கார்ட்டூன் பார்ப்பது தவறா?
– சிகரம்
தொலைக்காட்சி! பெயருக்கு ஏற்ப பலதை இதில் தொலைக்கின்றோம். நேரத்தைக் தொலைக்கின்றோம்; பார்வையைத் தொலைக்கின்றோம்; பணிகளைத் தொலைக்கின்றோம்; பாசத்தைத் தொலைக் கின்றோம்; பாதுகாப்பைத் தொலைக்கின்றோம்; பண்பாட்டைத் தொலைக்கின்றோம்; பணத்தைத் தொலைக்கின்றோம் _ விளம்பர ஈர்ப்பில்; நலத்தைத் தொலைக்கின்றோம். பிஞ்சுகளாகிய நீங்களோ இளமையையே தொலைக்கின்றீர்கள்.
பள்ளிக்கூடத்தில் செலவிடும் நேரம் போக, பல பிஞ்சுகள் தங்கள் நேரத்தைக் கார்ட்டூன் காண்பதிலே தொலைக்கின்றனர். அது ஒரு போதையாகவே அவர்களுக்கு ஆகி, அதில் மூழ்கி, அதற்கே அடிமையாகிக் கிடக்கின்ற அவலம் அனைத்து வீடுகளிலும் காணப்படுகிறது.
தொலைக்காட்சி பார்ப்பது தப்பா? அதில் நன்மை இல்லையா? இக்கேள்விகள் உங்களுக்கு எழும்.
தொலைக்காட்சி பார்ப்பது தப்பல்ல. கார்ட்டூன் காட்சிகளையே மணிக்கணக்கில் பார்த்துக் கொண்டிருப்பதுதான் தவறு. அது நம் நேரத்தையும் கெடுத்து, கண்ணையும் கெடுக்கும்.
ஆர்வம் இருப்போர் லு மணி நேரம் பார்க்கலாம். அதுதான் அளவு. எந்த ஒன்றிலும் அதிகம் மூழ்கினால் நாம் அதற்கு அடிமைப்பட்டோம் என்பதே அர்த்தம்.
படிப்பு, விளையாட்டு, ஆடல், பாடல், காணல், களித்தல் எல்லாம் அளவோடு, அதற்குரிய நேரத்தில் அமைவதே சரி! உகந்தது! நல்லது!
உடலுக்கு ஊட்டம் கிடைக்க கலப்புணவு கட்டாயம். அவ்வாறே, அறிவுக்கும், மகிழ்விற்கும், நலத்திற்கும் கலப்பு உணர்வு கட்டாயம். மனிதன் பல்வேறு உணர்வுகள் உடையவன். அத்தனைக்கும் தீனிபோட வேண்டும். ஒன்றிலே ஒன்றுதல் உன்மத்த நிலையாகும் _ பைத்திய நிலையாகும்.
தொலைக்காட்சியை, இணையத்தை சரியாகப் பயன்படுத்தினால், அது ஆற்றல் வளர்க்கும்; அறிவு வளர்க்கும்; சிந்தனை வளர்க்கும்; திறமை வளர்க்கும். ஆனால், அதில் ஏதாவது ஒன்றுக்கு அடிமையானால் கேடே பயக்கும்; கிறுக்கே பிடிக்கும்!
தொலைக்காட்சியிலும், இணையத்திலும் நல்லவையும் உண்டு; தீயவையும் உண்டு. பயனுள்ளவற்றைத் தேர்வு செய்து காண்பது அறிவிற்கு அழகு; சிறப்பிற்கு வழி! உயர்விற்கு உந்தும்!
கார்ட்டூன் காண்பதிலே நாள் முழுக்க அமர்ந்தால், நம் மூளை கெடுவதோடு _ அடிமையாவதோடு, கண்ணும் கெடும், நாம் செய்ய வேண்டிய பிற பணிகளும் கெடும். பெரியவர்கள் கார்ட்டூன் சேனல் வராமல் செய்வது மிகவும் நல்லது.
ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பதால், உடல் நலமும் கெடும்; மனநலமும் கெடும். உடல் பருமன், சர்க்கரை நோய், மூட்டுவலி போன்றவை சிறு வயதிலே வரும்.
தொலைக்காட்சி காண 1லு மணி நேரம் ஒதுக்கினால், அதில் கார்ட்டூன் 15 நிமிடம், விளையாட்டு 15 நிமிடம், செய்தி 10 நிமிடம், இயற்கைக் காட்சிகள் 10 நிமிடம், இசை 10 நிமிடம், கல்வி சார்ந்தவை 30 நிமிடம் என்று காண வேண்டும்.
வீட்டில் ஒரு தொலைக்காட்சிப் பெட்டி. பலபேர் பார்ப்பர். நமக்கு விருப்பமானதையே பார்த்துக் கொண்டிருந்தால் மற்றவர்கள் பார்க்க முடியாது. எனவே, கலந்துபேசி, நேரம் ஒதுக்கிப் பார்ப்பது எல்லோருக்கும் உதவும்; சிக்கலைத் தவிர்க்கும்.
படுத்துக்கொண்டு தொலைக்காட்சியைப் பார்க்கக் கூடாது. தொலைக்காட்சி திரையைப் போன்று 5 மடங்கு தூரத்திற்கு அப்பாலிருந்து பார்க்க வேண்டும். அருகிலிருந்து பார்க்கக் கூடாது. இரவு வேளையில் மின் விளக்கொளியில் தொலைக்காட்சி பார்க்க வேண்டும். இருளில் பார்க்கக் கூடாது.
கண் என்பது நம் உறுப்புகளில் முதன்மையானது. தேவையற்று தொலைக்காட்சி முன்னும், கணினி முன்னும் காண்பது, கண்ணுக்கும் கேடு, காலத்திற்கும் கேடு. இன்றைய பிஞ்சுகள் இளம் வயதிலே கண்ணாடி அணிவதற்கு இதுவும் காரணம்.
தொலைக்காட்சியில் இசை கேட்கும்போது, செய்தி கேட்கும்போது காதால் மட்டும் கேட்டால் போதும். கண்ணைப் பாதுகாக்க உதவும்.