ஆழ்கடலின் அடியில் இருப்பதென்ன?
– பேரா. ந.க.மங்களமுருகேசன்
கடலில் ஆழத்தைக் கண்டறிய 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் முயற்சிகள் மேற்கொண்டனர். ஆனால் அப்போது அதற்கு நவீன கருவிகள் இல்லையாதலால் மிக நீளமான கயிற்றை அல்லது சங்கிலியைக் கடலின் உள்ளே ஆங்காங்கே இறக்கி மிகவும் பழமையான முறையை மேற்கொண்டு, சுமார் 7,000 இடங்களில் இவ்வாறு ஆழம் கண்டறிந்தனர்.
அதாவது, ஒவ்வொரு 12,000 சதுர மைல் பரப்புக்கும் ஓர் இடம் வீதம்தான் கடலின் ஆழத்தை அறிந்தனர். இந்த முறையில் குறிப்பிட்ட இடத்தின் ஆழத்தை மட்டும் அறியமுடிந்ததே தவிர, கடலின் அடிமட்டம் குறித்து அறிய _ வரைபடம் தயாரிக்க இது உதவவில்லை.
பின்னர் ஒலி அலைகளைப் பயன்படுத்தி கடலின் ஆழத்தை அறிய முயன்றனர். ஒலி அலைகள் நீரில் நன்கு செல்லும். கடலின் அடிமட்டத்தை நோக்கி ஒலி அலைகளைச் செலுத்தினால் அவை எதிரொலித்துத் திரும்பும் நீரில் ஒலி வேகம் எவ்வளவு என்பதைக் கொண்டு அந்த இடத்தில் ஆழம் எவ்வளவு என்பதைக் கணக்கிட்டுக் கண்டுபிடித்துவிட முடியும்.
இந்த உத்தியின் அடிப்படையில் எக்கோ சவுண்டிங், சைட் ஸ்கேன் ஸ்கேனர் ஆகிய கருவிகள் உருவாக்கப்பட்டு கடலின் நில அமைப்பை வரைபடமாகக் காட்டுகின்றன.
இந்தக் கருவிகள் தயாரித்துள்ள பதிவேடுகள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துப் பெரியதொரு படமாக்கிப் பார்த்தால் கடல்கள் அனைத்தும் வற்றிப் போனால் அவை எவ்வாறு காட்சி அளிக்குமோ அப்படிப்பட்ட காட்சியை அப்படம் அளிக்கும்.
அப்படத்தைப் பார்த்தால் கண்டத்திட்டு (Continental Shelf), கண்டச் சரிவு (Continental Slope) ஆழ்கடல் (Abyss) ஆகிய மூன்று பகுதிகளை நீர் உலகம் கொண்டது எனத் தெரியவரும்.
கண்டங்களிலிருந்து கடலுக்குள் நீட்டிக் கொண்டு இருக்கும் பகுதி கடல் ஆழம் அதிகம் இல்லாத கண்டத்திட்டு ஆகும். அமெரிக்காவின் மேற்குக் கரையில் கண்டத்திட்டு கரையிலிருந்து சுமார் 10 மைல் தூரம் வரையே அமைந்துள்ளது.
கண்டத்திட்டு முடிந்து கண்டச் சரிவு தொடங்கும் இடம் வரையில் கடலாழம் சராசரியாக 450 முதல் 600 அடிவரை, கரையிலிருந்து கண்டச் சரிவு வரை கடல் ஆழம் அதிகமில்லை. கண்டத்திட்டுப் பகுதியில்தான் மீன்களும் கடல் தாவரங்களும் மிக அதிகமாகக் காணப்படுகின்றன. பெட்ரோலிய ஊற்றுக்களும் கண்டத்திட்டுப் பகுதியில்தான் அமைந்துள்ளன.
கண்டச் சரிவிலிருந்து ஆழ்கடல் பகுதி வரை சரிவு அனேகமாகச் சீராக இருக்கிறது.
கண்டச் சரிவு தொடங்கும் இடமிருந்து கடலாழம், 8,000 அடி, 12,000 அடி, 18,000 அடி என அதிகரித்துக் கொண்டு பிறகு ஆழ்கடல் பகுதி வருகிறது.
கண்டச் சரிவுப் பகுதிகளில் அனேக இடங்களில் குடைவுப் பள்ளத்தாக்குப் போன்று பள்ளத்தாக்குகள், சில சமயங்களில் இவை கண்டத்திட்டுகளிலும் நீண்டு காணப்படும்.
கடலடிக் குடைவுப் பள்ளத்தாக்குகள் நதிமுகத்துவாரங்களுக்கு அருகிலும் காணப்படும். அமெரிக்காவின் ஹட்சர் நதி முகத்துவாரம், காங்கோ நதி முகத்துவாரம் இதற்கு எடுத்துக்காட்டுகள். நதிகள் கடலில் கொண்டு வந்து சேர்த்த மண், இதர பொருட்களைக் கடலடி நீரோட்டங்கள் அடித்துச் சென்றதனால் இக்குடைவுப் பள்ளத்தாக்குகள் ஏற்பட்டிருக்கலாம்.
ஆழ்கடல் பகுதி என்பதில் ஒளியே இல்லாமல் இருட்டாய் இருக்கும். கடல் நீர் மிகக் குளிர்ச்சியாக, சமநிலமாக இல்லாமல் இருக்கும். ஆழ்கடலின் அடித்தளத்தில் சமவெளிகள், பள்ளத்தாக்குகள், ஆறுகள் முதலியவை உள்ளன.
சுமார் ஒரு மைல் ஆழம் உள்ள சேறு மாதிரிப் படிவுகள் கடலின் அடித்தளத்தில் உள்ளன. மடிந்த கடல்வாழ் உயிரினங்கள், மக்கிப் போன கடல் தாவரங்கள், நதிகள், ஆறுகள் கொண்டுவந்து சேர்த்த வண்டல் ஆகியவையே இச்சேறு மாதிரியான படிவுகள். இவ்வாறு ஆண்டுதோறும் 500 கோடி டன் வண்டலை ஆறுகள், நதிகள் கொண்டு வந்து சேர்க்கின்றனவாம்.
கடலடியில் அனேகமாக செங்குத்தான மலைகள் உள்ளன. அசன்ஷன் தீவுகள், அஜோர்ஸ் தீவுகள் ஆகியன கடலடி மலைகளின் உச்சிகளே. கடலுக்கு அடியில் 10,000 மைல் நீளத்திற்குச் சங்கிலித் தொடர்போல் மலைகளும், வங்காள விரிகுடாவில் 4 மைல் அகலம், 300 அடி ஆழத்துக்குக் கடலடி ஆறுகள் உள்ளன. இவ்விதம் சுமார் 20 ஆறுகள் உள்ளனவாம்.
அந்தமான் தீவுகள் அருகே 1,700 மைல் நீளமும் 25 மைல் அகலமும் கொண்ட பள்ளத்தாக்கு உள்ளது. பிற இடங்களிலும் இவ்வாறு பள்ளத்தாக்குகள் உள்ளன. சில இடங்களில் இதன் ஆழம் சுமார் 3 மைல்.
கடல்களில் மிக ஆழமான இடங்கள் கடலுக்கு அடியில் உள்ள அகழிகள் ஆகும். இந்த அகழிகள் குறுகலானவை. நீளமானவை. கடலடி அகழிகளின் ஆழம் கடலின் சராசரி ஆழத்தைவிட இரு மடங்கு ஆகும். இந்த அகழிகளின் ஆழத்துடன் ஒப்பிட்டால் உலகின் கடல்களின் சராசரி ஆழம் 12,556 அடி.
அதாவது இரண்டரை மைல். பிலிப்பைன்சுக்குக் கிழக்கே உள்ள மின்டானாவோ அகழியில் அமைந்துள்ள குக்மடு தான் உலகின் கடல்களில் மிக ஆழமான இடமாகும். இதன் ஆழம் 37,782 அடி. அதாவது சுமார் 7 மைல். குக்மடுவில் எவரெஸ்ட் சிகரத்தை இறக்கினால் அச்சிகரம் மூழ்கி அதற்கு மேலும் பல ஆயிரம் அடிக்குத் தண்ணீர் நிற்கும். ஏனெனில், எவரெஸ்டின் உயரம் 29,028 அடி.