செம்மலை சிகரம்
பச்சைப் பசேலென்று விண்ணைத் தொட்டது போன்ற மலைகளினூடே மேகங்கள் கலந்து செல்வதைப் போல காட்சியளிக்கும் மலைகளைப் பார்த்திருப்போம். அல்லது பனிப் பொழிவினால் மூடியிருக்கும் மலைகளைப் பார்த்திருப்போம். ஆனால், இந்த மலை கொஞ்சம் வித்தியாசமானது.
அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் கடல் மட்டத்திலிருந்து 3 ஆயிரம் அடி முதல் 6 ஆயிரம் அடி உயரத்தில் சிவப்பு நிறத்தில் ஒரு மலை காணப்படுகிறது. எரிமலைப் பாறைகளில் அதிக அளவில் காணப்படும் இரும்பு ஆக்சைடே சிவப்பு நிறமாகத் தோற்றமளிக்கக் காரணம் என்றும், இந்தச் செம்மலை பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
இந்த மலைகளில் காணப்படும் குகைகளில் நிறைய ஓவியங்கள் உள்ளன. 1776ஆம் ஆண்டு இப்பகுதிக்கு வந்த ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கிறித்தவ சமயப் பிரச்சாரகர்கள் இந்த மலையை வெளி உலகிற்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.
செம்மலைப் பகுதியில் போதிய அளவு சாலை வசதி இல்லாததால் மனிதர்கள் இன்னும் குடியேறவில்லை. மான்கள், பூமா (Puma) இனப் பூனைகள், பாலைவனச் செம்மறி ஆடுகள் போன்ற விலங்குகள், மில் வீட் போன்ற அரிய வகைத் தாவரச் செடி, 20 வகையான பருந்துகள் காணப்படுகின்றன.
2.9 லட்சம் ஏக்கர் அளவு கொண்ட இடத்தை அமெரிக்க அரசாங்கம் 2000ஆம் ஆண்டு தேசியப் பூங்காவாக அறிவித்தது. தூரத்திலிருந்து பார்க்கும்போது சிவப்புச் சேலையினை மலைமீது போர்த்தியது போன்ற தோற்றமளிக்கிறது.