முட்டுக்கட்டை
நீ எந்தக் கல்லூரியில சேரப் போற? என நண்பர்கள் ஒவ்வொருவரிடமும் கேட்டுக் கொண்டிருந்தான் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பாலா. ஒவ்வொருவரும் ஒவ்வொரு கல்லூரியைக் கூறிக் கொண்டிருந்தனர். இறுதியாக அய்ந்து பேர் மட்டும் அரசினர் கலைக் கல்லூரியில் சேருவதென முடிவெடுத்தனர். அதில் பாலாவும் இணைந்து கொண்டான்.
டேய்! விண்ணப்பத்தை எழுதி அனுப்புறதுக்கு, அடுத்த மாதம் 10ஆம் தேதிதான் கடைசி நாள். சீக்கிரம் நிரப்பி அனுப்பிடணும்டா என்று சொல்லி நண்பர்களிடம் விடைபெற்று வீடு வந்து சேர்ந்தான் பாலா.
அப்பா அம்மாவிடம் கூறினான். எந்தக் கல்லூரி? எந்தப் பாடம்? என்னைக்குச் சேரணும்னு நீயே முடிவெடுத்தா எப்படி? நம்ம ஜோசியரை ஒரு வார்த்தை கேட்கணுமில்ல, என்ன மரகதம் நான் சொல்றது? என்றார் அப்பா.
ஆமாங்க. நமக்குக் கல்யாணப் பொருத்தம் பார்த்து, நம்ம வீடு கட்டுறதுக்கு நாள் குறிச்சி… எல்லாவற்றையும் கூட நின்று நடத்தி வைச்சதே நம்ம ஜோசியர்தானே? அவரக் கேட்காம எதையும் செய்யக்கூடாது, செய்யவும் மாட்டோமே என பாலாவின் அம்மாவும் சேர்ந்து கொண்டார்.
அம்மா இது என்னோட படிப்பு சம்பந்தப்பட்டது. இதுக்குப் போய் ஜோசியரைக் கேட்கணும்னு சொல்றீங்களே? என்றதும், உனக்கு ஒன்னும் தெரியாது. நீ போய் உன் வேலையைப் பாரு. என்று சொல்லிவிட்டு அறைக்குள் சென்றுவிட்டார் பாலாவின் தந்தை. சில நாள்கள் சென்றபிறகும் கல்லூரியைப் பற்றிய பேச்சை எடுக்காததால் அப்பா! என்னப்பா ஆச்சு என்னோட படிப்பு!
பொறுடா! கல்லூரி எங்கேயும் ஓடிப்போயிடாது. நல்ல நாளா பார்க்க வேண்டாமா? விண்ணப்பத்தை நம்ம ஜோசியர் சொன்ன நாள்ல வாங்கி வந்துட்டேன்.
அப்ப நிரப்பிப் போட்டுட வேண்டியது தானே அப்பா. இருடா! அவசரப்படாதே! வெள்ளிக்கிழமைதான் நல்ல நாளாம். அப்பதான் போடணுமாம். அதுவும் 10.30லிருந்து 12.00 மணிவரைக்கும் இராகு காலம். 3.00 மணியிலிருந்து 4.30 வரைக்கும் எமகண்டம். அதனால அதற்கு இடைப்பட்ட நேரத்திலதான் போடணும்னு சொல்லிட்டாரு என்றார்.
அப்பா 10ஆம் தேதி வியாழக்கிழமை வருது. அன்னைக்குத்தான் கல்லூரிக்கு விண்ணப்பம் அனுப்ப கடைசி நாள். நீங்கள் அதற்கு மறுநாள் போடணும்னு சொல்றீங்களே. அட! ஒருநாள்ல ஒன்னும் ஆயிடாது. எப்படியும் நாள அதிகப்படுத்துவாங்க என்றார் அப்பா.
அப்பாவிடம் பேசிப் பயனில்லை என்பதை உணர்ந்து, வீட்டில் நடந்ததை ஒன்றுவிடாமல் வருத்தத்துடன் நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டான்.
கவலைப்படாதே பாலா, நீயும் கல்லூரியில சேரணும். அதே சமயத்துல உங்க அப்பா அம்மாவும் திருந்தணும். ஒரே கல்லுல ரெண்டு மாங்காய அடிக்கணும் என்றான் இளம்பரிதி. பரிதி! நீ சொல்றது எதுவுமே எனக்குப் புரியலயே.
காது கொடு! சொல்றேன்… என நண்பர்களிடம் தனது யோசனையை விரிவாகச் சொன்னான்.
ஆமாம்டா! இது மிகவும் பயனான யோசனை. அப்படியே செய்யலாம்டா என்றான் கதிர்.
நானும் என் பங்குக்கு என்ன செய்யமுடியுமோ, அதைச் சரியாகச் செய்றேன்டா என்றான் மனோகர். அது இல்லடா! அம்மா அப்பாவ ஏமாத்தணுமான்னு… இழுத்தான் பாலா.
இல்ல பாலா! இது ஏமாத்து வேல இல்ல. அவங்களுக்கு உணர்த்துற வேலை. கண்டிப்பா நாம அதைச் செய்றோம். என்றான் இளம்பரிதி. அனைவரும் கட்டை விரலை உயர்த்திக் காட்டினர்.
பாலா! பாலா! என அழைத்தார் பன்னீர்செல்லம்.
என்னப்பா, அந்தக் கல்லூரியில நம்ம ஜோசியர் சொன்ன நாள்ல விண்ணப்பத்தைப் போட்டுட்டு வந்துட்டேன். இப்ப மகிழ்ச்சிதானே எனக் கேட்டார்.
அப்பா விண்ணப்பம் போட வேண்டிய நாள் நேற்று மாலை 5.00 மணிவரைக்கும்தான். நீங்க இன்னைக்குப் போட்டிருக்கீங்க!… ஒரு நாள்ல ஒன்னும் ஆயிடாது. உனக்குக் கண்டிப்பா கல்லூரியில இடம் கிடைக்கும். கவலைப்படாதே.
இருவாரம் கழிந்தது. அப்பா எங்க நண்பர்களுக்-கெல்லாம் கல்லூரியில சேரச் சொல்லி கடிதம் வந்திடுச்சாம். நம்ம பரிதி, கட்டணமே கட்டிட்டானாம். எனக்கு இதுவரைக்கும் கடிதமே வரலை என வருத்தத்துடன் கூறிக்கொண்டிருந்த போது… வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது.
வெளியில் நின்றிருந்த பாலாவின் நண்பர்கள் எல்லோரும் உற்சாகமாக தங்களுக்குக் கல்லூரியில் இடம் கிடைத்துவிட்டதை பாலாவின் அப்பாவிடம் கூறினர்.
பாலாவிற்குக் கடிதமே வரலை. அதற்கு எங்களோட அறியாமைதான் காரணமாயிடுச்சு. எங்கள மன்னிச்சுடு பாலா! உன் படிப்பை வீணாக்கிட்டோம். உன் எதிரில நாங்க குற்றவாளியாகிட்டோம் என்றார் பன்னீர்செல்வம் உடைந்த குரலில்..
அப்பா! நீங்களும் எங்களை மன்னிக்கணும். என்றனர் பாலாவும் நண்பர்களும். புரியாமல் விழித்தார் பன்னீர்செல்வம்.
ஆமாம்பா! உங்களைத் திருத்தணும்னு நினைச்சோம். அதனால பாலாவோட விண்ணப்பத்தை நிரப்பி, தந்தை பெரியார் வீதியில இருக்கிற எங்க முகவரியைப்போட்டு கல்லூரிக்கு அனுப்பி இருந்தோம்.
அந்தக் கல்லூரியில பாலா சேருவதற்கான அழைப்புக் கடிதமும் வந்திடுச்சு. கட்டணம் கட்ட இன்னும் ஒரு வாரம் இருக்கு, கவலைப்படாதீங்க. உங்கள ஏமாத்தற நோக்கத்துல இதச் செய்யல. தவறு இருந்தா எங்களை மன்னிச்சுடுங்க… என்றான் இளம்பரிதி.
திறந்திருந்த ஜன்னலில் காற்று வேகமாக வீச, எதிரில் இருந்த காலண்டர் படபடத்ததில்,
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல் என்னும் திருக்குறள் பன்னீர் செல்வத்திற்குப் பாடமாக கண்முன்னே வந்து சென்றது.