புத்தகப் பிரியை ஃபெயித்
பிஞ்சுகளே, உங்களில் எத்தனை பேர் பாடப் புத்தகங்கள் தவிர பிற புத்தகங்களைப் படிப்பதில் ஆர்வம் காட்டுகிறீர்கள். தொலைக்காட்சி, கணினிக்குச் செலவிடும் நேரத்தில் ஒரு பகுதியையாவது புத்தகங்கள் படித்து நிறையத் தகவல்களைத் தெரிந்து கொள்வதிலும் செலவு செய்ய வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார் ஃபெயித் என்னும் சிறுமி.
பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்ததிலிருந்து புத்தகங்களைப் படிப்பதில் ஆர்வம் காட்டுகிறார் பிரிட்டனின் செஷைர் பகுதியில் உள்ள ஆஷ்லே கிராமத்தைச் சேர்ந்த 9 வயதுச் சிறுமி ஃபெயித். 7 மாதங்களில் 364 புத்தகங்களைப் படித்து அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பது மற்றும் கணினியில் விளையாடுவதால் கற்பனைத் திறன் எந்த அளவுக்கு ஊக்குவிக்கப்படுகிறதோ, அந்த அளவுக்குப் புத்தகங்களைப் படிப்பதாலும் சுயமாகச் சிந்திக்கும் திறன் அதிகரிக்கும் என்று இவரது தாய் லாரன் கூறியுள்ளார்.
விலங்குகள், மேஜிக் அல்லது வீரச் செயல்களைக் கொண்ட கதாபாத்திரங்களுடன் கூடிய புத்தகங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அதே நேரம் புத்தகம் படிப்பது மட்டுமே எனது வாழ்க்கை அல்ல.
வாரத்திற்கு 4 மணி நேரம் ஜிம்னாஸ்டிக் பயிற்சியில் ஈடுபடுகிறேன். கராத்தே பயிற்சி, வலைப்பந்து மற்றும் டிரம் உள்ளிட்ட விளையாட்டுகளில் ஈடுபடுகிறேன் என்று கூறியுள்ளார் ஃபெயித்.