அறிவைப் பயன்படுத்திய முதல் உயிரினம் நீள்வரல் தேவாங்கு(Aye-Aye)
உலகில் முதன்முதலில் அறிவைப் பயன்படுத்திய விலங்கு என்ற பெருமைக்குரியது Aye-Aye. இதன் பரிணாம வளர்ச்சிதான் இன்றைய மனிதனின் அறிவுத்திறன் என்று சார்லஸ் டார்வின் கூறியுள்ளார்.
முதுகெலும்புள்ள பாலூட்டி இனத்தைச் சேர்ந்த Aye-Aye மடகாஸ்கர் தீவினில் மட்டுமே காணப்படுகிறது. Animalia வகையினுள் Daubentoniidae குடும்பத்தில் Mammalia பிரிவினைச் சேர்ந்தது.
அணிலைப் போன்ற கால் விரல்களையும் வண்ண முடியையும் நீண்ட வாலையும் பெற்று, பூனையைப் போன்ற தலை அமைப்பையும் கண்களையும் காதுகளையும், மூக்கையும் பெற்றுள்ளன.
Aye-Aye தேவாங்கு போன்ற உருவத்தைப் பெற்று நீண்ட விரல்களைக் கொண்டுள்ளதால் நீள்விரல் தேவாங்கு என்று இங்கு பெயரிடப்பட்டுள்ளது.
இதன் முன்பற்கள் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும் இயல்புடையன. 3 அடி நீளம் உடைய இதன் வால் பெரும்பாலும் உடல் நீளத்திற்கு இணையாக அமைந்திருக்கும்.
காலின் மூன்றாவது விரல் மற்ற விரல்களைவிட மெலிந்து இருக்கும். இது மரங்களைத் தட்டிப் பார்த்து அதன் உள்ளே இருக்கும் பூச்சிகளைத் தெரிந்துகொள்ள உதவுகிறது. நீளமாக இருக்கும் 4ஆவது விரல் மரக்கிளைகளின் இடையிலிருக்கும் சிறுசிறு பூச்சிகளைப் பிடித்துச் சாப்பிட உதவுகிறது.
மரத்தின் உச்சியிலேயே இருக்கும் இவை, மரத்தின் கிளையில் கோள வடிவில் கூடு கட்டிக் கொள்ளும். பகல் முழுவதும் மரத்தில் தூங்கிக் கொண்டே இருக்கும். இருட்டிய பிறகு தனக்குத் தேவைப்படும் இரையைத் தேடிச் சாப்பிட்டு வயிற்றை நிரப்பிக் கொள்ளும்.
கொட்டை, பழம், விதை, புழு பூச்சிகள், வண்டுகள், தேன், பூஞ்சை ஆகியவற்றைச் சாப்பிடும். நீள்விரல் தேவாங்கு அனைத்துண்ணி வகையினைச் சார்ந்ததாகும். நுண்ணிய செவித்திறன் கொண்டன. தோட்டங்களுக்குச் சென்று தேங்காய், மாங்காய், கரும்பு போன்றவற்றையும் சாப்பிடும். இவற்றின் பல் தேங்காய் சாப்பிட ஏதுவாக அமைந்துள்ளது.
நீள்விரல் தேவாங்கினைப் பார்த்தால் மரணம் ஏற்படும் என்ற மூடநம்பிக்கையின் காரணமாக வேட்டையாடப்பட்டு இன்று மிக அரிதான விலங்கினங்களுள் இதுவும் ஒன்றாக உள்ளது.