மணியம்மையார் பொன்மொழிகள்
பாரதியாரின் கவிதைகளில் நாட்டுப்பற்று, இனப்பற்று, மொழிப்பற்று, கலைப்பற்று, கடவுள்பற்று பற்றிய பாடல்களில் ஆரியப்பற்றே காணப்படுகிறது.
தமிழர்க்கு மானம் இருந்தால், தமிழ்நாடும், தமிழ்மொழியும் இழிநிலையையும், ஆரியர் ஆதிக்கம் உயர்நிலையையும் அடையுமா?
நம் இழிவைப் போக்க அல்லும் பகலும் அயராது உழைத்து, மக்களுக்குப் பகுத்தறிவைப் போதித்து, பெரியாரின் கொள்கை பரப்பித் தொண்டு செய்வதே, நம் வாழ்நாள் லட்சியமாகும்.
நம்முடைய பொருளாதார இழிவும், நமக்கு நம் நாட்டு உரிமையற்ற தன்மையும் ஒழிந்து நாமெல்லோரும் நலமுற வாழ வேண்டும் என்பதற்காகத்தான் திராவிடர் கழகம் பாடுபட்டு வருகிறது.
பெண்களே! அடுப்பூதும் அணங்குகளாக அடைபட்டுக் கிடக்கும் பெண்டிராகவே காலங்கழிக்கக் கூடாது.
வீட்டிற்குள் சிறைப் பறவையாய் இருந்த பெண்களை, வெளி உலகிற்கு சுதந்திரப் பறவைகளாய்க் கொண்டு வந்தவர்தான் தந்தை பெரியார்.
ஜாதி ஒழிய வேண்டுமென்றால், ஜாதியைக் காக்கும் அரசியல் சட்டப்பகுதி திருத்தப்பட வேண்டியது அவசியம்.
மேல் ஜாதிக்காரர்களான பார்ப்பனர்களில் தொழிலாளர்கள் எவரும் இல்லை. ஆனால், நம் நாட்டு விசித்திரங்களில் ஒன்று _ தொழிலாளர் தலைவர்களாகப் பார்ப்பனர்களே பெரிதும் இருந்து வருவது.
நாம் அணியும் கருஞ்சட்டை _ நம்மைப் பார்த்தவுடன் இவர்கள் சமுதாயத் தொண்டு செய்பவர்கள், மூடநம்பிக்கையை ஒழிப்பவர்கள், ஜாதியை ஒழிப்பவர்கள் என்பதை அடையாளப்படுத்துவதோடு, பெரியாரின் தொண்டர்கள் என்று பாராட்டுவதாக இருக்கட்டும்!
பெண்கள் மூடநம்பிக்கை மீதுள்ள பற்றுதலை முதலில் விட்டொழிக்க வேண்டும். தாங்கள் பெற்று வளர்க்கும் பிள்ளைகளையும் மூட நம்பிக்கையற்றவர்களாக வளர்க்க வேண்டும்.
ஜாதியற்ற சமுதாயம், மூட நம்பிக்கையற்ற சமுதாயம் காண்பதைத் தவிர நமக்கு வேறு லட்சியம் இல்லை என்பது நமக்குத் துணிவும், தெளிவும் தரும் கொள்கைக் கவசங்கள்.
எதனையும் இலவசமாக சும்மா பெறுவதைவிட விலை கொடுத்துப் பெறுவது மதிப்பும், மரியாதையும் வாய்ந்தது.
கடவுளின் பெயராலும், மதத்தின் பெயராலும், சாஸ்திர சம்பிரதாயங்களின் பெயராலும் அறிவு ஆயுள் கைதியாக அடைக்கப்பட்டிருக்கிறது.