உலகப் புத்தக நாள் : ஏப்ரல் 23 : உலகப் பெரும் நூலகங்கள் 10
சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரின் அறிவுத் தேடலுக்கும் பயன்படுபவை நூலகங்கள். கிராமங்கள், நகரங்களுக்கேற்ப நூலக அமைப்பும் நூல்களின் எண்ணிக்கையும் இருக்கும். உலக அளவில் மிகப் பெரிய அளவில் திகழ்ந்து அறிவுப் பசிக்கு விருந்தளித்து வரும் நூலகங்களைத் தெரிந்து கொள்வோம்.
பிரிட்டிஷ் நூலகம்
1753ஆம் ஆண்டு கட்டப்பட்டது. லண்டனில் (பிரிட்டன்) உள்ளது. நூல்கள், பிற மொழி நூல்கள், கையெழுத்துப் பிரதிகள், மாத, வார, நாளேடுகள், இசை வெளியீடுகள்… என 15 கோடியே 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொகுப்புகள் இடம் பெற்றுள்ளன.
லைப்ரரி ஆஃப் காங்கிரஸ்
அமெரிக்கக் காங்கிரசால் 1800ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நூலகம் வாஷிங்டனில் உள்ளது. அய்க்கிய அமெரிக்காவின் தேசிய நூலகமாகத் திகழும் இதில் சுமார் 15 கோடிக்கும் அதிகமான தொகுப்புகள் உள்ளன.
நியுயார்க் நூலகம்
1895இல் அமெரிக்காவின் நியுயார்க் நகரத்தில் நிறுவப்பட்டது. இங்கு சுமார் 5 கோடியே 31 லட்சம் நூல்கள் இடம் பெற்றுள்ளன.
ரஷ்யன் ஸ்டேட் நூலகம்
1862ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த நூலகம் ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ளது. 247 மொழிகளில் புத்தகங்கள் இடம் பெற்றிருப்பது இந்நூலகத்தின் சிறப்பாகும். சுமார் 4 கோடியே 44 லட்சம் நூல்களைக் கொண்டுள்ளதுடன் இசை மற்றும் பல வசதிகளையும் பெற்றுத் திகழ்கிறது.
நேஷனல் லைப்ரரி ஆஃப் ரஷ்யா
1795ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்நூலகம் ரஷ்யாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க் என்னுமிடத்தில் உள்ளது. இங்கு சுமார் 3 கோடியே 65 லட்சம் நூல்கள் உள்ளன.
நேஷனல் டயட் லைப்ரரி
1948ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நூலகம் ஜப்பானின் டோக்கியோ நகரில் அமைந்துள்ளது. 3 கோடியே 56 லட்சம் நூல்கள் இடம் பெற்றுள்ளன.
டோரன்டோ பப்ளிக் லைப்ரரி
1884ஆம் ஆண்டு கனடாவின் டோரான்டோ நகரில் தொடங்கப்பட்ட இந்நூலகம் 3 கோடியே 20 லட்சம் நூல்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது.
நேஷனல் லைப்ரரி ஆஃப் சீனா
சீன நாட்டில் பீஜிங் நகரத்தில் 1909ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 3 கோடியே 12 லட்சம் புத்தகங்கள் இங்கு உள்ளன.
பைப்லோதிகு நேஷனல் தி பிரான்ஸ்
பிரான்சின் பாரிஸ் நகரில் 1461ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்நூலகத்தில் 3 கோடியே 10 லட்சம் புத்தகங்கள் உள்ளன.
ராயல் டேனிஷ் லைப்ரரி
1648ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்நூலகம் டென்மார்க் நாட்டின் கோபன்ஹேகன் நகரில் 3 கோடிக்கும் மேற்பட்ட புத்தகங்களுடன் செயல்பட்டு வருகிறது.