இறகுப் பந்தாட்டம்(Badminton)
மட்டைப் பந்து விளையாட்டுகளுள் ஒன்றான இறகுப் பந்தாட்டம் இந்தியாவில் தோன்றியதற்கான வரலாற்றுக் குறிப்புகள் காணப்படுகின்றன. குறிப்பாக, இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி நடைபெற்றபோது (1800களில்) தோன்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. தஞ்சையை ஆண்ட மன்னர்களும் அவர்களது குடும்பத்தினரும் விளையாடிய ஒரு விளையாட்டு பூப்பந்தாட்டம் என்று அழைக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் நாட்டில் மட்டையை (Bat) வைத்து இறகுப் பந்தை (ஷட்டில்) அடித்து விளையாடிய விளையாட்டு ஹானெட்சுக்கி என்ற பெயரில் அழைக்கப்பட்டுள்ளது. (இறகுப் பந்து என்பதை நெட்டிப் பந்து என்றும் தமிழில் அழைக்கலாம்).
பிரிட்டன் இராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகளால் இங்கிலாந்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. 1873ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் ப்யூபர்ட் பிரபுவின் கிராமப் பகுதியான பாட்மின்டன் (Badminton) என்ற இடத்தில் விளையாடப்பட்டதால் ஆங்கிலத்தில் பாட்மின்டன் என்ற பெயரினைப் பெற்றது.
பூக்குவளை போல இருக்கும் இறகுகளாலான பந்தினை (Shuttlecock) இறுக்கமாகப் பின்னிய வலை மட்டையினால் (Racquet) வலைக்கு மேலே போய் எதிரணியினரின் ஆடுகளப் பகுதியில் விழும்படி அடித்து விளையாடும் விளையாட்டே இறகுப் பந்தாட்டம் எனப்படுகிறது.
1893ஆம் ஆண்டு இங்கிலாந்து பேட்மின்டன் சங்கம் புதிய விதிமுறைகளை வகுத்தது. 1899ஆம் ஆண்டு இங்கிலாந்து சாம்பியன்ஷிப் போட்டி தோற்றுவிக்கப்பட்டது. 1920-களில் அய்ரோப்பா முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டானது. 1934இல் அகில உலக பேட்மின்டன் பெடரேஷன் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. 1936ஆம் ஆண்டு இந்தியா இந்தச் சங்கத்தில் சேர்ந்துள்ளது.
ஆடுகளம்: ஒற்றையர் ஆடுகளம், இரட்டையர் ஆடுகளம் என இரு பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது.
ஒற்றையர் ஆடுகளத்தின் நீளம் 13.40 மீட்டர், அகலம் 5.18 மீட்டர், இரட்டையர் பிரிவின் நீளம் 13.40 மீட்டர், அகலம் 6.10 மீட்டர். மய்யக் கோட்டிலிருந்து ஒவ்வொரு பக்கத்திலும் 1.98 மீட்டர் நீளத்திற்கு Short Service Line இருக்கும்.
அந்தக் கோட்டைத் தாண்டி முதல் பந்தை அடிக்க வேண்டும். அது Short Service Line எனப்படும். (இரு பக்கங்களின் பின் கோட்டிற்கு உட்புறம் 76 செ.மீ.க்கு இரட்டையருக்கான நீள பந்து போடும் கோடு இருக்க வேண்டும். பக்கக் கோட்டிற்கு உட்புறம் இரு பக்கங்களிலும் 46 செ.மீ.க்கு ஒற்றையருக்கான பக்கக்கோடு இருக்க வேண்டும். தரையிலிருந்து வலையின் மய்யத்தில் உயரம் 5 அடியாகவும், இருபுறங்களிலும் 5 அடியாகவும் இருக்கும்.
பந்து: இறகுப் பந்தின் எடை 4.73 கிராம் முதல் 5.50 கிராம் வரை இருக்கலாம். இறகுகள் 14 முதல் 16 வரை இருக்கலாம். பந்தின் விட்டம் 1 முதல் 1 1/8 அங்குலம் கார்க்கின்மேல் இருக்கும். நீளம் 2½ முதல் 2¾ அங்குலம் வரை இருக்கலாம்.
மட்டை: மட்டையின் உயரம் 26 முதல் 27 அங்குலம் வரையும் விட்டம் 8 முதல் 9 அங்குலம் வரையும் இருக்க வேண்டும்.
வெற்றி இலக்கு: 15 புள்ளிகள் எடுக்கும் அணியினர் வெற்றி பெற்றவராவார். (பெண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் 11 புள்ளிகள்). போட்டியின்போது இரண்டுமுறை வென்ற அணியே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.
இரு அணிகளும் சமமாக 14 அல்லது 15 புள்ளிகள் எடுத்தால், அதிகப் புள்ளிகளை எடுத்த அணி விரும்பினால் செட்டிங் எனப்படும் கூடுதல் ஆட்டம் (எக்ஸ்ட்ரா கேம்) விளையாடலாம்.
வழக்கமாக இறகுப் பந்தாட்டத்தை நாம் Shuttlecock என்று மட்டுமே குறிப்பிடுவோம். ஆனால் அதன் முறையான பெயர் Badminton என்பதே! இதேபோல் பூப்பந்தை வைத்து விளையாடும் ஆட்டம் Ball Badminton எனப்படும்.