கு ஊட்ட வேண்டும்.
பெற்றோரும், ஆசிரியர்களும் பிள்ளைகளைக் கண்காணிக்க வேண்டும். பிள்ளைகளின் பாதுகாப்பு இவர்களையே பெரிதும் சார்ந்துள்ளது.
பிள்ளைகள் வழக்கமான மன நிலையிலிருந்து மாறுபட்டுக் காணப்பட்டால் உடனடியாக பெற்றோரும் ஆசிரியர்களும் பெரியவர்களும் காரணம் கேட்டறிய வேண்டும்.
பிள்ளைகள் உலக அனுபவம் அதிகம் பெறாதவர்கள். எனவே அவர்கள் எளிதில் ஏமாற்றப்பட அதிகம் வாய்ப்புண்டு. ஆகையால் இதுபோன்ற எச்சரிக்கைகளும் விழிப்புணர்வும் பிள்ளைகளின் பாதுகாப்பிற்கும் நலனுக்கும் பெரிதும் உதவும். பிஞ்சுகளும் பெரியவர்களும் இதை ஆழமாக உள்ளத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.