அடிப் பந்தாட்டம்(Base Ball)
மட்டை மற்றும் பந்தினை வைத்து விளையாடும் விளையாட்டு அடிப் பந்தாட்டம். பிரிட்டன் மற்றும் அயர்லாந்தில் புகழ்பெற்றது. இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவுக்குக் குடியேறியவர்களால் இந்த விளையாட்டு அங்கு கொண்டு செல்லப்பட்டது.
1791இல் பிட்ஸ்பீல்டு, மாசாசூசெட்ஸ் ஆகிய இடங்களில் விளையாடப்பட்டது. அமெரிக்காவில் Town Ball, Round Ball மற்றும் Base ball என்ற பெயர்களால் அழைக்கப்பட்டது. இரண்டு அணிகள் மோதும் இவ்விளையாட்டில் ஒவ்வொரு அணியிலும் தலா 9 பேர் விளையாடுவர்.
ஆடுகளம்
அடிப் பந்தாட்டத்தின் ஆடுகளம் சிறிது முக்கோண வடிவத்தில் அமைந்திருக்கும். அதன் கூர்முனையில் டைமண்ட் வடிவிலான சதுரம் காணப்படும். முக்கோணத்தின் கூர்முனையில் பந்தை அடிப்பவர் கையில் மட்டையுடன் நிற்பார். டைமண்ட் சதுரத்தின் நடுவில் நின்று பந்தை எறிபவர் பேட் செய்பவரை நோக்கி பந்தினை வீசி எறிவார்.
முக்கோணத்தின் கூர்முனையில் நின்று பந்தினை அடிக்கும்போது, அந்த இடத்திலிருந்து விரிந்து செல்லும் முக்கோணத்தின் இருபக்கக் கோட்டிற்கு வெளியில் செல்லாமல் அடிக்க வேண்டும். இப்படி அடித்துவிட்டு டைமண்ட் சதுரத்தை இடப்புறமாகச் சுற்றி ஓடுவதற்கு ரன் என்று பெயர்.
மட்டையும் பந்தும்
மட்டை உருட்டுக் கட்டை போன்ற வடிவத்தில் 42 இன்ச் நீளம் வரை கொண்டதாக இருக்கலாம். பந்தின் மய்யத்தில் கார்க், அதனைச் சுற்றி நூல், வெளிப்புறத்தில் மாட்டுத்தோல் என்று கிரிக்கெட் பந்தைப் போல பெரிய அளவில் இருக்கும்.
பந்தைப் பிடிக்க வசதியாக ஒரு கையில் பெரிய அளவிலான கையுறை அணிந்திருப்பார்கள். மேலெழும்பி வரும் பந்தைப் பிடிப்பதற்கு ஏதுவாக இந்தக் கையுறையில் ஆள்காட்டி விரலுக்கும், கட்டை விரலுக்கும் நடுவே வலை பின்னப்பட்டிருக்கும்.
பந்தை அடிக்கும் மட்டையாளர் தலைக்கவசம் அணிந்திருப்பார். மட்டையாளருக்குப் பின்னால் நின்றுகொண்டு பந்தினைப் பிடிப்பவர் தலை, மார்பு, கால் ஆகியவற்றிற்கும் கவசம் அணிந்திருப்பார். மட்டையில் பட்டு எழும்பி வரும் பந்தைத் தரையில் படுவதற்கு முன் பிடித்தால் பந்தை அடிப்பவர் வெளியேறிவிட (Out) வேண்டும்.
மேலும், அடிப்பவரின் தோளுக்கும் முழங்காலுக்கும் இடைப்பட்ட உயரத்தில் தொடர்ந்து 3 முறை எறியப்பட்ட பந்து அடிபடாமல் தாண்டிச் செல்லுதல், அவ்வாறு மூன்றாம் முறை எறியப்பட்ட பந்து மட்டையில் பட்டு முக்கோணக் கோட்டிற்கு வெளியே செல்லுதல் (ஃபவுல் பகுதி) பந்தை மட்டையினால் இரண்டு முறை அடித்தல் போன்ற இந்த வழிகளில் ஒரு அணியின் 3 மட்டையாளர்கள் வெளியேற்றப்படுவது (Out) ஓர் இன்னிங்ஸ் எனப்படும். ஒரு ஆட்டத்திற்கு 9 இன்னிங்ஸ் ஆட வேண்டும்.