தெரியுமா?
நிறங்களால் மிளிரும் கேனோ கிர்ஸ்டல் ஆறு
ஆறுகளைப் பார்த்திருப்பீர்கள். சிலர் ஆற்றில் குளித்து இன்புற்றிருக்கவும் செய்வீர்கள். வண்ணக் கலவைகளைத் தெளித்ததைப் போல பல வண்ணங்களில் ஓடும் ஆற்றினைப் பார்த்தால் மகிழ்ச்சியாகத் தானே இருக்கும்.
கொலம்பியா நகரில் துரானியா டி லா மெகாரினா என்னும் பகுதியில் ஓடும் வண்ண ஆற்றிற்கு கிரிஸ்டல் ஆறு என்று பெயர். ஆற்றின் மேல்பகுதி பச்சை, மஞ்சள், கருப்பு, நீலம் ஆகிய நிறங்களையும் தரைப் பகுதி சிவப்பு நிறத்தினையும் கொண்டு காட்சியளிக்கிறது.
வண்டல் மண்ணால் சூழப்பட்ட இந்த ஆற்றின் அடிப்பகுதியில் சிவப்பு நிறத் தாவரங்கள் நிறைய வளர்ந்துள்ளன. இந்தத் தாவரங்களின் நிறமே சிவப்பு நிறமாகத் தெரிவதற்குக் காரணம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வண்டல் மண் மிகுதியாக உள்ளதால் மீன்கள் இங்கு இருப்பதில்லை.
தண்ணீரின் அடியிலிருக்கும் சிவப்பு நிறத் தாவரங்களின் நிறம் நீரினால் அடித்துச் செல்லும் போது, கருமை நிற வண்டல் மண்ணுடன் கலந்து பல நிறங்களில் தோற்றமளிக்கிறது. ஜூலை மாதப் பிற்பகுதியிலும் டிசம்பர் மாத முற்பகுதியிலும் பல நிறங்களில் வளைந்து நெளிந்து ஓடும் ஆற்றின் அழகைக் கண்டு ரசிக்கலாம்.
900 கோடி ரூபாய் ஓவியம்
பிரான்சிஸ் பேகான் பிரபலமான ஓவியர். பிரிட்டனைச் சேர்ந்தவர். இவரது நண்பர் லூசியான் பிராய்டை மாதிரி(மாடல்)யாகக் கொண்டு 1969ஆம் ஆண்டு மூன்று ஓவியங்கள் வரைந்துள்ளார். மூன்று கோணங்களில் வரையப்பட்ட இந்த ஓவியமே பேகான் வரைந்ததிலேயே மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது.
இந்த ஓவியத்தை ஏலம் விடுவதற்காக நியூயார்க் ஏல மய்யத்திற்குக் கொண்டுவரப் பட்டது. 85 மில்லியன் டாலருக்கு ஏலம் கேட்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. 80 மில்லியன் டாலரில் ஏலத்தொகை ஆரம்பித்து, விறுவிறுவென உயர்ந்து 127 மில்லியன் டாலருக்கு ஏலம் எடுக்கப்பட்டது.
6 நிமிடத்திலேயே விற்கப்பட்ட இநத் ஓவியத்தின் மதிப்பு கமிசன் தொகையுடன் சேர்த்து 142.4 மில்லியன் டாலர் ஆகும். இந்திய ரூபாயில் சொன்னால் சுமார் 900 கோடி ரூபாய் ஆகும். உலகில் அதிக ரூபாய்க்கு விற்கப்பட்ட ஓவியம் என்ற சிறப்பினையும் பெற்றுள்ளது.
2013ஆம் ஆண்டு எட்வர்டு முஞ்ச் வரைந்த ஓவியம் 119.9 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டதே அதிகபட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.