நவீன மருத்துவத்தின் தந்தை ஹிப்போகிரேட்டீஸ்

மனிதனின் உடலில் நோய்கள் வருவதற்குக் காரணம் கடவுளின் கோபம்தான் என்று பழங்கால மக்கள் நம்பி வந்தனர். அதனால்தான் கடவுளுக்குப் பலியிடுதல், படையல் போடுதல், வேண்டுதல் செய்தல் போன்றவற்றில் ஈடுபட்டனர். இந்த மூடநம்பிக்கையை முதலில் தகர்த்தவர் கிரேக்க நாட்டைச் சேர்ந்த ஹிப்போகிரேட்டீஸ்.
நவீன மருத்துவ இயலின் தந்தை என்று போற்றப்படும் இவர்தான் மனித இனத்துக்கே புத்துயிர் அளித்தவர் என்ற பெருமைக்குரியவர், கிரேக்க நாட்டிலுள்ள காஸ் தீவில் கி.மு. 460 ஆம் ஆண்டு பிறந்த இவரது தந்தை ஒரு மதபோதகர் ஆவார். முன்னோர்களின் கருத்தில் நம்பிக்கை வைக்காமல், சுயமாகச் சிந்திக்க ஆரம்பித்தார்.
மனிதர்களுக்கு ஏற்படும் நோய்களுக்கு கடவுளின் கோபமே காரணம்; எனவே, கோவிலுக்குச் சென்று மதபோதகர்களிடம் மருந்து வாங்கிச் சாப்பிட்டால் நோய் குணமாகும் என்ற கருத்தை ஹிப்போகிரேட்டீஸ் ஏற்கவில்லை.
நோயினைக் கடவுள் தருவதுமில்லை, திரும்பப் பெறுவதுமில்லை என்பதை ஆணித்தரமாகக் கூறினார். மனித உடலை ஆய்வு செய்து நோய்க்கான உண்மையான காரணத்தினை _- உடல் குறைபாட்டினை அறிந்து சிகிச்சை பெறும் வழிமுறை ஏன் இல்லை என்று யோசித்தார்.
பேய் பயம் மற்றும் கடவுள் கோபத்தினால் நோய் வருகிறது என்பது அப்பட்டமான பொய் என்ற முடிவுக்கு வந்தார். சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைக்க வேண்டும் என்று கூறி, பாதுகாக்கும் வழிமுறைகளை எடுத்துக் கூறினார். நீராவியால் கொடுக்கப்படும் சிகிச்சை பற்றிக் கூறி சிகிச்சையும் அளித்தார்.
சூடான நீரையும் குளிர்ந்த நீரையும் பயன்படுத்தி காய்ச்சல், காயங்களைக் குணப்படுத்தினார். குளிர்ந்த நீர் மனிதனின் உடல் வெப்பநிலையினைச் சீராக வைக்கிறது என்றார். கோவில் மதபோதகர்களிடம் சென்ற மக்களைச் சந்தித்து, மூடநம்பிக்கைகளை விளக்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
அறிவியல் அணுகுமுறையால் வெற்றி பெற்றார். நோயின் காரணம் அறிந்து குணப்படுத்தும் வழியைக் காணவேண்டும் என மருத்துவர்களுக்கும் அறிவுரை வழங்கினார்; கிரேக்கம் மட்டுமல்ல, உலகம் முழுதும் புகழப் பெற்றார்.
மனித இனத்தின் ஆயுள் அதிகரித்ததற்கு நவீன மருத்துவ அறிவியலைத் தொடங்கிய ஹிப்போகிரேட்டீஸ்தான் முதல் காரணம். தற்போது மருத்துவத் துறையில் பட்டம் பெறும் மாணவர்கள் ஹிப்போகிரேட்டீஸ் பெயரினைக் கூறி மனித இனத்திற்குச் சேவை செய்வதாக உறுதி எடுப்பது நினைவில் கொள்ளத்தக்கது.